இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த், இலங்கையில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் ஆட்டநிர்ணயம் செய்த குற்றச்சாட்டு காரணமாக கடந்த 7 வருடங்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஸ்ரீசாந்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், கடந்த வாரத்துடன், இவரது தடைக்காலம் நிறைவுக்கு வந்துள்ளதுடன், சகலவிதமான போட்டிகளிலும் விளையாடுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
LPL போட்டி அட்டவணையும், அணிகளின் பெயர்களும்!
அதனால், ஸ்ரீசாந்த் தான் மீண்டும் கிரிக்கெட் விளையாடும் முகமாக, சில நாடுகளில் உள்ள தன்னுடைய முகவர்களுடன் தொடர்புக்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கை, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாகவும், தற்போது அதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி, தொடர்ந்தும் கேரளாவில் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீசாந்த், உலகின் எந்த மூலையில் கிரிக்கெட் விளையாடுவதற்கும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
“நான் இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கான பேச்சுவார்த்தைகளை, எனது முகவர்களுடன் மேற்கொண்டுள்ளேன். 2023ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவது எனது இலக்கு. அதேநேரம், கிரிக்கெட்டின் தயாகமான எம்.சி.சி. மைதானத்தில் ஒரு போட்டியில் விளையாட வேண்டும்” என ஸ்ரீசாந்த் கருத்து வெளியிட்டுள்ளார்.
Video – இலங்கை டெஸ்ட் அணியில் புதுமுக வீரர்கள்..! |Sports RoundUp – Epi 131
ஸ்ரீசாந்த் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக்கின் போது, ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக வாழ்நாள் தடைக்கு முகங்கொடுத்தார். எனினும், அதன் பின்னர் உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தாக்கல் செய்ததில் வாழ்நாள் தடை 7 வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. எனவே, இந்த ஆண்டு ரன்ஜி கிண்ணத்தில் கேரள அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் ஸ்ரீசாந்த் எதிர்பார்த்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம்வந்த ஸ்ரீசாந்த், 27 டெஸ்ட் போட்டிகள், 53 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 T20I போட்டிகள் என்பவற்றில் விளையாடி, மொத்தமாக 169 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதேநேரம், இவர் 2011ம் ஆண்டு இறுதியாக இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<