இந்தியாவின் சென்னையில் நடைபெற்று வருகின்ற 61ஆவது இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான 4×100 அஞ்சலோட்டத்தில் பங்குகொண்ட இலங்கை அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையிலான 61ஆவது தேசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு அரங்கில் கடந்த 10ஆம் திகதி ஆரம்பமாகியது.
உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான தகுதிச் சுற்றாகவும் அமைந்துள்ள இந்தப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன், இலங்கையிலிருந்து 12 பேர் கொண்ட வீரர்கள் குழாமும் பங்கேற்றுள்ளது.
இந்த நிலையில், போட்டித் தொடரின் 3ஆவது நாளான இன்று (12) நடைபெற்ற பெண்களுக்கான 4×100 அஞ்சலோட்ட இறுதிப் போட்டியில் அமாஷா டி சில்வா தலைமையிலான இலங்கை அணி களமிறங்கியது.
இதில் 45.35 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து இலங்கை பெண்கள் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
- இந்திய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் 12 இலங்கையர்கள்
- சர்வதேச மெய்வல்லுனர் தொடர்களில் இலங்கை வீரர்கள்
- சுவிட்சர்லாந்து சர்வதேச மெய்வல்லுனரில் தங்கம் வென்றார் சாரங்கி
முன்னதாக கடந்த ஆண்டும் இதே போட்டித் தொடரில் பங்குகொண்ட அமாஷா டி சில்வா தலைமையிலான இலங்கை அஞ்சலோட்ட அணி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், கடந்த ஆண்டு போட்டியை 44.55 செக்கன்களில் நிறைவு செய்ததன் மூலம் பெண்களுக்கான 4×100 அஞ்சலோட்டப் போட்டியில் 19 ஆண்டு;களுக்குப் பிறகு பதிவுசெய்த அதிசிறந்த நேரப் பெறுமதியாகவும் அது இடம்பிடித்தது.
இதனிடையே, இந்த ஆண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை அஞ்ச்லோட்ட அணியில் அமாஷா டி சில்வா, ஷெலிண்டா ஜென்சென், மேதானி ஜயமான்ன. லக்ஷிதா சுகன்தி ஆகியோர் இடம்பிடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
எதுஎவ்வாறாயினும், குறித்த போட்டியில் டூட்டி சாந்த் தலைமையிலான இந்திய அணி தங்கப் பதக்கத்தையும், கேரள மாநில அணி வெண்கலப் பதக்கத்தினையும் சுவீகரித்தது.
இதுஇவ்வாறிருக்க, இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையிலான 61ஆவது தேசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியின் 2ஆவது நாளான நேற்று (11) ஆண்களுக்கான 400 மீட்டரில் பங்குகொண்ட அருண தர்ஷன 5ஆவது இடத்தைப் பிடித்தார்.
அதேபோல, பெண்களுக்கான 100 மீட்டரில் பங்குகொண்ட இலங்கையின் இளம் குறுந்தூர ஓட்ட வீராங்கனையான அமாஷா டி சில்வா 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<