மேற்கிந்திய சுற்றுப்பயணத்திலிருந்து விலகும் ரங்கன ஹேரத்

235

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சுப் பயிற்றுவிப்பாளர் ரங்கன ஹேரத் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயத்தினை ரங்கன ஹேரத் இன்று (12) Cricbuzz இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் உறுதிப்படுத்தியுள்ளார். இதில் தனது குடும்பத்துடன் சிறிது காலத்தை செலவிடுவதற்கு விடுமுறை வழங்குமாறு கேட்டு அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ரங்கன ஹேரத்தின் இந்தக் கோரிக்கை தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் இயக்குனர் காலித் மஹ்முத் கருத்து வெளியிடுகையில்,

ரங்கன ஹேரத் தனது குடும்பத்துடன் சில காலம் கழிக்க அனுமதி கோரியிருந்தார். எனவே, அவர் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டார் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையில் தற்போது அரசியல் மற்றும் பொருளாதார ஸ்த்திரமின்மை காணப்பட்டாலும், இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்களாதேஷ் அணியுடன் ரங்கன ஹேரத் தொடர்ந்து பணியாற்றுவார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது ரங்கன ஹேரத் பங்களாதேஷ் அணியின் சுழல்பந்து வீச்சுப் பயிற்சியாளராக இணைந்து கொண்டார், பின்னர் அவரது ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதியில் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணம் வரை நீடிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ரங்கன ஹேரத்துக்குப் பதிலாக யார் சுழல்பந்து வீச்சுப் பயிற்சியாளராக இணைந்து கொள்வார் என்ற விடயத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இன்னும் முடிவு செய்யவில்லை. எனினும், பங்களாதேஷ் அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சுப் பயிற்சியாளர் சொஹல் இஸ்லாம் பதில் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று T20 போட்டிகள் உள்ளடங்கும். பங்களாதேஷ் அணி எதிர்வரும், ஜூன் 6 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் நோக்கி புறப்பட உள்ளது.

இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 16 முதல் 20 வரை அன்டிகுவாவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் ஜூன் 24 முதல் 28 வரையிலும் நடைபெறவுள்ளது.

இதனைத்தொடர்ந்து முதலிரெண்டு T20 போட்டிகள் முறையே ஜூலை 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் டொமினிகாவிலும், மூன்றாவது T20 போட்டி ஜூலை 7 ஆம் திகதி கயானாவிலும் நடைபெறவுள்ளது. இறுதியாக, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 10, 13 மற்றும் 16 ஆகிய திகதிகளில் கயானாவில் நடைபெற உள்ளன.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<