கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் கிரிக்கெட் கழக அணிகள் மோதிக்கொள்ளும் மாபெரும் சமரான, ஸ்பீட் T-20 சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர், மார்ச் 5 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக சாய்ந்தமருது வொலிவேரியன் பொது மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
பிமா விளையாட்டுக் கழகம் மற்றும் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் என்பவற்றின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் இம்மாபெரும் தொடரில், கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் இருந்து (அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை) பிரபல்யமான 32 கழக அணிகள் மோதிக்கொள்ளவுள்ளன.
அசேல குணரத்னவின் அதிரடி துடுப்பாட்டத்தினால் டி20 தொடரை கைப்பற்றியது இலங்கை
சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில்..
“ஒற்றுமைக்கான கிரிக்கெட்” (Cricket for Unity) என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும், மாகாணத்தில் உள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்களை உள்ளடக்கிய அணிகளுக்கு இடையே நடாத்தப்படவுள்ளமையினால், இது மூவின மக்களுக்கும் இடையில் நட்புறவினை மேம்படுத்தும் விதமாக அமையவுள்ளது.
இத்தொடரின், ஆரம்ப நிகழ்வு பெப்ரவரி 24ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அன்றிலிருந்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக போட்டிகள் இடம்பெறவுள்ளன.
தொடரில் பங்கு கொள்ளும் 32 அணிகளும் 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, முதல் சுற்றில் சுழற்சி முறையில் (League System) மோதிக்கொள்ளும். இதனையடுத்து, தத்தமது குழுக்களில் பெற்ற வெற்றி, தோல்விகளின்படி பெற்றுக்கொள்ளும் புள்ளிகளின் அடிப்படையில் குழுக்களில் முதல் இரண்டு இடங்களையும் பெறும் அணிகள் அடுத்த கட்டமான காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்படும். காலிறுதிச் சுற்று நொக்அவுட் முறைப்படி இடம்பெறவுள்ளன.
தொடரின் பிரதான அனுசரணையாளராக, இந்தியாவின் முன்னணி விளையாட்டு உபகரண தயாரிப்பாளரான ஸ்பீட் ஸ்போட்ஸ் நிறுவனம் விளங்குகின்றது. அத்துடன், தொடரிற்கு இணை அனுசரணையாளராக ஸ்பீட் ஸ்போட்ஸ் நிறுவனத்தின் விளையாட்டு உபகரணங்களை தீவு முழுவதிலும் விநியோகிப்பதில் முதன்மையாளராகத் திகழும் கஸானா ஸ்போட்ஸ் நிறுவனம் (KHAZANA SPORTS) இருக்கின்றது.
இந்த சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை போட்டியின் ஏற்பாட்டுக்குழு, நேற்று (19) சாய்ந்தமருது Sea Breeze ஹோட்டலில் நடாத்தியிருந்தது.
இதில், கல்முனை ஸாஹிரா கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரியரும், இத்தொடரின் இணை ஏற்பாட்டாளர்களான ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக தலைவர் A. ஆதம்பாவா, ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர்கள், தொடரில் பங்குபற்றும் அணிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இத்தொடரில் பங்குபற்றும் அணிகளுக்கு தொடர் பற்றிய விளக்கத்தையும், விதிமுறைகளையும் போட்டித் தொடரின் பிரதம அமைப்பாளரும், ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் பொதுச் செயலாளருமான அலியார் பைஸர் தெளிவுபடுத்தினார்.
அங்கு இத்தொடர் குறித்து கருத்து தெரிவித்த அவர்,
“இலை மறை காய்களாக திகழும், கிழக்கு மாகாண கிரிக்கெட் வீரர்களின் திறமையினை வெளிக்கொண்டு வர ஒரு களம் அமைத்துள்ளோம். இத்தொடரினை ஆரம்பிக்க எமக்கு பிரதான அனுசரணையாளராக செயற்பட்டவர்களுக்கும் ஏனைய அனுசரணையாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன், இத்தொடரிற்கு தனது பங்களிப்பினை வழங்க முன்வந்திருக்கும் Thepapare.com இற்கும் விசேட நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். “ என்றார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், இத்தொடர் சிறப்பாக நடைபெறும் என தனது தன்னம்பிக்கையினை வெளியிட்டதோடு, இத்தொடரில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் போட்டி நடுவர்களுக்கு தனது நன்றியினையும் தெரிவித்தார்.
அத்துடன், வரும் காலங்களில் இத்தொடரினை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடாத்த தொடர் ஏற்பாட்டுக்குழு உத்தேசித்திருப்பதாகவும் பைஸர் மேலும் தெரிவித்திருந்தார்.
