நடைபெற்று முடிந்திருக்கும் கிழக்கு மாகாணத்தின் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான ஸ்பீட் T-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தை 8 விக்கெட்டுக்களால் இலகுவாக வீழ்த்திய சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம், தொடரின் சம்பியனாக முடிசூடியுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் 32 உள்ளூர் அணிகள் வரையில் பங்குபெற்றியிருந்த இந்த தொடரில், முன்னதாக கல்முனை ஜிம்ஹானா விளையாட்டுக் கழகத்தினையும், நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகத்தினையும் முறையே அரையிறுதிப் போட்டிகளில் வீழ்த்திய சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் அணியினரும், ஏறாவூர் யங் ஹீரோஸ் அணியினரும் சம்பியன் கனவுகளுடன் இறுதி ஆட்டத்தில் மோதியிருந்தனர்.
தனது நோக்கத்தை வெளிப்படுத்திய தினேஷ் சந்திமால்
சாய்ந்தமருது வொலிவேரியன் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஏறாவூர் அணியின் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.
இதன்படி துடுப்பாட களமிறங்கிய ஏறாவூர் யங் ஹீரோஸ் அணியின் தொடக்க வீரர்கள், சற்று மந்த கதியிலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.
இதனையடுத்து, ஏறாவூர் அணியின் ஆரம்ப வீரர்களில் ஒருவரான இர்சாத், எதிரணிப் பந்து வீச்சாளர் ரஜீப்பினால் வீழ்த்தப்பட்டு 12 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறியிருந்தார்.
அதேபோன்று, அணியின் மற்றைய ஆரம்ப வீரரான நெளசாத் 21 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில், ஹொலி ஹீரோஸ் அணியின் முஸ்தன்சீரினால் போல்ட் செய்யப்பட்டு ஓய்வறை நோக்கி நடந்திருந்தார்.
எனினும், மத்திய வரிசையில் களமிறங்கியிருந்த இஸ்மத் தனது அணிக்காக ஓட்டங்கள் சேர்ப்பதில் முழுப்பங்கினையும் வெளிப்படுத்தியதோடு, 4 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 29 பந்துகளில் 36 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.
பின்வரிசையில் ஆடியிருந்த வீரர்களில் றியால்டீனை தவிர ஏறாவூர் யங் ஹீரோஸ் அணியின் எந்த வீரரும் 20 இற்கு மேலாக ஓட்டங்களை சேர்க்கவில்லை.
இதனால், 20 ஓவர்கள் நிறைவில் அவ்வணி 9 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.
சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் அணியின் பந்து வீச்சில், பொன்சேக்கா வெறும் 17 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும், ரஜீப் 2 விக்கெட்டுக்களையும் ஹக்ரம், றிசாத், தனீஸ் மற்றும் முஸ்தன்சீர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து, இலகு வெற்றியிலக்கான 129 ஓட்டங்களினை தமது சொந்த மைதானத்தில் பெறுவதற்காக பதிலுக்கு ஆடிய ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம், ஆரம்ப துடுப்பாட்ட வீரரான றில்பானின் அதிரடியுடன் போட்டியின் 18 ஆவது ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 130 ஓட்டங்களினைப் பெற்று வெற்றி இலக்கினை அடைந்தது.
இதில், அணியின் வெற்றிக்காக போராடியிருந்த றில்பான் வெறும் 46 பந்துகளை மாத்திரமே சந்தித்து 3 அபார சிக்ஸர்கள் மற்றும் 9 பெளண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்களினை விளாசியிருந்தார்.
ஹொலி ஹீரோஸ் கழகத்தில் பறிபோயிருந்த இரண்டு விக்கெட்டுக்களையும் ஆளுக்கு ஒவ்வொன்று வீதம், நெளசாத் மற்றும் இர்சாத் ஆகியோர் கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக தனது அபார துடுப்பாட்ட திறமையினை வெளிக்காட்டியிருந்த ஹொலி ஹீரோஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் றில்பான் தெரிவாகியிருந்தார்.
சர்வதேச வெற்றிகளை தந்தைக்கு சமர்ப்பணம் செய்யும் சாதனை நாயகன் கணேசராஜா சினோதரன்
போட்டியின் சுருக்கம்
ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் – 128/9 (20) இஸ்மத் 36(29), நெளசாத் 21(19), றியால்டீன் 20(18), பொன்சேக்கா 17/3 (4)
சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் – 130/2 (17.2) றில்பான் 76(46)
போட்டி முடிவு – சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி
விருதுகள்
- இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் – றில்பான் (சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம்)
- சிறந்த பந்து வீச்சாளர் – SM. நஜாத் (நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகம்)
- சிறந்த துடுப்பாட்ட வீரர் – நெளசாத் (ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம்)
- சிறந்த விக்கெட் காப்பாளர் – M. அப்ரார் (கிண்ணியா கிங்ஸ் நஷனல் விளையாட்டுக் கழகம்)
- தொடர் நாயகன் – JM. றிசாட் (சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம்)
- சிறந்த களத்தடுப்பாளர் – முஸ்பிக் (சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம்)