IPL தொடரிலிருந்து விலகி நாடு திரும்பும் வில்லியம்ஸன்

Indian Premier League 2022

295

IPL தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக செயற்பட்டுவந்த நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸன் நாடு திரும்பியுள்ளார்.

கேன் வில்லியம்ஸனின் மனைவி ஷாரா இரண்டாவது குழந்தையை பிரசவிக்க இருப்பதன் காரணமாக கேன் வில்லியம்ஸன், போட்டித்தொடரிலிருந்து விலகி நாடு திரும்புவதாக சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

>> IPL தொடரிலிருந்து விலகினார் ரஹானே

கேன் வில்லியம்ஸன் இம்முறை IPL தொடரில் குறிப்பிடத்தக்க அளவிலான பிரகாசிப்புகளை வழங்கவில்லை. வில்லியம்ஸன் 13 போட்டிகளில் விளையாடி ஒரு அரைச்சதத்துடன் 216 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார்.

அதேநேரம் வில்லியம்ஸன் தலைமையில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 13 போட்டிகளில் விளையாடி, 6 வெற்றிகளுடன் 8வது இடத்தை பிடித்துள்ளது. எவ்வாறாயினும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஒரு போட்டி மாத்திரமே எஞ்சியிருந்தாலும், இதுவரையிலும் பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தங்களுடைய இறுதி லீக் போட்டிகளில் டெல்லி கெப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் தோல்வியடைந்து, அடுத்த போட்டியில் சிறப்பான வெற்றியை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி பெற்றுக்கொண்டால் பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து கேன் வில்லியம்ஸன் விலகியுள்ளமை அணிக்கு பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வில்லியம்ஸன் விலகியுள்ள நிலையில், ஹைதராபாத் அணி தங்களுடைய புதிய தலைவரை இதுவரை அறிவிக்கவில்லை. சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி தங்களுடைய இறுதி லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<