முக்கிய வேகப் பந்துவீச்சாளரை இழக்கும் நியூசிலாந்து அணி?

ICC World Cup 2023

242
TIM SOUTHEE

நாளை (21) சத்திரசிகிச்சை ஒன்றுக்கு முகம் கொடுக்கவிருக்கும் நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளரான டிம் சௌத்தி இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தின் நியூசிலாந்து அணியில் இடம்பெறுவது சந்தேகத்திற்கு இடமாகியிருக்கின்றது. 

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளரான டிம் சௌத்தி இந்த மாத ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நியூசிலாந்தின் 15 பேர் அடங்கிய வீரர்கள் குழாத்தில் உள்வாங்கப்பட்டிருந்தார்.

>> தோல்வியால் தொடர்ந்து கவலை அடையத்தேவை இல்லை – கிறிஸ் சில்வர்வூட்

எனினும் தனக்கு ஏற்பட்டிருக்கும் கட்டை விரல் உபாதைக்கு டிம் சௌத்தி நாளை சிகிச்சை மேற்கொள்ளவிருக்கும் நிலையில் இந்த சத்திரசிகிச்சையின் பின்னரே டிம் சௌத்தி உலகக் கிண்ணத்தில் பங்கெடுப்பது தொடர்பிலான இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது 

அந்தவகையில் நியூசிலாந்து கிரிக்கெட் சபை (NZC) வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு அமைய டிம் சௌத்தி உலகக் கிண்ணத்தில் விளையாடுவது அடுத்த வாரமளவில் உறுதி செய்யப்படும் என நம்பப்படுகின்றது 

ஒருநாள் உலகக் கிண்ணத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள அணிகளை மாற்றுவதற்கு இம்மாதம் 28ஆம் திகதி வரை காலக்கேடு வழங்கப்பட்டுள்ள நிலையில், டிம் சௌத்தி இல்லாமல் போகும் சந்தர்ப்பத்தில் நியூசிலாந்து புது வேகப் பந்துவீச்சாளர் ஒருவருக்கு உலகக் கிண்ணத்தில் வாய்ப்பு வழங்க முடியும் 

இதேநேரம் நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளரான கேரி ஸ்டேட் டிம் சௌத்தியின் சத்திரசிகிச்சை தொடர்பில் நேர்மறையான முடிவு ஒன்றை எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார் 

>> ஒருநாள் உலகக் கிண்ண இங்கிலாந்து அணியில் மாற்றம்

நியூசிலாந்து அணி உலகக் கிண்ணத்தில் தமது முதல் போட்டியினை இங்கிலாந்து அணியுடன் ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி விளையாடவிருப்பதோடு உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் (செப்டம்பர் 29), தென்னாபிரிக்கா (ஒக்டோபர் 02) ஆகிய நாடுகளுடன் உலகக் கிண்ண பயிற்சி ஆட்டங்களில் ஆடவிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது 

அதேநேரம் பங்களாதேஷ்நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (21) டாக்காவில் ஆரம்பமாகின்றது 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<