ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் இன்று இந்தியாவில் ஆரம்பம்

Asian Netball Championship 2024

82
Asian Netball Championship 2024

இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட 14 நாடுகள் பங்குபற்றும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் இன்று (17) இந்தியாவில் ஆரம்பமாகவுள்ளது.  

இந்த நிலையில்ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்று முன்தினம் (15)  இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றது 

முதன்முறையாக 14 அணிகள் மோதும் இந்த ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இதன் ஆரம்ப விழா நாளை பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 

இம்முறை ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் A குழுவில் இலங்கை, பிலிப்பைன்ஸ், சவூதி அரேபியா, இந்தியா, முன்னாள் சம்பியன் மலேசியா, ஜப்பான், மாலைதீவுகள் ஆகிய அணிகளும், B குழுவில் முன்னாள் சம்பியன் சிங்கப்பூர், தாய்லாந்து, ஹொங்கொங், புருணை, பஹ்ரெய்ன், ஈராக் (பங்குபற்றுவது உறுதியில்லை), சைனீஸ் தாப்ப்பே ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. சவூதி அரேபியா முதன்முறையாக ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் பெங்களூரில் உள்ள கோரமங்கலா உள்ளக அரங்கில் நாளை (17) ஆரம்பமாகவுள்ள 13 ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றவுள்ள நடப்பு ஆசிய சம்பியனான இலங்கை வலைப்பந்தாட்ட அணி, துலாங்கனி வன்னிதிலக்கவின் தலைமையில் இம்முறை போட்டித் தொடரில் களமிறங்கவுள்ளது 

சிரேஷ்ட வீராங்கனைகளும் முன்னாள் தலைவிகளுமான கயனி திசாநாயக்க, கயஞ்சலி அமரவன்ச ஆகியோரும் அணியில் இடம்பெறுகின்றனர். அத்துடன், திசாலா அல்கம, ஹசித்தா மெண்டிஸ், மல்மி ஹெட்டிஆராச்சி, ஷானிகா பெரேரா ஆகியோர் அனுபவ வீராங்கனைகளாக அணியில் இடம்பெற்றுள்ளனர்.   

இதனிடையே, ஷானிக்கா பெரேரா, சுசீமா பண்டார, காயத்திரி கௌஷல்யாசச்சினி ரொட்றிகோ, குருநாகல் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலை வீராங்கனை சலனி நீஷா ஆகியோர் அறிமுக வீராங்கனைகளாக அணியில் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

இந்த நிலையில், இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்காக பல வரலாற்று வெற்றிகளை ஈட்டிக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த  அணியன் வலைபந்தாட்ட உலகில் மிகவும் உயரமான வீராங்கனையாக வலம் வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஜினி சிவலிங்கம் இம்முறை ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை அணியில் இடம்பெறவில்லை. எனவே தர்ஜினி இல்லாமல்; இலங்கை அணி களமிறங்கும் முதல் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் இதுவாகும். இறுதியாக 2023இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலக கிண்ண வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்புடன் அவர் ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

1985ஆம் ஆண்டு மலேசியாவில் ஆரம்பமான ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வருகின்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணி 6 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அதேபோல, 4 தடவைகள் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. இலங்கையை அடுத்து சிங்கப்பூர் மூன்று தடவைகள் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 

இறுதியாக 2018 மற்றும் 2022 இல், இலங்கை அணி தொடர்ச்சியாக ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பை வென்றது. மேலும் 2020 இல் கொவிட் தொற்றுநோய் காரணமாக போட்டிகள் நடத்தப்படவில்லை. 

எனவே, இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 11 அத்தியாயங்களில் 6 தடவைகள் சம்பியனாகியுள்ள இலங்கை வலைப்பந்தாட்ட அணி, இந்த ஆண்டும் சம்பியன் பட்டத்தை வெல்ல பலத்த போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது 

அதேபோல, நடப்பு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனான இலங்கை அணி, தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் சம்பியனாகும் நம்பிக்கையுடன் இம்முறை போட்டியில் பங்கேற்கவுள்ளது. எனவே, இந்த ஆண்டும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பை இலங்கை வென்றால், தொடர்ந்து மூன்று தடவைகள் ஆசிய வலைப்பந்தாட்ட பட்டத்தை வென்ற ஒரே நாடு என்ற பெருமையை இலங்கை பெறும். 

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவியும், தேசிய வலைப்பந்தாட்ட அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியவருமான திருமதி தீபி நாலிகா பிரசாதி இம்முறை ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றவுள்ளார் 

இதேவேளை, இம்முறை ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை வலைப்பந்தாட்ட அணியினர் இந்தியாவிற்கு புறப்பட்டுச் செல்ல முன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்ததுடன், வீரர்களுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதமர் அணியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 

இலங்கை வலைப்பந்தாட்ட அணி விபரம்துலாங்கனி வன்னிதிலக்க (அணித்தலைவி), ஹசிதா மெண்டிஸ், ரஷ்மி திவ்யாஞ்சலி, கயஞ்சலி அமரவன்ச, திசாலா அல்கம, ஷானிகா பெரேரா, கயனி திசாநாயக்க, காயத்திரி கௌசல்யா, சுசீமா பண்டார, சச்சினி ரொட்ரிகோ, மல்மி ஹெட்டிஆராச்சி, சலினி நிஷாராச்சி. 

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<