மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான உத்தியோகபூர்வமற்ற நான்கு நாள் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை A அணி அதிக விக்கெட்டுகளை பறிகொடுத்து பின்தங்கியபோதும் அணித் தலைவர் தனன்ஜய டி சில்வா அபார சதம் ஒன்றை பெற்றார்.
ஜமைக்காவின் டி ரலவ்னி அரங்கில் நடைபெற்றுவரும் இந்த போட்டி தொடர்ச்சியாக மழையால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த புதன்கிழமை ஆரம்பமான போட்டியின் முதல் நாள் ஆட்டம் சீரற்ற காலநிலையால் 76.1 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதோடு, இரண்டாவது நாள் ஆட்டத்தில் 44 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டது.
மழை குறுக்கிட்ட போட்டியில் இலங்கை A அணிக்கு நெருக்கடி
இலங்கை A மற்றும் மேற்கிந்திய தீவுகள் A அணிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வமற்ற நான்கு நாள் டெஸ்ட்
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி முதல் இரண்டு நாட்களிலும் தொடர்ந்து அடியது. இரண்டாவது நாள் ஆட்ட நேரம் முடியும்போதும் அந்த அணி தனது முதல் இன்னிங்சுக்காக 8 விக்கெட்டுகளை இழந்து 364 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் இருந்தது.
குறிப்பாக நிதானமாக ஆடிய விஷோல் சிங் 81 ஓட்டங்களை பெற்றதோடு சிறப்பாக ஆடிய சுனில் அம்ப்ரிஸ் 106 ஓட்டங்களை குவித்து அணிக்கு வலுச் சேர்த்தனர்.
இலங்கை சார்பில் மரத்தன் ஓவர்களை வீசிய சுழற்பந்து வீச்சாளர் மலின்த புஷ்பகுமாரவால் 3 விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்ததோடு சாமிக்க கருணாரத்ன 2 விக்கெட்டுகளையும் ஷெஹான் ஜயசூரிய மற்றும் அசித பெர்னாண்டோ தலா ஒரு விக்கெட்டையும் பதம்பார்த்தனர்.
இந்நிலையில் இலங்கை நேரப்படி நேற்று இரவு ஆரம்பமான மூன்றாவது நாள் அட்டத்திலும் மழை குறுக்கிட்டது. மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாவது நாளில் தனது துடுப்பாட்டத்தை தொடராமல் முதல் இன்னிங்ஸை இடைநிறுத்தியது.
இதன்படி தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி தரும் வகையில் தொடக்க வீரர் சதுன் வீரக்கொடி ஓட்டமேதுமின்றி வெளியேறினார். விக்கெட் காப்பாளரான வீரக்கொடி மூன்று ஸ்டம்புகள் மற்றும் ஒரு ரன் அவுட் ஆட்டமிழப்பை செய்து இலங்கை அணிக்கு வலுச் சேர்த்தபோதும் துடுப்பாட்டத்தில் அவர் முகம்கொடுத்த முதல் பந்திலேயே அரங்கு திரும்பினார்.
ஒரு ஓட்டத்திற்கு ஒரு விக்கெட்டை இழந்து நெருக்கடியில் இருந்தபோது ஆரம்ப வீரர் ரொன் சந்திரகுப்தாவுடன் இணைந்த அணித் தலைவர் தனன்ஜய டி சில்வா வேகமாக ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தார்.
இளம் பந்துவீச்சாளர்களின் உதவியோடு இலங்கையை வீழ்த்திய பாகிஸ்தான்
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான்…
அவர் ஒரு முனையில் சிறப்பாக ஆடியபோதும் மறுமுனை விக்கெட்டுகள் தொடர்ந்து சாய்ந்தன. 11 ஓட்டங்களை பெற்றிருந்த சந்திரகுப்தா ஷெல்டன் கொட்ரெலின் பந்துக்கு விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சரித் அசலங்கவினால் 10 ஓட்டங்களையே பெற முடிந்தது. 23 பந்துகளுக்கு முகம்கொடுத்த அசலங்க இரண்டு பௌண்டரிகளை பெற்றிருந்தபோது கெயொன் ஜோசப்பின் பந்துக்கு அட்டமிழந்தார்.
இதனால் பகல் போசன இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்படும்போது இலங்கை அணி 86 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து ஆரம்பமான போட்டியிலும் இலங்கை A அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இலங்கைக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் மாத்திரம் ஆடி இருக்கும் தசுன் சானக்க 23 பந்துகளில் 4 பௌண்டரிகளுடன் 20 ஓட்டங்களை பெற்றிருந்தபோது கொட்ரெல்லின் பந்துக்கு அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வனின்து ஹசரங்க மறுமுனையில் ஆடி வந்த தனன்ஜய டி சில்வாவுடன் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்கு 63 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டதன் மூலம் இலங்கை அணியின் மொத்த ஓட்டங்கள் 171 ஆக உயர்ந்தது. 20 வயது ஹசரங்க நிதானமாக ஆடிக்கொண்டிருந்தபோது ரஹ்கீன் கோர்வோல்லின் பந்தில் சிக்கினார். 32 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவரால் 3 பௌண்டரிகளுடன் 24 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.
இளைஞர் ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு
அதன்படி, ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த கமின்து மெண்டிஸ் இந்த அணிக்கு தலைமை வகிப்பதோடு புனித ஜோசப்…
எனினும் சர்வதேச போட்டிகளில் ஆடிய தனது அனுபவத்தை வெளிப்படுத்திய தனன்ஜய டி சில்வா சதம் ஒன்றை பெற்று அணியை கௌரவமான நிலைக்கு கொண்டுவந்தார். மூன்று மணி நேரத்திற்கு மேல் களத்தில் இருந்த அவர் 143 பந்துகளுக்கு முகம்கொடுத்து 10 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 104 ஓட்டங்களை பெற்றார்.
எனினும் அணியின் ஓட்டங்கள் 181 ஆக இருந்தபோது தனன்ஜய டி சில்வா சுழற்பந்து வீச்சாளர் டொமியோன் ஜகப்ஸின் பந்துக்கு ஆட்டமிந்தார். இலங்கை அணிக்காக இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் 26 வயது தனன்ஜய டி சில்வா 38 ஓட்ட சராசரியை கொண்டுள்ளார்.
இலங்கை அணி சார்பில் அடுத்து துடுப்பாட வந்த சாமிக்க கருணாரத்ன ஓட்டம் இன்றியே அட்டமிழந்தார்.
எனினும் தேனீர் இடைவேளைக்கு பின்னர் சீரற்ற காலநிலையால் மூன்றாவது நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. இதன்போது இலங்கை A அணி 53 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை எடுத்திருந்தது.
எனவே, இலங்கை அணி 3 விக்கெட்டுகள் மாத்திரமே கைவசம் இருக்கும் நிலையில் மேற்கிந்திய தீவுகளை விடவும் முதல் இன்னிங்ஸில் 163 ஓட்டங்களால் பின்தங்கியுள்ளது.
ஷெஹான் ஜயசூரிய 12 ஓட்டங்களுடனும், மலின்த புஷ்பகுமாக 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள அணி சார்பில் கொட்ரெல், ஜகப்ஸ் மற்றும் ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இன்று போட்டியின் கடைசி நாளாகும்.