9ஆவது ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 27ஆவது போட்டி நேற்று ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள ரஜீவ் காந்தி சர்வதேசக் கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் விராத் கொஹ்லி தலைமையிலான பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணி டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரயிசஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடியது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் ரோயல் செலேன்ஜர்ஸ் அணியின் தலைவர் விராத் கொஹ்லி முதலில் சன் ரயிசஸ் ஹைதராபாத் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.
இதன்படி தவானும், வோர்னரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினார்கள். தவான் 11 ஓட்டங்களோடு ஆட்டமிழக்க, வோர்னர் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தினார். மற்றொரு முனையில் நின்ற வில்லியம்ஸ்சன் நிதானமாக ஆடி ஓட்டங்களைக் குவித்தார்.
சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 50 பந்துகளில் 92 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். விலியஸ்சன் 38 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிக் கட்ட ஓவர்களில் ஹென்ரிக்ஸ் 14 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்று அதிரடி காட்ட, ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைக் குவித்தது. பெங்களூர் அணித் தரப்பில் ரிச்சர்ட்சன் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்
195 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. விராத் கொஹ்லியும், லோகேஷ் ராஹுலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினார்கள். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராத் கொஹ்லி 14 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். ஆனால் ராஹுலும், டி வில்லியர்சும் அதிரடியாக ஆட பெங்களூர் அணியின் ஓட்டம் வேகமாக உயர்ந்தது. பின் 28 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 51 ஓட்டங்களை எடுத்திருந்த ராஹுல், ஹென்ரிக்ஸ் வீசிய பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய வொட்சன் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். களத்தில் டி வில்லியர்ஸ் இருந்ததால் ஆட்டம் பெங்களூருக்கு சாதகமாகவே இருந்தது. இந்திய இளம் வீரரான சச்சின் பேபியும் அதிரடியாக ஆட ஆட்டத்தில் பரபரப்பு கூடியது. ஆனால் டி வில்லியர்ஸ் 47 ஓட்டங்களோடு ஆட்டமிழந்ததும் பெங்களூரின் தோல்வி உறுதியானது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனால் ஹைதராபாத் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் தெரிவு செய்யப்பட்டார்.