இலங்கை கிரிக்கெட்டை வளப்படுத்தும் முகமாக தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவொன்றை (Technical Advisory Committee), விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் (05) நியமித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களை உள்ளடக்கி இந்த குழு நியமிக்கப்பட்டள்ளது. குழுவின் தலைவராக 1996ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றுக்கொடுத்த குழாத்திலிருந்த அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
மே.தீவுகளுக்கெதிரான தொடரை ஒத்திவைத்த இலங்கை!
இவருடன் இலங்கை அணியின் முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்த, முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன் மற்றும் ரொஷான் மஹானாம ஆகியோரும் இந்த குழுவில் பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபையில் நடக்கும் விடயங்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய விளையாட்டு குழு ஆகியவற்றுக்கு ஆலோசனை வழங்குவதே இந்த குழுவின் பிரதான செயற்பாடு என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், இலங்கை கிரிக்கெட்டை நெருக்கமாக கண்கானித்து சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டி மட்டங்களை நிலையான உயர்வுக்கு அழைத்துச் செல்லவேண்டும் எனவும் இந்த குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் வீரர்களை, இலங்கை கிரிக்கெட் சபையின் கீழ் செயற்படும் கிரிக்கெட் குழுவில் பெயரிடுவதற்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பரிந்துரை செய்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர், கடந்த சில நாட்களாக விளையாட்டுத்துறையில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றார். குறிப்பாக, வீரர்களின் பிரகாசிப்புக்கு அமைய அவர்களுக்கான ஊதியம் வழங்குவது மற்றும் உடற்தகுதி, ஒழுக்கம் என்பவை தொடர்பிலும் அவதானம் செலுத்தவேண்டும் என அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<