சுற்றுலா அயர்லாந்து A கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணி ஆகியவற்றுக்கிடையே இலங்கையில் நடைபெறவுள்ள நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் மற்றும் உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் தொடர் என்பவற்றுக்கான இலங்கை A வீரர்கள் குழாம் இன்று (31) அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இரண்டாவது வாரமும் பந்துவீச்சில் அசத்தும் மொஹமட் ஷிராஷ்
இலங்கை கிரிக்கெட் சபை (SLC)…
அறிவிக்கப்பட்டிருக்கும் வீரர்கள் குழாத்தில், அயர்லாந்து A அணிக்கெதிரான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் மூலம் இலங்கை A அணிக்காக முதல்தடவையாக ஆடும் வாய்ப்பினை கண்டி மடவளை மதீனா கல்லூரியின் முன்னாள் வீரரும் வலதுகை வேகப்பந்து வீச்சாளருமான மொஹமட் சிராஸ் பெற்றிருக்கின்றார்.
BRC கிரிக்கெட் கழகத்திற்காக தற்போது விளையாடும் சிராஸ், இந்தப் பருவகாலத்திற்கான இலங்கை கிரிக்கெட் சபையின் மேஜர் எமர்ஜிங் லீக் முதல்தரக் கிரிக்கெட் தொடரில் இதுவரையில் 4 போட்டிகளில் பங்கேற்று 17 விக்கெட்டுக்களை சாய்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், இந்த ஆண்டு நடைபெற்ற வர்த்தக நிறுவனங்கள் இடையிலான T20 கிரிக்கெட் தொடரில் ஜோன் கீல்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் மாத்திரம் ஆடியிருந்த சிராஸ் அவற்றில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
அதேபோன்று, கடந்த ஆண்டு 23 வயதின் கீழ்ப்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் மத்திய மாகாண அணிக்காக விளையாடி 26 விக்கெட்டுக்களுடன் குறித்த தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராகவும் பதிவாகியிருந்தார்.
Photos: Sri Lanka A vs Ireland A – Pre Series Media Briefing
இதேவேளை, இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை A குழாமில் உள்ளூர் போட்டிகளில் திறமையினை வெளிப்படுத்தி வரும் பெதும் நிஸங்க, ஹசித போயகொட ஆகிய இளம் துடுப்பாட்ட வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
இதில் NCC அணிக்காக விளையாடி வரும் கொழும்பு இசிபதன கல்லூரியின் பழைய மாணவரான பெதும் நிஸங்க அண்மையில் இலங்கை இராணுப்படை அணிக்கெதிராக தனது கன்னி முதல்தர இரட்டைச் சதத்தினை (206*) பெற்றிருந்ததோடு தனது கடைசி முதல்தரப் போட்டியிலும் சோனகர் அணிக்கெதிராக அபார சதம் (163) ஒன்றினை விளாசியிருந்தார்.
அயர்லாந்து A அணி, இலங்கை A அணியுடன் நான்கு நாட்கள் கொண்ட 2 உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதற்கட்டமாக விளையாடுகின்றது. இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை A அணியின் தலைவராக செயற்படும் பொறுப்பு அஷான் பிரியன்ஞனுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது.
மறுமுனையில், உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரினை அடுத்து நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இலங்கை A அணியினை வழிநடாத்தும் பொறுப்பினை தேசிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க எடுத்திருக்கின்றார். இந்த ஒரு நாள் குழாத்தில் இலங்கை A அணியின் உபதலைவராக சகலதுறை துடுப்பாட்ட வீரரான மிலிந்த சிறிவர்தன செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஒரு நாள் குழாத்தில் சுழல்பந்து வீச்சாளர்களான அமில அபொன்சோ மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அஞ்செலோ மெதிவ்ஸிற்கு பதிலாக இலங்கை அணியில் சதீர சமரவிக்ரம
உபாதைக்குள்ளாகியிருக்கும் இலங்கை…
அதோடு, அண்மையில் நடந்து முடிந்த வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் பிரகாசித்த கமிந்து மெண்டிஸ் அயர்லாந்து A அணிக்கெதிராக இடம்பெறும் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகள் ஆகிய இரண்டு வகைப் போட்டிகளிலும் இலங்கை A அணிக்காக விளையாடும் சந்தர்ப்பத்தினை மிலிந்த சிறிவர்த்தன, சம்மு அஷான் ஆகியோருடன் இணைந்து பெற்றிருக்கின்றார்.
