SAG கபடியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றது இலங்கை

350

தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கபடி போட்டிகளில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த இலங்கை அணி, வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

பலம் மிக்க இந்திய அணியை எதிர்கொண்ட இலங்கை ஆண்கள் கபடி அணி முதற்பாதியில் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. எனினும், இந்திய அணி 28-11 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையை பெற்றுக்கொண்டது.

ஒரு வெற்றியுடன் ஆசிய விளையாட்டு விழாவை முடிக்கும் இலங்கை ஆடவர் கபடி அணி

தற்பொழுது இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இடம்பெற்று….

இதனைத் தொடர்ந்து ஆரம்பமாகிய இரண்டாவது பாதியில் இலங்கை அணி, சவால் கொடுக்கும் என எதிர்பார்த்த போதும், மிக இலகுவாக முன்னேறிய இந்திய அணி 51-18 என்ற மிகப் பெரிய புள்ளிகள் வித்தியாசத்துடன் போட்டியை வெற்றிக்கொண்டது.

இதன்படி, போட்டியில் வெற்றிபெற்ற இந்திய ஆண்கள் அணி தங்கப் பதக்கத்தை வெற்றிக்கொண்டதுடன், இலங்கை அணி முதற்தடவையாக தெற்காசிய விளையாட்டு விழா கபடி போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வெற்றிக்கொண்டது.

இதேவேளை, இலங்கை மகளிர் கபடி அணியானது பங்களாதேஷ் அணியை வீழ்த்தி, பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வெற்றிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நான்காவது நாள் போட்டி முடிவுகள்

தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான கபடி போட்டிகளில் இலங்கை அணி, பங்களாதேஷ் அணியை வீழ்த்தி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தெற்காசியாவில் கபடி போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அதிகம் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. எனினும், இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சித் தோல்வியினை வழங்கியிருந்தது.

இந்தநிலையில், இன்று (08) நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேற இலங்கை அணிக்கு வாய்ப்பிருந்த நிலையில், அந்த அணியை 35-20 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை வீழ்த்தியது.

போட்டியில் முதற்பாதியில் 17-10 என்ற முன்னிலையை பெற்றுக்கொண்ட இலங்கை அணி, இரண்டாவது பாதியிலும் அபாரமாக ஆடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இலங்கை அணி இறுதிப் போட்டியில் பலம் மிக்க இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

மூன்றாவது நாள் போட்டி முடிவுகள்

தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இன்று (06) நடைபெற்ற கபடி போட்டிகளின் அடிப்படையில், இலங்கை ஆண்கள் அணியானது நேபாளம் அணியை வெற்றிக்கொண்டதுடன், இலங்கை பெண்கள் அணி ஒரு புள்ளியால் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது.

Photos: Day 07 | South Asian Games 2019

ThePapare.com | Dinushki Ranasinghe | 07/12/2019 Editing and….

இலங்கை ஆண்கள் அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியிருந்த போதும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியிடம் படுதோல்வியை சந்தித்திருந்தது. 

எனினும், இன்று நடைபெற்ற நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி போட்டித் தொடரில் தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ளது. இலங்கை ஆண்கள் அணி 34-22 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாளம் அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியிருந்தது.

பங்களாதேஷ் பெண்கள் மற்றும் இலங்கை பெண்கள் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற விறுவிறப்பான போட்டியில், பங்களாதேஷ் மகளிர் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுக்கொண்டது.

போட்டியின் முதல் பாதியில் இலங்கை மகளிர் அணி 9-7 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்த போதும், இரண்டாவது பாதியின் இறுதியில் 17-16 என்ற புள்ளிகள் கணக்கில் பங்களாதேஷ் அணி வெற்றியை தனதாக்கியது.

இரண்டாவது நாள் போட்டி முடிவுகள்

நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இன்று (05) நடைபெற்ற கபடி போட்டிகளில், இலங்கை ஆண்கள் கபடி அணி, இந்தியா அணியிடம் தோல்வியை சந்தித்ததுடன், மகளிர் அணியும் தோல்வியை தழுவியது.

#RoadtoSAG | இந்தியன் கபடி லீக்கில் விளையாடிய முதல் இலங்கை வீரர் SINOTHARAN

இலங்கை கபடி அணிக்காக ஒரு தசாப்தங்ளாக விளையாடிவரும்….

இன்று காலை நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை ஆண்கள் அணி, 49-16 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது. முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 25-9 முதற்பாதியில் முன்னிலை வகித்ததுடன், இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை செலுத்தி இலகுவாக வெற்றிபெற்றது.

பெண்களுக்கான இன்றைய கபடி போட்டியில், நேபாளம் அணியை எதிர்கொண்ட இலங்கை மகளிர் அணி கடுமையாக போராடிய போதும் 28-24 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

முதல் நாள் போட்டி முடிவுகள்

நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இன்று (04) ஆரம்பமாகிய கபடி போட்டிகளில், இலங்கை ஆண்கள் அணி முதல் வெற்றியை பெற்றதுடன், இலங்கை மகளிர் அணி தோல்வியை சந்தித்தது.

பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற தங்களுடைய முதல் போட்டியில் இலங்கை கபடி அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. முதற்பாதியில் 17-09 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்த இலங்கை அணி, இரண்டாவது பாதியில் 29-27 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை தக்கவைத்தது.

இதன்படி முக்கிய அம்சமாக, உலகின் மூன்றாவது நிலையை பிடித்திருக்கும் பாகிஸ்தான் அணியை, இலங்கை கபடி அணி தோல்வியடையச் செய்து அதிர்ச்சித் தோல்வியையும் பரிசாக வழங்கியுள்ளது.

அதேநேரம், பெண்களுக்கான முதல் சுற்றுப் போட்டிகளில் இன்றைய தினம் தங்களுடைய முதல் போட்டியில் இலங்கை அணி பலம் மிக்க இந்திய மகளிர் அணியை எதிர்கொண்டு விளையாடியது.

குறித்த இந்தப் போட்டியில் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணி ஆதிக்கத்தை செலுத்தியது. குறிப்பாக அதிகமான ரெய்ட் புள்ளிகளை பெற்றுக்கொண்ட இந்திய மகளிர் அணி, முதல் பாதியில் 25-06 என்ற புள்ளிகள் கணக்கில் மிகச்சிறந்த முன்னிலையை பெற்றுக்கொண்டது.

Photos: Day 4 | South Asian Games 2019

ThePapare.com | Dinushki Ranasinghe | 04/12/2019 Editing and….

இரண்டாவது பாதியில் இலங்கை அணி முன்னேற்றம் அடையும் என்ற எதிர்பார்த்த போதிலும், இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தி 53-14 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவாக வெற்றிபெற்றது.

தெற்காசிய விளையாட்டு விழா கொடர்பான மேலதிக தகவல்களை படிக்க