இங்கிலாந்து லயன்ஸ் அணியிடம் படுதோல்வியடைந்த இலங்கை A அணி

889
Eng Lions v SL A 4th Day

இன்று நடைபெற்று முடிந்த, சுற்றுலா இங்கிலாந்து லயன்ஸ் அணி மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து லயன்ஸ் அணி 195 ஓட்டங்களினால் அபார வெற்றியினை தன்வசப்படுத்தியுள்ளது.

இவ்வெற்றியின் மூலம், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இங்கிலாந்து லயன்ஸ் அணி முன்னிலையும் பெற்றுள்ளது.

மூன்றாம் நாளில் போட்டியின் கட்டுப்பாட்டினை மேலும் வலுப்படுத்திய இங்கிலாந்து லயன்ஸ் அணி

இரண்டு நாட்களின் முன்னர் (17), பல்லேகலே சர்வதேச மைதானத்தில் ஆரம்பித்து இருந்த இப்போட்டியில், போட்டியின் நேற்றைய மூன்றாம் நாளில் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக 41 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை A அணி போட்டியில் வெற்றி பெற மேலதிகமாக 324 ஓட்டங்கள் தேவைப்பட போட்டியின் இறுதி நாளான இன்று தமது ஆட்டத்தினை தொடர்ந்தது.

இன்றைய நாளில் வீசப்பட்ட, போட்டியின் இரண்டாவது ஓவரில் களத்தில் நின்ற ரொஷென் சில்வா (இன்றைய நாளில்) ஓட்டக்குவிப்பு எதனையும் மேற்கொள்ளாமல் 7 ஓட்டங்களுடன் டொம் குர்ரனின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து (மூன்றாவது விக்கெட்டாக) ஆட்டமிழந்தார். சில்வாவின் விக்கெட்டுடன் மூன்று விக்கெட்டுகளை இழந்த இலங்கை A அணி, கடின இலக்கான 365 ஓட்டங்களை தொடுவது சிரமம் என்பதை உணர்ந்தது.

இதனால், நான்காவது விக்கெட்டுக்காக மைதானம் நுழைந்த இலங்கை A  அணியின் சரித் அசலங்க, போட்டியை சமநிலை அடையச்செய்யும் நோக்கில் பந்துகளை தடுத்தாட தொடங்கினார். ஆனால், அவரின் முயற்சியினை இங்கிலாந்து லயன்ஸ் அணியின் டொம் ஹெல்ம் முறியடிக்க அசலங்க மைதானத்தினை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து, களத்தில் நின்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உதார ஜயசுந்தரவுடன் கைகோர்த்த இலங்கை A அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா கொஞ்ச நேரம் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பந்து வீச்சினை தாக்குப் பிடித்தார். தனஞ்சய டி சில்வாவின் விக்கெட்டினை தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால், ஒரு கட்டத்தில் இலங்கை A அணி 115 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து திண்டாடியது.

எனினும், இறுதி விக்கெட்டிற்காக வந்திருந்த அசித்த பெர்னாந்து 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் பெற்றுக்கொண்ட 30 ஓட்டங்களால், இலங்கை A அணி, 150 ஓட்டங்களை இரண்டாம் இன்னிங்சில் கடந்தது. பெர்னாந்துவின் இறுதி விக்கெட்டுடன், தமது இரண்டாவது இன்னிங்சுக்காக 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இலங்கை A அணி இங்கிலாந்து லயன்ஸ் அணியிடம் படுதோல்வியினை தழுவிக்கொண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில், இறுதி விக்கெட்டுக்காக 54 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெறப்பட்டதுடன், இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்றிருந்த உதார ஜயசுந்தர அரைச்சதம் கடந்து 64 ஓட்டங்களைப் பெற்று, முதலாம் இன்னிங்சில் ஓட்டம் எதுவும் பெறாமல் தான் விட்ட பிழையினை இந்த இன்னிங்சில் சரிசெய்து கொண்டார்.

பந்து வீச்சில் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் தமக்குரிய கடமையினை செவ்வனே நிறைவேற்றி தமது அணியின் வெற்றியினை உறுதிப்படுத்திக்கொண்டனர்.  இதில், டொம் குர்ரன் மற்றும் சேம் குர்ரன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியதோடு சுழல் பந்து வீச்சாளரான ஒல்லி ரெய்னர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.

இத்தொடரில், சொந்த மண்ணில் வைத்து இலங்கை A அணியை தோல்வியடையச் செய்திருக்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணி, இலங்கை A அணியுடன் தம்புள்ளையில் நடைபெறவுள்ள இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) மோதவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து லயன்ஸ் அணி (முதல் இன்னிங்ஸ்) – 316 (80.2) – டொம் வெஸ்லி 97, டொபி ரொலன்ட் ஜோன்ஸ் 82, லியாம் லிவிங்ஸ்ட்ன் 59, மலிந்த புஷ்பகுமார 97/4, அசித்த பெர்னாந்து 31/2

இலங்கை A அணி (முதல் இன்னிங்ஸ்) – 167 (47.4) – சந்துன் வீரக்கொடி 68, தில்ருவன் பெரேரா 37, மலிந்த புஷ்பகுமார 26, டொபி ரொலன்ட் ஜோன்ஸ் 51/4, ஒல்லி ரெய்னர் 27/3

இங்கிலாந்து லயன்ஸ் அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 215 (80.5) – கீட்டன் ஜென்னிங்ஸ் 37, சேம் குர்ரன் 36, ஒல்லி ரெய்னர் 32*, டொம் குர்ரன் 29, தில்ருவன் பெரேரா 73/5,  மலிந்த புஷ்பகுமார 77/4

இலங்கை A அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 169 (58.5) – உதார ஜயசுந்தர 64*, அசித்த பெர்னாந்து 30, சேம் குர்ரன் 21/3, டொம் குர்ரன் 35/3, ஒல்லி ரெய்னர் 53/2

போட்டி முடிவு – இங்கிலாந்து லயன்ஸ் அணி 195 ஓட்டங்களால் வெற்றி