ஹொசைன், ரஹ்மான் ஆகியோரது சதங்களுடன் வலுப்பெற்றுள்ள பங்களாதேஷ் A அணி

626
Image Courtesy - Getty Images

இலங்கை A அணிக்கும் பங்களாதேஷ் A அணிக்கும் இடையில் நடைபெற்று வருகின்ற முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று முடிவடைந்திருக்கின்றது.

மூன்றாம் நாளுக்கான ஆட்டத்தின் நிறைவின்போது தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வருகின்ற பங்களாதேஷ் A தரப்பு அணித்தலைவர் மொசாதிக் ஹொசைன் மற்றும்  சபீர் ரஹ்மான் ஆகியோரின் சிறப்பாட்டத்தினால் மிகவும் வலுவான நிலையில் காணப்படுகின்றது.

பங்களாதேஷூக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை A அணி முதற்கட்டமாக பங்களாதேஷ் A அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. அந்தவகையில், நான்கு நாட்கள் கொண்ட இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (26) சிட்டகொங்கின் ஸாஹூர் செளத்ரி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

திரிமான்ன, திமுத்தின் சிறப்பாட்டத்தால் வலுவடைந்துள்ள இலங்கை A அணி

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை A அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார். துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த இலங்கை அணி போட்டியின் இரண்டாம் நாளில் லஹிரு திரிமான்னவின் (168) அபார சதத்தின் உதவியோடும், சரித் அசலங்க (90), சம்மு அஷான் (70) ஆகியோரின் அரைச்சதங்களோடும் முதல் இன்னிங்சுக்காக 131.1 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 449 ஓட்டங்களைக் குவித்திருந்த போது தமது துடுப்பாட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. பங்களாதேஷ் A அணிக்காக வலதுகை வேகப்பந்து வீச்சாளரான காலித் அஹ்மட் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி போட்டியின் இரண்டாம் நாள் நிறைவின் போது, 17 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து 44 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தது. களத்தில் நயீம் ஹஸன் 12 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் மொசதிக் ஹொசைன் 8 ஓட்டங்களுடனும் நின்றிருந்தனர். இரண்டாம் நாளில் பங்களாதேஷ் அணியில் பறிபோயிருந்த இரண்டு விக்கெட்டுக்களையும் தலா ஒவ்வொரு விக்கெட்டாக இலங்கை A அணியின் நிசல தாரக்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தம்மிடையே பங்கிட்டிருந்தனர்.

இன்று போட்டியின் மூன்றாம் நாள் தொடர்ந்தது. மூன்றாம் நாளின் ஆரம்பத்திலேயே, சைனமன் சுழல் வீரரான லக்ஷான் சந்தகன் நயீம் ஹஸனை 25 ஓட்டங்களுடன் ஓய்வறை அனுப்பினார்.

இதன்பின்னர், பங்களாதேஷ் A அணியின் நான்காம் விக்கெட்டுக்காக அவ்வணியின் தலைவர் மொசாதிக் ஹொசைன் மற்றும் சபீர் ரஹ்மான் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த இரண்டு வீரர்களினதும் பொறுமையான துடுப்பாட்டத்தினால் நான்காம் விக்கெட்டுக்காக 209 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெறப்பட்டிருந்தது. இந்த இணைப்பாட்டத்தின் போது சதம் தாண்டிய மொசாதிக் ஹொசைன் பங்களாதேஷ் A அணியின் நான்காம் விக்கெட்டாக வீழ்த்தப்பட்டிருந்தார். ஹொசைன் ஆட்டமிழக்கும் போது  243 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 135 ஓட்டங்களை குவித்திருந்தார்.

லக்மால் அணியை முன்னின்று வழிநடத்தினார் – சந்திக்க ஹதுருசிங்க

ஹொசைனின் விக்கெட்டை அடுத்து புதிய துடுப்பாட்ட வீரரான சாகிர் ஹசனுடன் கைகோர்த்த சப்பீர் ரஹ்மானும் சதம் விளாசினார். இதனால், பங்களாதேஷ் A அணி போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் 112 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 360 ஓட்டங்களுடன் உறுதியான நிலையில் காணப்படுவதுடன், இலங்கை A அணியை விட 89 ஓட்டங்களால் மாத்திரமே பின்தங்கியிருக்கின்றது. களத்தில் சபீர் ரஹ்மான் 144 ஓட்டங்களுடனும், சாகிர் ஹசன் 27 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.

இதேவேளை, இப்போட்டி நிறைவடைய இன்னும் ஒரு நாள் மாத்திரமே மீதமாக இருக்கும் நிலையில் பங்களாதேஷ் A அணி போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெளிப்படுத்தியிருக்கும் துடுப்பாட்டம், இந்த ஆட்டம் சமநிலையில் முடிவடையும் என்பதையே சுட்டிக்காட்டுகின்றது.

இலங்கை A அணியின் மூன்றாம் நாளுக்கான பந்துவீச்சில் லக்ஷான் சந்தகன், பிரபாத் ஜயசூரிய ஆகியோர் மாத்திரமே ஒரு விக்கெட்டையேனும் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை A (முதல் இன்னிங்ஸ்) – 449/8d (131.1) – லஹிரு திரிமான்ன 168, சரித் அசலங்க 90, சம்மு அஷான் 70, திமுத் கருணாரத்ன 60, காலித் அஹ்மட் 92/4, அபு ஹைதர் 69/2

பங்களாதேஷ் A (முதல் இன்னிங்ஸ்) – 360/4 (112) – சப்பீர் ரஹ்மான் 144*, மொசாதிக் ஹொசைன் 135, சாகிர் ஹஸன் 27*, சரித் அசலங்க 41/1

போட்டியின் நான்காவது மற்றும் இறுதி நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<