இந்திய A அணியுடனான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை A அணி தோல்வி நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.
நான்கு நாட்கள் கொண்ட இந்த போட்டியின மூன்றாவது நாளான இன்று 430 ஓட்ட வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை A அணி ஆட்ட நேர முடிவின்போது 210 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. பானுக்க ராஜபக்ஷ இலங்கை A அணி சார்பாக சதம் ஒன்றைப் பெற்றார்.
ஹுப்லி, நெஹ்ரு அரங்கில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் இந்திய A அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 269 ஓட்டங்களை பெற்றதோடு இலங்கை A தனது முதல் இன்னிங்ஸில் 212 ஓட்டங்களை குவித்தது.
இந்நிலையில் மூன்றாவது நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய A அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 372 ஓட்டங்களைப் பெற்றது. பின்வரிசை வீரர் ராகுல் சஹார் 84 ஓட்டங்களையும் ஜயன்ட் யாதவ் 53 ஓட்டங்களையும் பெற்றதே அந்த அணியின் ஓட்டங்கள் அதிகரிக்கக் காரணமாகும்.
>>இலங்கை A அணிக்கு எதிரான டெஸ்ட்டில் வலுவான நிலையில் இந்திய A அணி
இந்த இருவரும் இணைந்து 8 ஆவது விக்கெட்டுக்காக 123 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது இலங்கை A அணி சார்பில் விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்த லக்ஷான் சந்தகன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் கடினமான வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை A அணி 34 ஓட்டங்களுக்கு முதல் இரு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தபோதும், ஒருமுனையில் தனித்து திறமையை வெளிப்படுத்திய பானுக்க ரஜபக்ஷ 112 பந்துகளில் 17 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 110 ஓட்டங்களை பெற்றார்.
எனினும் மத்திய வரிசை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததால் இலங்கை A அணி நெருக்கடிக்கு முகங்கொடுத்தது.
இதன்படி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இலங்கை A அணி இன்னும் 3 விக்கெட்டுகளே எஞ்சியிருக்கும் நிலையில் வெற்றி பெறுவதற்கு மேலும் 220 ஓட்டங்களைப் பெறவேண்டிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் அரைச்சதம் பெற்ற கமிந்து மெண்டிஸ் 33 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். நாளை (3) நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடரும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<