மீண்டும் IPL தொடருக்கு திரும்ப எதிர்பார்க்கும் ஸ்ரீசாந்த்!

254

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த், மீண்டும் இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாடுவதற்கு எதிர்பாரத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  

இந்திய கிரிக்கெட்டின் முதன்மை தொடர்களில் ஒன்றான ரஞ்சி கிண்ணத்தில் கேரள அணிக்காக இந்த பருவகாலத்தில் விளையாட எதிர்பார்த்திருப்பதாக ஸ்ரீசாந்த் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், தான் கிரிக்கெட்டிலிருந்து வெளியேறிய, அதே தொடரில் மீண்டும் கிரிக்கெட்டில் கால் பதிக்க எண்ணியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

பயிற்சிக்கு திரும்பும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி

கடந்த 2013ம் ஆண்டு ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக ஐ.பி.எல். தொடரில் விளையாடிய இவர், சூதாட்ட விவகாரம் தொடர்பில் இந்திய கிரிக்கெட் சபையின் வாழ்நாள் தடைக்கு முகங்கொடுத்திருந்தார். எனினும், இதனை மேன்முறையீடு செய்த இந்திய உயர் நீதிமன்றம் தடையை 7 ஆண்டுகளாக குறைத்திருந்தது. 

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, ஸ்ரீசாந்தின் தடைக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதியில் நிறைவடைகின்றது. அதனால், இந்திய கிரிக்கெட்டின் உள்ளூர் போட்டிகளில் விளையாட ஸ்ரீசாந் தீர்மானித்துள்ளதுடன், ஐ.பி.எல். தொடரிலும் விளையாட எண்ணியுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீசாந்த், “ஐ.பி.எல். ஏலத்தில் எனது பெயரை கட்டாயமாக கொடுப்பேன். நான் சிறப்பாக விளையாடினால், நான் நினைத்ததை செய்து முடிப்பேன். சில ஐ.பி.எல். அணிகள் என்னை இணைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றன. அதேநேரம், நானும் மீண்டும், ஐ.பி.எல். தொடரில் விளையாட காத்திருக்கிறேன்.

அத்துடன், எனது சூதாட்ட தடைக்கு சரியான பதிலை கொடுக்க வேண்டிய இடம் ஐ.பி.எல். தான். இந்திய அணியில் விளையாடினாலும், ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதுதான் முக்கியமான விடயம்” என்றார். 

இதேவேளை, ஸ்ரீசாந்த் தற்போது உலகின் முன்னணி உடற்கூறு மற்றும் உளவியல் பயிற்சியாளரான டிம் க்ரோவரின் கீழ், உளவியல் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இவர், கூடைப்பந்தாட்ட ஜாம்பவான்களான மைக்கல் ஜோர்டன் மற்றும் கோபே  ப்ரயன்ட் ஆகியோருக்கு பயிற்றுவித்துள்ளார்.  

அவரிடம் பயிற்சிகளை மேற்கொண்டு வருவது தொடர்பிலும் தனது பயிற்சிகள் தொடர்பிலும் கருத்து வெளியிட்ட ஸ்ரீசாந்த், “கூடைப்பந்தாட்டதில் மிகப்பெரிய பெயருள்ளவர் க்ரோவர். அவரிடம் நேரடி காணொளி பயிற்சியை காலை 5.30 மணியிலிருந்து 8.30 வரை பெறுகிறேன். பகல் நேரங்களில், 1.30 மணியிலிருந்து 6 மணிவரை உள்ளக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றேன். இதில், இந்திய தேசிய 23 வயதுக்குட்பட் வீரர்கள் பலர் இணைந்துள்ளனர். 

அத்துடன், வாரத்தில் ஆறு நாட்களில், தலா மூன்று மணித்தியாலம் பந்துவீச்சு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். முதல் 2 மணித்தியாயலம் சிவப்பு பந்திலும், மீதம் ஒரு மணித்தியாலம் வெள்ளை நிற பந்திலும் பயிற்சிகளை மேற்கொள்கிறேன். குறிப்பாக எனது உடற்தகுதியை அதிகரிக்க ஒரு நாளைக்கு சுமார் 12 ஓவர்களை வீசி வருகின்றேன்” எனவும் இவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க…