சுற்றுலாப் பயணிகளாக வந்திருக்கும் அயர்லாந்து A அணியினர், இலங்கை A அணியுடனான போட்டிகளை கட்டுநாயக்கவில் நடைபெறும் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதிநிதி அணியுடனான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியுடன் ஆரம்பிக்கின்றனர்.
இந்தப் பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை பிரதிநிதி அணியினை இளம் துடுப்பாட்ட வீரரான ஹசான் துமிந்து வழிநடாத்த, வலதுகை வேகப்பந்து வீச்சாளரான அக்தாப் காதர் பந்துவீச்சுத்துறையினை பலப்படுத்தும் பொறுப்பை எடுத்திருக்கின்றார்.
அணிக்குழாம்கள்
உத்தியோகபூர்மற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை A குழாம்
அஷான் பிரியன்ஞன் (அணித்தலைவர்), அஞ்செலோ பெரேரா –(பிரதி அணித்தலைவர்), அவிஷ்க பெர்னாந்து, லஹிரு மிலன்த, ஹசித போயகொட, பெதும் நிஸங்க, சம்மு அஷான், கமிந்து மெண்டிஸ், மிலிந்த சிறிவர்த்தன, மனோஜ் சரச்சந்திர, லசித் எம்புல்தெனிய, நிஷான் பீரிஸ், அமில அபொன்சோ, நிசால தாரக்க, சாமிக்க கருணாரத்ன, செஹான் மதுசங்க, மொஹமட் சிராஸ், திலேஷ் குணரத்ன
சதத்துடன் 12 விக்கெட்டுக்களை சாய்த்த ஜீவன் மெண்டிஸ்
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A…
உத்தியோகபூர்மற்ற ஒரு நாள் போட்டிகளுக்கான இலங்கை A குழாம்
உபுல் தரங்க (அணித்தலைவர்), மிலிந்த சிறிவர்த்தன, அவிஷ்க பெர்னாந்து, சந்துன் வீரக்கொடி, சம்மு அஷான், கமிந்து மெண்டிஸ், செஹான் ஜயசூரிய, லசித் எம்புல்தெனிய, ரமேஷ் மெண்டிஸ், அமில அபொன்சோ, ஜீவன் மெண்டிஸ், சமிக்க கருணாரத்ன, அசித்த பெர்னாந்து, ஜெஹான் டேனியல், இசுரு உதான, இசான் ஜயரட்ன
இலங்கை கிரிக்கெட் சபை பிரதிநிதி அணி
ஹசான் துமிந்து, ஹஷேன் ராமனாயக்க, சந்துன் வீரக்கொடி, ஒசாத பெர்னாந்து, ஹசித போயகொட, நுவனிது பெர்னாந்து, அஷேன் பண்டார, துஷான் விமுக்தி, மினோத் பானுக்க, மகேஷ் தீக்ஷன, தரிந்து கெளசால், ஆகாஷ் சேனாரத்ன, கலன பெரேரா, அக்தாப் காதர்.
தொடர் அட்டவணை
ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் 2ஆம் திகதி வரை – இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி – கட்டுநாயக்க
ஜனவரி 5ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை – முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி – SSC மைதனம் கொழும்பு
ஜனவரி 13ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை – இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி – ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானம்
ஜனவரி 19ஆம் திகதி – முதலாவது உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் போட்டி – ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானம்
ஜனவரி 21ஆம் திகதி – இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் போட்டி – ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானம்
ஜனவரி 24ஆம் திகதி – மூன்றாவது உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் போட்டி – SSC கொழும்பு
ஜனவரி 26ஆம் திகதி – நான்காவது உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் போட்டி – SSC கொழும்பு
ஜனவரி 29ஆம் திகதி – ஐந்தாவது உத்தியோகபூர்வமற்ற ஒரு நாள் போட்டி – ஆர். பிரேமதாச மைதானம், கொழும்பு
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<