தென்னாபிரிக்கா A அணிக்கு எதிரான மூன்றாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை A அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை A அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து மிகச்சிறப்பாக ஓட்டங்களை குவித்தது.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் 86 ஓட்டங்களை விளாசியிருந்த லஹிரு உதார, இந்தப் போட்டியிலும் சிறப்பாக ஆடினார். இவர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 90 ஓட்டங்களை பெற்ற போதும் சதத்தை தவறவிட்டார்.
>>அபார சதங்களை விளாசிய சரித் அசலன்க, தசுன் ஷானக்க
இவரை தொடர்ந்து நுவனிது பெர்னாண்டோ 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், முதல் இரண்டு போட்டிகளில் இன்னிங்ஸை வேகமாக நிறைவுசெய்திருந்த சமிந்து விக்ரமசிங்க வேகமாக ஓட்டங்களை குவித்தார். இவர் 54 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களை விளாசியதுடன், தினுர கலுபான ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களை பெற்றார்.
மேற்குறித்த துடுப்பாட்ட பிரகாசிப்புகளுடன் இலங்கை A அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 308 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க A அணிக்காக டெவால்ட் பிரேவிஸ் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க A அணியானது டேவிட் பெடிங்கமின் அதிரடி சதத்தின் உதவியுடன் மிக இலகுவாக வெற்றியை பெற்றுக்கொண்டது.
டேவிட் பெடிங்கம் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 129 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 20 பௌண்டரிகள் அடங்கலாக 188 ஓட்டங்களை விளாச, தென்னாபிரிக்க A அணி 42.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இவருக்கு அடுத்தப்படியாக மெதிவ் பிரீட்ஷ்க் 36 ஓட்டங்களையும், மீகா ஈல் பிரின்ஸ் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் துஷான் ஹேமந்த 58 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
தென்னாபிரிக்கா A அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற போதும், முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இலங்கை A அணி தொடரை 2-1 என கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<