தென்னாபிரிக்கா A அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது நான்கு நாள் போட்டியில் பவன் ரத்நாயக்க மற்றும் லஹிரு உதார ஆகியோரின் அபார சதங்களுடன் இலங்கை A அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக்கொண்டது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா A அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 334 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
>> இலகு வெற்றிகளை பதிவு செய்த கோல், கொழும்பு அணிகள்
தென்னாபிரிக்கா A அணிக்காக நெயில் பிரேண்ட் 129 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, இவருக்கு அடுத்தப்படியாக டெவால்ட் பிரேவிஸ் 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் எசான் மாலிங்க மற்றும் சொனால் தினுஷ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பின்னர் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை A அணி லஹிரு உதார மற்றும் பசிந்து சூரியபண்டார ஆகியோரின் இணைப்பாட்டத்துடன் மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.
எனினும் இவர்களை தவிர்த்து ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் சரியாக பிரகாசிக்காத நிலையில் இலங்கை A அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 319 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு, 15 ஓட்டங்களால் பின்னடைவை சந்தித்தது.
சதமடித்த லஹிரு உதார மிகச்சிறப்பாக ஆடி 129 ஓட்டங்களை விளாசியதுடன், பசிந்து சூரியபண்டார 92 ஓட்டங்களை பெற்று சதத்தை தவவறவிட்டார். தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் பிரெனெலன் சுப்ராயன் அற்புதமாக பந்துவீசி 64 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 15 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்கா A அணி 9 விக்கெட்டுகளை இழந்து 238 ஓட்டங்களை பெற்றிருந்த போது, ஆட்டத்தை இடைநிறுத்தியது.
தென்னாபிரிக்கா A அணி சார்பாக அதிகபட்சமாக டெவால்ட் பிரேவிஸ் 74 ஓட்டங்களையும் ஜென் டு பிளெசிஸ் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, இசித விஜேசுந்தர மற்றும் மொஹமட் சிராஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
>> கமிந்து அபார சதத்தோடு முன்னிலை பெற்ற இலங்கை கிரிக்கெட் அணி
எனவே தென்னாபிரிக்கா A அணி நிர்ணயித்த 254 என்ற வெற்றியிலக்கை நோக்கி நான்காவது நாள் மதியபோசன இடைவேளைக்கு பின்னர் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி வேகமாக ஓட்டங்களை குவித்து சமப்படுத்துவதற்கான வாய்ப்பிருந்த போட்டியில், வெற்றியை தமதாக்கிக்கொண்டது.
இலங்கை அணிக்காக பவன் ரத்நாயக்க வெறும் 67 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 116 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இவருக்கு அடுத்தப்படியாக பசிந்து சூரியபண்டார 52 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள 41.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து இலங்கை A அணி வெற்றியை தமதாக்கிக்கொண்டது.
இந்த நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றிய இலங்கை A அணி, நான்கு நாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<