சுற்றுலா இலங்கை A அணி மற்றும் பங்களாதேஷ் A அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.
பங்களாதேஷூக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை A அணி அங்கே மூன்று உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், மூன்று உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றில் விளையாடுகின்றது. இலங்கை A அணியின் இந்த சுற்றுப் பயணத்தின் முதற் கட்டமாக மூன்று போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் கடந்த வாரம் ஆரம்பமாகியிருந்தது.
இலங்கை பதினொருவர் அணியின் தலைவராக மெதிவ்ஸ்
சுற்றுலா தென்னாபிரிக்கா அணியுடன் எதிர்வரும் சனிக்கிழமை (07) பி. சரா ஓவல் மைதானத்தில்…
கடந்த வாரம் தொடங்கிய இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சமநிலை அடைந்த நிலையில் இரண்டாவது போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (03) சிட்டகொங் நகரில் ஆரம்பமாகியிருந்தது. எனினும், இந்தப் போட்டியின் முதல் இரண்டு நாட்களும் மழையினால் முழுமையாக கைவிடப்பட்டிருந்தன. இதனால், ஆட்டத்தின் நேற்றைய (05) மூன்றாம் நாளிலேயே போட்டியின் நாணய சுழற்சி இடம்பெற்றிருந்தது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை A அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.
மூன்றாம் நாளிலும் மழையின் குறுக்கீடு இருந்த காரணத்தினால் 15 ஓவர்களே வீசப்பட முடியுமாக இருந்தது. மூன்றாம் நாளில் வீசப்பட்ட இந்த ஓவர்கள் அனைத்தையும் எதிர்கொண்டிருந்த இலங்கை A அணி தமது முதல் இன்னிங்சில் 54 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் லஹிரு மிலந்த 42 ஓட்டங்களுடனும், லஹிரு திரிமான்ன ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர். இதேவேளை, நேற்றைய நாளில் இலங்கை அணியில் பறிபோன அந்த ஒரு விக்கெட்டாக திமுத் கருணாரத்ன (9) அமைந்திருந்தார்.
இதனை அடுத்து இன்று போட்டியின் நான்காவதும் இறுதியுமான நாளுக்கான ஆட்டம் தொடர்ந்தது. போட்டி தொடங்கி சிறிது நேரத்திலேயே லஹிரு மிலந்தவின் விக்கெட் அவர் இன்றைய நாளில் ஓட்டம் எதனையும் பெறாதவாறு வீழ்த்தப்பட்டிருந்தது. இதன்படி இடதுகை துடுப்பாட்ட வீரரான லஹிரு மிலன்த 42 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.
லஹிரு மிலந்தவின் விக்கெட்டை அடுத்து தேசிய அணி வீரர்களான லஹிரு திரிமான்ன மற்றும் அஷான் பிரியஞ்சன் ஆகியோர் மூன்றாம் விக்கெட்டுக்கு பாரட்டத்தக்க இணைப்பாட்டம் ஒன்றினை கட்டியெழுப்பினர். 100 ஓட்டங்கள் வரையில் நீடித்த இவர்களின் இணைப்பாட்டம் அஷான் பிரியஞ்சனின் விக்கெட்டோடு முடிவுக்கு வந்தது. 17 வயதேயான நயீம் ஹசனின் சுழலில் வீழ்ந்த அஷான் பிரியஞ்சன் அரைச்சதம் ஒன்றைத் தாண்டி மொத்தமாக 57 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.
அஷான் பிரியஞ்சனை அடுத்து இலங்கை A அணிக்கு லஹிரு திரிமான்ன அரைச்சதம் ஒன்றுடன் நம்பிக்கை கொடுத்தார். அத்தோடு மத்திய வரிசையில் ஆடிய சரித் அசலங்கவும் பெறுமதியான 39 ஓட்டங்களோடு வலுச்சேர்த்தார். தொடர்ந்து லஹிரு திரிமான்ன சதத்தினை பூர்த்தி செய்த நிலையில் இலங்கை A அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை நிறுத்திக் கொண்டது.
இலங்கை A அணி தமது ஆட்டத்தை நிறுத்தும் போது 80 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 281 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தது. களத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காது நின்ற லஹிரு திரிமான்ன 186 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் 6 பெளண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். லஹிரு திரிமான்னவின் இந்த 100 ஓட்டங்கள் தொடரில் பெறப்பட்ட அவரது இரண்டாவது சதமாகவும், அவருடைய 19 ஆவது முதல் தர சதமாகவும் மாறியிருந்தது.
தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
ஜூலை 12 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவிருக்கும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க…
பங்களாதேஷ் A அணியின் பந்துவீச்சில் நயீம் ஹசன் இரண்டு விக்கெட்டுக்களையும், சப்பீர் ரஹ்மான், சொரிபுல் இஸ்லாம், காலித் அஹ்மட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
இதன் பின்னர், தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் A அணி 16 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து 59 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்த போது போட்டியின் நான்காம் நாளுக்கான ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால், போட்டி சமநிலை அடைந்தது.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் செளம்யா சர்க்கர் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களுடன் நிற்க, சுழல் பந்துவீச்சாளரான திலேஷ் குணரத்ன இலங்கை A அணிக்காக ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.
போட்டியின் ஆட்டநாயகன் விருது இந்த தொடரில் இரண்டாவது தடவையாக சதம் கடந்த லஹிரு திரிமான்னவுக்கு வழங்கப்பட்டது. தற்போது இத்தொடரின் இரண்டு உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளும் சமநிலை அடைந்திருக்கின்ற நிலையில் தீர்மானமிக்க மூன்றாவது டெஸ்ட் போட்டி சில்லெட்டில் எதிர்வரும் செய்வாய்க்கிழமை (10) ஆரம்பமாகவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை
A (முதல் இன்னிங்ஸ்) – 281/5d (80) – லஹிரு திரிமான்ன 100*, அஷான் பிரியஞ்சன் 57, லஹிரு மிலந்த 42, சரித் அசலங்க 39, நயீம் ஹசன் 105/2
பங்களாதேஷ் A (முதல் இன்னிங்ஸ்) – 59/1 (16) – செளம்யா சர்க்கர் 30*, அனாமுல் ஹக் 17, திலேஷ் குணரத்ன 31/1
முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க