ஊடக நிகழ்விற்கு விசேட அதிதியாக அழைக்கப்பட்டிருந்த கஸானா ஸ்போட்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி, M. அஸ்கர் அலி கருத்து தெரிவிக்கையில், ”இத்தொடரில் சிறப்பாக செயற்படும் ஐந்து வீரர்களுக்கு, தமது அனுசரணையின் கீழ் இருக்கும், இலங்கையின் முதல்தர கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழக அணியின் 23 வயதுக்குட்பட்ட குழாத்தில் விளையாட வாய்ப்பு பெற்றுத்தர தேர்வாளர்களிடம் பேசியுள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இலங்கை தேசிய அணியில் பிரகாசித்த அசேல குனரத்ன, சீக்குகே பிரசன்ன மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகிய முக்கிய வீரர்களை தன்னகம் கொண்டிருந்த ஒரு கழகமாக இராணுவப்படை விளையாட்டுக் கழகம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தொடரில் சம்பியனாகும் அணிக்கு கிண்ணத்துடன் 50,000 ரூபாய் பணப்பரிசாக வழங்கப்படவுள்ளதோடு, 50,000 ரூபாய் பெறுமதியான ஸ்பீட் கிரிக்கெட் உபகரணங்களும் வழங்கப்படும். அதேபோன்று, தொடரில் இரண்டாம் இடத்தினைப் பெறும் அணி 25,000 ரூபாய் பணப்பரிசையும் 25,000 ரூபாய் பெறுமதியான ஸ்பீட் கிரிக்கெட் உபகரணங்களையும் பெற்றுக்கொள்ளும்.
அத்துடன், இத்தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் ஆட்ட நாயகனாக வரும் ஒவ்வொரு வீரருக்கும் கேடயம் வழங்கப்படவுள்ளதுடன், போட்டியின் இறுதியில் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயற்படும் வீரர்களுக்கும் கிரிக்கெட் உபகரணங்கள் பரிசாகப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
தொடரில் பங்குகொள்ளும் அணிகள்
குழு A
வளர்பிறை விளையாட்டுக் கழகம், ஓட்டமாவடி
ரீனவ்ன் விளையாட்டுக் கழகம், கல்முனை
கெலிஓன்ஸ் விளையாட்டுக் கழகம், மாளிகைக்காடு
ஹரிகேன்ஸ் விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது
குழு B
கிங்க்ஸ் நெசனல் விளையாட்டுக் கழகம், கிண்ணியா
அஷ்-ஷம்ஸ் விளையாட்டுக் கழகம், கல்முனை
ஒஸ்மானியன் விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது
ரியல் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம், கல்முனை
குழு C
யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம், ஏறாவூர்
சீ ஸ்டார் விளையாட்டுக் கழகம், கல்முனை
டொப் ரேங் விளையாட்டுக் கழகம், கல்முனை
SSC விளையாட்டுக் கழகம், சம்மாந்துறை
குழு D
நைட் ரைடர்ஸ் விளையாட்டுக் கழகம், காத்தன்குடி
ப்ரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது
லெஜென்ட்ஸ் விளையாட்டுக் கழகம், கல்முனை
ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது
குழு E
சாட்டோ விளையாட்டுக் கழகம், ஓட்டமாவடி
முபோ விளையாட்டுக் கழகம், சம்மாந்துறை
விவேகானந்தா விளையாட்டுக் கழகம், காரைதீவு
பிளையிங் ஹொர்ஸஸ் விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது
குழு F
வெஸ்டன் வொரியர்ஸ் விளையாட்டுக் கழகம், மூதூர்
யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம், கல்முனை
ரியல் பவர் விளையாட்டு கழகம், மாளிகைக்காடு
லம்கோ விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது
குழு G
ரியல் பைட்டர்ஸ் விளையாட்டுக் கழகம், தோப்பூர்
நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது
ஏஜ் ஸ்டீல் விளையாட்டுக் கழகம், சாய்ந்தமருது
ஜிம்ஹானா விளையாட்டுக் கழகம், கல்முனை
குழு H
லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம், மட்டக்களப்பு
இம்ரான் விளையாட்டுக் கழகம், நிந்தவூர்
விக்டோரியஸ் விளையாட்டுக் கழகம், கல்முனை
தொபஸிஷ் விளையாட்டுக் கழகம், கல்முனை
போட்டித் தொடரின் அட்டவணை இன்னும் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என போட்டி ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. இத்தொடர் தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள ThePapare.com உடன் இணைந்திருங்கள்.
அத்துடன், இத்தொடரின் இணைய ஊடக அனுசரனையாளராக இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையதளமான ThePapare.com செயற்படவுள்ளது.