இலங்கையில் கிரிக்கெட் விளையாடாத பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே வட மாகாணத்திலிருந்து ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதன் முதல் நிகழ்ச்சி கடந்த 15ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுத்துறை அபிவிருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் கீழ் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுத்துறை அபிவிருத்தி மண்டபத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் நடைபெற்றது.
இந்த திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் இதுவரை கிரிக்கெட் விளையாடாத 47 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை கிரிக்கெட் விளையாட்டில் இணைத்துக் கொள்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும், சகவாழ்வை மேம்படுத்துவதற்கான முக்கிய வழியாக விளையாட்டைப் பயன்படுத்த முடியும் என்றும் கூறினார். எனவே, இந்த திட்டத்தை வட மாகாணத்தில் ஆரம்பிக்க முடிவு செய்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே, பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டத்திற்காக 2025 வரவு செலவுத் திட்டத்தில் 1500 மில்லியன் ரூபாவை நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
- இலங்கை – நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியானது!
- ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியாவை வைட்வொஷ் செய்த இலங்கை
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர், உள்ளூராட்சி பணிப்பாளர், வட மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் மற்றும் 47 பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்குமார கமகே மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இணைந்து யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கினை நேற்று (16) பார்வையிட்டனர்.
இதன்போது, துரையப்பா விளையாட்டு அரங்கின் தேவைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்தனர். குறிப்பாக, ஒளியமைப்பு வசதிகள், பராமரிப்பு வசதிகள் மற்றும் உள்ளக அரங்கு அமைப்பதுதொடர்பாகவும் ஆராய்ந்ததோடு, இதற்கான திட்ட முன்மொழிவு பொறிமுறை ஒன்றினை உருவாக்கித் தருமாறு அமைச்சர் அரச அதிபரிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும், வேலனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணி தொடர்பாகவும் அதனுடைய தற்போதைய நிலைமை தொடர்பாகவும் அமைச்சர் கலந்துரையாடினார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<