தோல்வியுறாத அணியாக லீக் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை A கிரிக்கெட் அணி

Sri Lanka A vs Afghanistan A - Tri Series 2025

2
Sri Lanka A vs Afghanistan A - Tri Series 2025

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்ற முக்கோண ஒருநாள் தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில் இன்று (23) இலங்கை A அணியானது ஆப்கான் A அணியினை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.

>>இலங்கை A கிரிக்கெட் அணிக்கு மூன்றாவது தொடர் வெற்றி<<

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை A அணியானது இந்த முக்கோண ஒருநாள் தொடரில் அனைத்து லீக் போட்டிகளையும் வெற்றியுடன் நிறைவு செய்கின்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை, அயர்லாந்து மற்றும் ஆப்கான் ஆகியவற்றின் A கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கும் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை A அணியானது ஆப்கானை இன்று எதிர் கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை A வீரர்கள் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தனர். இதன்படி முதலில் துடுப்பாடிய ஆப்கான் A அணியானது 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களை எடுத்துக் கொண்டது.

ஆப்கான் A அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக அதன் தலைவர் தார்வீஷ் ரசூலி 76 ஓட்டங்கள் பெற்றார்.

இலங்கை A கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் தரிந்து ரத்நாயக்க 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மிலான் ரத்நாயக்க மற்றும் சமிந்து விக்ரமசிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 229 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை A அணியானது போட்டியின் வெற்றி இலக்கினை 39 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களுடன் அடைந்தது.

இலங்கைத்தரப்பின் வெற்றியினை உறுதி செய்த கமில் மிஷார 81 ஓட்டங்கள் எடுக்க, நுவனிது பெர்னாண்டோ அரைச்சதம் விளாசி 51 ஓட்டங்கள் பெற்றார். அதேநேரம் பவன் ரத்நாயக்க 46 ஓட்டங்கள் பெற்று தனது பங்களிப்பினை வழங்கினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை A அணிக்காக சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்திய தரிந்து ரத்நாயக்க தெரிவானார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திளைப் படிக்க<<