இந்தியாவில் நடைபெற்ற அங்குரார்ப்பண மகளிர் பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி முதலாவது சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
ஐந்து அணிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கெபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
மும்பை பிரபோர்ன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி கெபிடல்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி, அவ்வணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணிக்காக மெக் லெனிங் 35 ஓட்டங்களையும், ஷிகா பாண்டே மற்றும் ராதா யாதவ் ஆகிய இருவரும் தலா 27 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாகப் பெற்றுக்கொள்ள, மும்பை தரப்பில் இசி வோங், ஹெய்லி மெதிவ்ஸ் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், அமெலியா கெர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
- ஜடேஜாவுக்கு அதி உயர் ஒப்பந்தம்; பாண்டியாவும் அதிரடி முன்னேற்றம்
- பல சாதனைகளுடன் T20 அரங்கை அதிர வைத்த மோதல்
- வெளிநாட்டு கிரிக்கெட் அணிக்கு பயிற்சியளிக்கும் முதல் இலங்கை பெண்
பின்னர் 132 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான யாஸ்திகா பாட்டியாவும், ஹெய்லி மெதிவ்ஸும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 3ஆவது விக்கெட்டுக்கு நொட் சிவெரும், அணித் தலைவி ஹர்மன்பிரீத் கவுரும் இணைந்து நிதானமாக ஆடி ஓட்டங்களைக் குவித்தனர். இதில் ஹர்மன்பிரீத் கவுர் 37 ஓட்டங்களை எடுத்து ரன்-அவுட் ஆனார்.
எவ்வாறாயினும், மும்பை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நெட் சிவெர் அரைச் சதம் கடந்து நம்பிக்கை கொடுத்தார். இதனிடையே, கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை அலிஸ் கேப்சி வீசினார். 2 பந்துகளில் 3 ஓட்டங்கள் எடுத்த நிலையில் 3ஆவது பந்தை நெட் சிவெர் பௌண்டரிக்கு அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கெபிடல்ஸ் அணியை வீழ்த்தியதுடன், மகளிர் பீரிமியர் லீக் தொடரின் முதல் சம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
மும்பை அணிக்காக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நெட் சிவெர், 55 பந்துகளை எதிர்கொண்டு 7 பௌண்டரிகளுடன் 60 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார்.
சம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு 6 கோடி ரூபாவும், 2ஆவது இடம் பிடித்த டெல்லி அணிக்கு 3 கோடி ரூபாவும் பணப் பரிசாக வழங்கப்பட்டது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<