பொதுநலவாய போட்டிகளுக்கான இலங்கை வீரர்கள் எண்ணிக்கை குறைப்பு

205

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் 13 வகையான போட்டிகளுக்காக 87 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்து. இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சினால் இதுதொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் பரிந்துரைப்படி 8 வகையான விளையாட்டுகளுக்காக 33 வீரர்களை மாத்திரமே குறித்த போட்டித் தொடருக்கு அனுப்பிவைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மட்ட வீரர்களுக்கு விளையாட்டு அமைச்சினால் கொடுப்பனவு மழை

இவ்வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் …

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் 13 வகையான போட்டிகளுக்காக இலங்கை சார்பில் 87 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கடந்த மாதம் முற்பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதன்படி, மெய்வல்லுனர், பளுதூக்கல், மல்யுத்தம், குத்துச்சண்டை, நீச்சல், மேசைப்பந்து, எழுவர் ரக்பி, கடற்கறை கபடி, கடற்கரை கரப்பந்தாட்டம், துப்பாக்கி சுடுதல், ஜிம்னாஸ்டிக், பெட்மிண்டன், ஸ்குவாஷ் மற்றும் சைக்கிளோட்டம் ஆகிய போட்டிகளுக்காக இலங்கையிலிருந்து வீரர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதிலும் முக்கியமாக அடைவு மட்டத்தை பூர்த்தி செய்த பதக்கங்களை வெல்லக்கூடியவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் மட்டுமே அனுப்பப்படுவர் எனவும், வெறுமனே வீரர்களையும், அதிகாரிகளையும் அனுப்பி அரசின் பணத்தை வீணடிக்க தயாரில்லை எனவும் தெரிவித்த அமைச்சர், அதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இதன்படி, குறித்த போட்டித் தொடரில் இலங்கை பங்கேற்கவுள்ள விளையாட்டுக்கள் மற்றும் வீரர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விளையாட்டுத்துறை அமைச்சினால் சுனில் குணவர்தன தலைமையில் 5 பேர் கொண்ட விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. இக்குழுவில் மெய்வல்லுனர் தெரிவுக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க, தேசிய விளையாட்டு வைத்திய பிரிவின் பணிப்பாளர் லக்ஷ்மன் எதிரிசிங்க, விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.பி விஜேரத்ன மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முன்னாள் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க உள்ளிட்டோர் இடம்பெற்றிந்தனர்.

இந்நிலையில், இம்முறை பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழா தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் விசேட அறிக்கை கடந்த மாதம் 25ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இவ்விசேட அறிக்கையின் படி, இம்முறை பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர், பளுதூக்கல், மல்யுத்தம், ஸ்குவாஷ், நீச்சல், கடற்கரை கரப்பந்தாட்டம், குத்துச்சண்டை மற்றும் துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட 8 வகையான விளையாட்டுகளுக்கு 33 வீரர்களை மாத்திரமே அனுப்ப முடியும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம், எழுவர் ரக்பி, பெட்மின்டன், சைக்கிளோட்டம், ஜிம்னாஸ்டிக் மற்றும் மேசைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மெய்வல்லுனர் விளையாட்டுக்காக 7 போட்டிப் பிரிவுகளில் 12 வீரர்கள் பங்குபற்ற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதில் 4X400 அஞ்சலோட்டம்(ஆண்கள்), ஈட்டி எறிதல், உயரம் பாய்தல், முப்பாய்ச்சல், குறுந்தூர மற்றும் நீண்ட தூர ஓட்டப் போட்டிகள் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன், பளுதூக்கலில் 6 வீரர்களும், குத்துச்சண்டையில் 4 வீரர்களும், நீச்சல் போட்டிகளுக்காக 3 வீரர்களும், கடற்கரை கரப்பந்தாட்டத்துக்கு 2 வீரர்களும், மல்யுத்தத்துக்காக 2 வீரர்களும், ஸ்குவஷ் விளையாட்டுக்காக ஒரு வீரரும், துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்காக 3 வீரர்களும் இவ்வாறு பங்குபற்ற முடியும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உபாதைகள் அற்ற கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே.. இதன் முதல்கட்ட செயலமர்வு கடந்த சில…

இதேவேளை, ஒவ்வொரு விளையாட்டுக்குமான தேசிய சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட விசேட பேச்சுவார்த்தை மற்றும் வீரர்களின் திறமைகள், பொதுநலவாய மற்றும் ஆசிய போட்டிகளின் அடைவுமட்டங்களைக் கருத்திற்கொண்டு இவ்வீரர்கள் குழாம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டும் முக்கியமான பரிந்துரைகளை இக்குழுவினரால் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.