இலங்கையின் 4 விளையாட்டு சங்கங்களுக்கு இடைக்காலத்தடை

75

நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக 4 தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு கிடைத்த புகார்களை முழுமையாக ஆய்வு செய்த அமைச்சர், குறித்த 4 விளையாட்டு சங்கங்களின் நிர்வாக அதிகாரத்தை விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் (ரியர் அட்மிரல்) ஷெமல் பெர்னாண்டோவுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

விளையாட்டு சட்டத்தின் 32 மற்றும் 33 பிரிவுகளின்படி விளையாட்டுத்துறை அமைச்சர் உருவாக்கிய விதிகளின்படி அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் நேற்று (29) மாலை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை றக்பி சங்கம், இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம், இலங்கை சைக்கிளோட்ட  சம்மேளனம் மற்றும் சிலோன் ஒட்டோமொபைல் சங்கம் (இலங்கை மோட்டார் சம்மேளனம்) ஆகிய நான்கு சங்கங்களுக்கு மே 29ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கால்பந்தை தொடர்ந்து இலங்கை றக்பிக்கும் தடை

இதில் சிறப்பம்சம் என்னவெனில் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் இன்று (30) நடைபெறவிருந்த நிலையில், குறித்த தேர்தல் நடைபெறாது என தேர்தலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் நேற்று அறிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கங்கள் தமது வாக்குரிமை இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு ஆட்சேபனைகளை முன்வைத்திருந்த நிலையில், நேற்று விசாரணை நடத்தப்பட்டது.

விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் (ரியர் அட்மிரல்) ஷெமல் பெர்னாண்டோவின் மேற்பார்வையில் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கங்களின் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், குறித்த விசாரணை அறிக்கை நேற்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் சமர்ப்பிக்கப்படவிருந்தது.

இதனிடையே, இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தின் இரு குழுக்களுக்கிடையில் சில காலமாக கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில், விளையாட்டுச் சட்டம் மற்றும் இலங்கை சைக்கிளோட்ட  சம்மேளனத்தின் அரசியலமைப்பை மீறி செயற்குழு கூட்டம் தெரிவுக்குழு ஒன்றை நியமித்துள்ளதாக சமீபத்திய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உரிய காலத்தில் நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தாத இலங்கை றக்பி சங்கத்துக்கும், அந்த சங்கத்துடன் தொடர்புடைய பல தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் கடந்த ஆண்டு இலங்கை றக்பி சங்கத்தின் உறுப்புறுரிமையை இடைநிறுத்துவதற்கு உலக றக்பி சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அண்மையில் நடைபெற்ற பொக்ஸ் ஹில் சுப்பர் க்ரொஸ் மோட்டார் பந்தயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இலங்கை மோட்டார் சம்மேளனத்தின் தேர்தலும் எதிர்காலத்தில் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகத்தின் கீழ் நடைபெறவுள்ளது.

எனவே, விளையாட்டுத்துறை அமைச்சரின் இந்த உத்தரவுக்கு அமைய குறிப்பிட்ட நான்கு சங்கங்களினதும் தேர்தல்கள் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

>>  மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<