உதார, ஹேமந்தவின் பிரகாசிப்புகளுடன் தொடரை வென்ற  இலங்கை A அணி

76
Sri Lanka A tour of South Africa 2024

தென்னாபிரிக்கா A அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை A அணி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

மூன்று உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி பொட்செப்ஸ்ரோமில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

>>அபார வெற்றியுடன் ஒருநாள் தொடரை ஆரம்பித்த இலங்கை A அணி

முதல் போட்டியில் பிரகாசித்திருந்த நுவனிது பெர்னாண்டோ மற்றும் கமில் மிஷார ஆகிய வீரர்கள் இந்தப் போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க தவறினர். எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஹிரு உதார அணிக்கு நேர்த்தியான ஆரம்பத்தை கொடுத்து அரைச்சதம் கடந்தார்.

இவர் 86 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். இவரின் ஆட்டமிழப்பின் பின்னர் மத்தியவரிசை மற்றும் பின்வரிசை வீரர்கள் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தனர். சஹான் ஆராச்சிகே அரைச்சதம் கடந்து 52 ஓட்டங்களை பெற, சமிந்து விக்ரமசிங்க 36 பந்துகளில் 48 ஓட்டங்களையும், சொனால் தினுஷ ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் 50 ஓவர்கள் நிறைவில் இலங்கை A அணி 7 விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் அண்டிலே பெஹ்லுக்வாயோ மற்றும் அண்டிலே சிமெலென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதல் விக்கெட்டை 14 ஓட்டங்களுக்கு இழந்த போதும், மீகா ஈல் பிரின்ஸ் மற்றும் மெதிவ் பிரீட்ஷ்க் ஆகியோரின் இணைப்பாட்டத்தின் உதவியுடன் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.

அவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்காக 79 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், சொனால் தினுஷவின் பந்துவீச்சில் பிரின்ஸ் 44 ஓட்டங்களோடு வெளியேறினார். இதனை தொடர்ந்து செனுரன் முத்துசாமி 37 ஓட்டங்களை அடித்தாடி மேலும் பலம் கொடுத்த போதும், சிறப்பாக ஆடிய மெதிவ் பிரீட்ஷ்க் 74 ஓட்டங்களுடன் துஷான் ஹேமந்தவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

>>சிக்ஸர்களில் புதிய சாதனை நிலைநாட்டிய நிகோலஸ் பூரன்

குறித்த இந்த விக்கெட் வீழ்த்தப்பட்ட பின்னர் துஷான் ஹேமந்த அற்புதமாக பந்துவீசி மேலும் 4 விக்கெட்டுகளை சாய்க்க, ஒரு கட்டத்தில் 143 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த தென்னாபிரிக்க A அணி 41.1 ஓவர்களில் 239 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் துஷான் ஹேமந்த 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்த, வனுஜ சஹான் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதிசெய்தார். அதன்படி 3 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை A அணி 2-0 என வெற்றிக்கொண்டுள்ளதுடன், மூன்றாவது போட்டி புதன்கிழமை (04) பொட்செப்ஸ்ரோமில் நடைபெறவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<