சுற்றுலா இலங்கை A மற்றும் தென்னாபிரிக்கா A அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் 4 நாள் போட்டியில் இலங்கை A அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா A அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி ஆடிய தென்னாபிரிக்கா A அணி முதல் இன்னிங்ஸில் 372 ஓட்டங்களை பெற்றது.
>> பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு
அணிக்காக இரண்டாவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய மெதிவ் பிரீட்ஷ்க் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 129 ஓட்டங்களை பெற்றார். இவருடன் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கிய மார்கஸ் அகர்மன் 69 ஓட்டங்களை அடித்தாடினார்.
இவர்களுடைய இணைப்பாட்டத்தின் பின் தென்னாபிரிக்கா A அணி தடுமாறிய போதும், பின்வரிசையில் ரிவால்டோ முன்சாமி 34 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க காரணமானார். பந்துவீச்சில் எசான் மாலிங்க அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை A அணி ஓசத பெர்னாண்டோவின் அபார சதம் மற்றும் பசிந்து சூரியபண்டாரவின் அரைச்சதத்தின் உதவியுடன் சிறந்த ஆரம்பத்தை பெற்றது.
ஓசத பெர்னாண்டோ 122 ஓட்டங்களையும், பசிந்து சூரியபண்டார 69 ஓட்டங்களையும் பெற்றனர். எனினும் இவர்களின் ஆட்டமிழப்புக்கு பின்னர் இலங்கை அணி தடுமாறியது. ஆனாலும் சொனால் தினுஷ 36 ஓட்டங்களையும், விஷாட் ரந்திக 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 323 ஆக உயர்த்த உதவினர். பந்துவீச்சில் பெயர்ஸ் ஸ்வென்போல் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
தொடர்ந்து 49 ஓட்டங்கள் முன்னிலையுடன் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்கா A அணி இசித விஜேசுந்தரவின் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக தடுமாற்றத்தை காட்டியது.
>> இலங்கை மகளிரை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது பங்களாதேஷ் A மகளிர் அணி
மார்கஸ் அகர்மன் மாத்திரம் அதிகபட்சமாக 27 ஓட்டங்களை பெற, தென்னாபிரிக்கா A அணி 124 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அபாரமாக பந்துவீசிய இசித விஜேசுந்தர 34 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 174 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணிக்கு மீண்டும் துடுப்பாட்டத்தில் சோபித்த ஓசத பெர்னாண்டோ 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, 43.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து இலங்கை வெற்றியிலக்கை அடைந்தது. ஓசத பெர்னாண்டோவுக்கு அடுத்தப்படியாக லஹிரு உதார 26 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் கோடி யூசுப் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<