உலக சக்கர நாற்காலி டென்னிஸில் இலங்கைக்கு ஆறாமிடம்

BNP Baripas World Team Cup - 2021

198

இத்தாலியில் நடைபெற்ற உலகக் கிண்ண சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டித் தொடரில் 6ஆவது இடத்தை இலங்கை சக்கர நாற்காலி டென்னிஸ் அணி பெற்றுக்கொண்டது.

இதன்மூலம் உலக சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டித் தொடர் வரலாற்றில் இலங்கை பெற்ற அதிசிறந்த பெறுபேறாக இது அமைந்தமை விசேட அம்சமாகும்.

மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற 8ஆவது உலகக் கிண்ண சக்கர நாற்காலி டென்னிஸ் தொடரின் முதலாவது சுற்றில் முன்னாள் உலக சம்பியனான பிரான்ஸ் அணியை எதிர்த்தாடிய இலங்கை 0 க்கு 3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.

இதனையடுத்து நடைபெற்ற பெல்ஜியம் அணியுடனான போட்டியில் 2 க்கு 1 என்ற செட் கணக்கிலும், பிரேசில் அணியுடனான போட்டியை 3 க்கு 0 என்ற செட் கணக்கிலும் இலங்கை அணி வெற்றி கொண்டது.

இதனைத்தொடர்ந்து 5ஆம் இடத்திலிருந்து 8ஆம் இடம்வரையான நிரல்படுத்தலுக்கான போட்டியில் போலந்தை எதிர்த்தாடிய இலங்கை
2 – 0 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றது.

இதன் பின்னர் 5ஆம், 6ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் நிரல்படுத்தலுக்கான இறுதிப் போட்டியில் ஜப்பானை எதிர்கொண்ட இலங்கை 0 – 2 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து 6ஆவது இடத்தைப் பிடித்தது.

இதேவேளை, இம்முறை உலக சக்கர நாற்காலி டென்னிஸ் தொடரில் இலங்கை அணியின் தலைவராக அண்மையில் நிறைவுக்குவந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்குகொண்ட சுரேஷ் தர்மசேன செயல்பட்டதுடன், இந்த அணியில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த லசந்த ரணவீர, காமினி திஸாநாயக்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

எவ்வாறாயினும், இந்தப் போட்டித் தொடரில் வெளிப்படுத்திய திறமைகள் காரணமாக உலக டென்னிஸ் தரவரிசையில் இலங்கையின் சுரேஷ் தர்மசேன 64ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ள, வசந்த ரணவீர 85ஆவது இடத்தையும், காமினி திஸநாயக்க 81ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<