மூன்றாம் நாளில் போட்டியின் கட்டுப்பாட்டினை மேலும் வலுப்படுத்திய இங்கிலாந்து லயன்ஸ் அணி

1339
SL A vs ENg Lions 3rd Day

நடைபெற்றுக்கொண்டிருக்கும், இலங்கை A அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் நிறைவில், இங்கிலாந்து லயன்ஸ் அணி 324 ஓட்டங்களால் முன்னிலை பெற்று, இலங்கை A அணி இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு சவாலான வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

இலங்கை A யின் மோசமான துடுப்பாட்டத்தினால் இரண்டாம் நாளிலும் இங்கிலாந்து லயன்ஸ் ஆதிக்கம்

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவில், 112 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் தனது ஆட்டத்தினை தொடர்ந்த இங்கிலாந்து லயன்ஸ் அணி, பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் சமார்த்தியமான ஆட்டத்தினால் தமது இரண்டாவது இன்னிங்சுக்காக, சகல விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களை குவித்துக்கொண்டது.

இங்கிலாந்து லயன்ஸ் அணியில் பெறுமதிக்க ஓட்டங்களை, பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களான சேம் குர்ரன் (36), டொம் குர்ரன்(29) மற்றும் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களை இறுதி வரை போராடி குவித்திருந்த ஒல்லி ரெய்னர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில், சுழல் பந்துவீச்சாளரான தில்ருவன் பெரேரா மொத்தமாக இங்கிலாந்து லயன்ஸ் அணியின் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்திருந்தார். மறுமுனையில், தனது பங்கிற்கு மலிந்த புஷ்பகுமார நான்கு விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

இதனையடுத்து, தமது முதல் இன்னிங்சில் பெற்றுக்கொண்ட குறைவான ஓட்டங்கள் காரணமாகவும், இங்கிலாந்து லயன்ஸ் அணியின் முதலாம் மற்றும் இராண்டாவது இன்னிங்சுகளின் ஓட்ட முன்னிலை காரணமாகவும் 365 ஓட்டங்கள் என்ற கடின வெற்றி இலக்கு இலங்கை A அணிக்கு  நிர்ணயிக்கப்பட்டது.

இதனை பெறுவதற்காக, பாரிய முயற்சிகள் செய்ய வேண்டிய நிலையில் மைதானத்தில் நுழைந்த இலங்கை A அணி, முதல் பந்திலேயே ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய திமுத் கருணாரத்னவினை ஓட்டம் எதுவும் பெறாமல் பறிகொடுத்தது. LBW முறையில் டொம் குர்ரனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்த கருணாரத்ன இந்த இன்னிங்சிலும் மோசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி ஏமாற்றியிருந்தார். இலங்கை A அணியின் இரண்டாவது விக்கெட்டாக, இந்த இன்னிங்சிலும் சிறப்பாட்டம் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த சந்துன் வீரக்கொடி, 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததார். இதனையடுத்து தமது துடுப்பாட்டத்தினை மேலும் தொடர்ந்த இலங்கை A அணி போட்டியின் ஆட்ட நேர நிறைவில், 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 41 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

களத்தில், உதார ஜயசுந்தர 18 ஓட்டங்களுடனும் ரொஷென் சில்வா 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது உள்ளனர்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து லயன்ஸ் அணி (முதல் இன்னிங்ஸ்) – 316 (80.2) – டொம் வெஸ்லி 97, டொபி ரொலன்ட் ஜோன்ஸ் 82, லியாம் லிவிங்ஸ்ட்ன் 59, மலிந்த புஷ்பகுமார 97/4, அசித்த பெர்னாந்து 31/2

இலங்கை A அணி (முதல் இன்னிங்ஸ்) – 167 (47.4) – சந்துன் வீரக்கொடி 68, தில்ருவன் பெரேரா 37, மலிந்த புஷ்பகுமார 26, டொபி ரொலன்ட் ஜோன்ஸ் 51/4, ஒல்லி ரெய்னர் 27/3

இங்கிலாந்து லயன்ஸ் அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 215 (80.5) – கீட்டன் ஜென்னிங்ஸ் 37, சேம் குர்ரன் 36, ஒல்லி ரெய்னர் 32*, டொம் குர்ரன் 29, தில்ருவன் பெரேரா 73/5,  மலிந்த புஷ்பகுமார 77/4

இலங்கை A அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 41/2 (15) – உதார ஜயசுந்தர 18*

போட்டியின் நான்காவது மற்றும் இறுதி நாள் நாளை தொடரும்.