இலங்கை – உகண்டா 19 வயதின்கீழ் அணிகளுக்கடையிலான இளையோர் உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியின் பிறகு இரு அணியினரும் நட்பு ரீதியாக ஒன்றாக இருந்து புகைப்படமொன்றை எடுத்து விளையாட்டின் உண்மையான அர்த்தத்தை முழு உலகிற்கும் எடுத்துரைத்தனர்.
இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், உகண்டா அணி வீரர்களுக்கு துடுப்பாட்ட பயிற்சிகளை இலங்கை 19 வயதின்கீழ் அணியின் பயிற்றுவிப்புக் குழாம் வழங்கியுள்ளதுடன், இந்த செயலுக்காக உகண்டா கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் அணிக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்பாடு செய்துள்ள 14ஆவது 19 வயதின்கீழ் ஒருநாள் உலகக் கிண்ண (இளையோர் உலகக் கிண்ணம்) தொடர் முதன் முறையாக மேற்கிந்திய தீவுகளில் நாளை (14) முதல் பெப்பரவரி 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. மொத்தம் 16 அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன.
இதில் D குழுவில் இலங்கை அணியுடன் ஸ்கொட்லாந்து, அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
- U19 உலகக் கிண்ணம்: முதல் பயிற்சிப் போட்டியில் இலங்கைக்கு இலகு வெற்றி
- சதீஷ, துனித்தின் அதிரடியில் உகண்டாவை வீழ்த்திய இலங்கை U19 அணி
இதனிடையே, 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னோடியாக பயிற்சிப் போட்டிகள் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகியது. இதில் இலங்கை அணி, முதலாவது பயிற்சிப் போட்டியில் அயர்லாந்து அணியை 128 ஓட்டங்களால் வீழ்த்தியது.
இந்த நிலையில், இலங்கை 19 வயதின்கீழ் அணி, தமது இரண்டாவது பயிற்சிப் போட்டியில் உகண்டா 19 வயதின்கீழ் அணியை நேற்று (12) சந்தித்தது.
இதில் சதீஷ ராஜபக்ஷவின் அதிரடி துடுப்பாட்டம் மற்றும் துனித் வெல்லாலகேவின் அபார பந்துவீச்சின் உதவியால் இலங்கை அணி, 231 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.
இதனிடையே, போட்டியின் பிறகு இரு அணியினரும் நட்பு ரீதியாக ஒன்றாக இருந்து புகைப்படமொன்றை எடுத்துள்ளதுடன், இதன்போது உகண்டா அணி வீரர்களுக்கு துடுப்பாட்ட பயிற்சிகளையும் இலங்கை 19 வயதின்கீழ் அணியின் பயிற்றுவிப்புக் குழாம் வழங்கியுள்ளது.
இதேவேளை, குறித்த புகைப்படத்தை தமது உத்தியோகப்ப்பூர்வ டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள உகண்டா கிரிக்கெட் சபை, முக்கிய போட்டியொன்றுக்குப் பிறகு எமது வீரர்களுக்கு கொஞ்சம் துடுப்பாட்ட பயிற்சியளித்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளது.
Thank you @OfficialSLC for the kind gesture of giving us some batting practice after the main game.
A 🕯️ loses nothing when it lights another. #Cheer4BabyCricketCranes pic.twitter.com/W8UQp2Nwj9
— Uganda Cricket Association (@CricketUganda) January 12, 2022
அதேபோல, குறித்த பதிவின் கடைசியில் ஒரு மெழுகுவர்த்தியால் மற்றுமொரு மெழுகுவர்த்தியை ஒளிரச் செய்யும் போது எதையும் இழக்காது என்ற வாசகத்தை குறிப்பிட்டுள்ளது. அதாவது இன்னுமொருவரின் ஆதரவு இருக்கும் போது நாம் ஒருபோதும் வீழ்ந்துவிட மாட்டோம் என்ற விடயத்தை மறைமுகமாக தெரிவித்துள்ளது.
எனவே இலங்கை அணியின் இந்த செயலால் பலதரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக, விளையாட்டின் புனிதத் தன்மையை முழு உலகிற்கும் பறைசாற்றியுள்ள இலங்கை அணி, விளையாட்டின் ஊடாக நட்பு மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்பதையும், தடைகளை உடைத்து மக்களை ஒன்று சேர்க்கின்ற ஒரு ஆயுதமாக விளையாட்டு காணப்படுகின்றது என்பதையும் உணர்த்தியுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<