இலங்கையில் ஐ.சி.சி இன் ஊழல் அதிகாரியொருவரை நியமிக்க இணக்கம்

300

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் ஒழிப்புப் பிரிவினால் விசேட அறிக்கையொன்று நேற்றைய தினம் (27) கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ள ஊழல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஐ.சி.சி தனது சிரேஷ்ட அதிகாரியொருவரை இலங்கையில் பணியாற்றுவதற்காக நியமிக்கவுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டுபாயில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் ஒழிப்புப் பிரிவு முகாமையாளர் அலெக்ஸ் மாஷல் உள்ளிட்ட அதிகாரிகளை நேற்றைய தினம் சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு அவர்களிடம் உறுதிபட தெரிவித்துள்ளதாக அமைச்சரின் டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் ஐ.சி.சி அதிகாரிகளுடன் சாதகமான சந்திப்பொன்றை மேற்கொண்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் என்னிடம் அறிக்கையொன்றை கையளித்தனர் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதற்காக சிரேஷ்ட அதிகாரியொருவரை நியமிக்கவுள்ளதாக தெரிவித்ததாகவும் அமைச்சர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்காலத் திட்டங்கள் குறித்து மேலும் கலந்துரையாடுவதற்கு, ஐ.சி.சி இன் தலைவர் டேவிட் ரிச்சட்சனை சந்திப்பதற்கும் அமைச்சர் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஐ.சி.சி இன் ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுடனான சந்திப்பின் பிறகு BBC சிங்கள செய்திச் சேவைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ வழங்கிய விசேட செவ்வயில்,

”சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நாங்கள் கலந்துரையாடினோம். எமது பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. எதிர்வரும் காலங்களில் ஐ.சி.சி இன் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரியொருவர் இலங்கையில் நிரந்தரமாக இருந்து பணியாற்றவுள்ளார். அதேபோன்று அவர்கள் இதுவரை மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கையொன்றையும் என்னிடம் கையளித்தனர். எனவே இன்னும் சில தினங்களின் ஐ.சி.சி இன் தலைவரை சந்திக்க எதிர்பார்த்துள்ளேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய விளையாட்டு அமைச்சரின் அவதானம் கிரிக்கெட்டில்

ஜனாதிபதி மாளிகையில் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால ….

இது இவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதிக்கு முன் நடத்த வேண்டும் என ஐ.சி.சி ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும், இலங்கை கிரிக்கெட்டில் நிலவிவருகின்ற ஊழல்களை முற்றுமுழுதாக முடிவுக்கு கொண்டுவந்து சுயாதீனமான தேர்தல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும், அதுவரை இடைக்கால நிர்வாக சபையொன்றை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதன்படி, 2019 உலகக் கிண்ணப் போட்டிகள் முடியும் வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு இடைக்கால நிர்வாக சபையொன்றை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் ஐ.சி.சி இன் அவைத் தலைவர் ஷஷாங் மனோகரை இந்தியாவில் வைத்து சந்திக்கவுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சரின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<