ஆஸி.க்கு எதிராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சரித்திர வெற்றி

Australia Women tour of India 2023-24

211
Australia Women tour of India 2023-24

மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி புது வரலாறு படைத்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (24) நிறைவுக்கு வந்த ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகளால் இந்தியா வெற்றிகொண்டு இந்த வரலாற்று சாதனையை படைத்தது.

இப்போட்டியில், ஸ்ம்ரித்தி மந்தனா, ஜெமிமா ரொட்றிக்ஸ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், சினே ராணா மற்றும் பூஜா வஸ்த்ரகர் ஆகிய இருவரினதும் அபார பந்துவீச்சுகள் என்பன இந்தியாவை வரலாற்று வெற்றிக்கு அழைத்துச்சென்றது.

இதில் சிறப்பம்சம் என்னவெனில் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்ற இந்திய மகளிர் அணி உலகின் முன்னணி மகளிர் கிரிக்கெட் அணிகளான இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளையும் அடுத்தடுத்து வீழ்த்தி மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சரித்திரம் படைத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா மகளிர் அணியானது ஒரேயொரு டெஸ்ட் போட்டி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 219 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

பந்துவீச்சில் பூஜா வஸ்ட்ரேகர் 4 விக்கெட்டுகளையும், சினே ராணா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடரந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி, ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி சர்மா ஆகியோரது சிறப்பான துடுப்பாட்டத்தால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 406 ஓட்டங்களைக் குவித்தது.

இதனையடுத்து 187 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் தமது 2ஆவது இன்னிங்ஸுக்காக ஆடிய அவுஸ்திரேலியா அணி 261 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக தஹ்லியா மெக்ராத் 73 ஓட்டங்களை எடுத்தார்.

இதன்படி, 75 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தமது 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதன்மூலம் முதல் முறையாக அவுஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அத்துடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான 46 ஆண்டுகால மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியாவை இந்தியா வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும்.

இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 10 டெஸ்ட்டில் விளையாடியுள்ள இந்தியா, அதில் 4இல் தோல்வியும், 6இல் சமநிலையும் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீராங்கனை சினே ராணா ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<