மற்ற துறைகளைப் போன்று விளையாட்டுத்துறையிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். அதிலும் இலங்கையைச் சேர்ந்த பெண்களும் விதிவிலக்கானவர்கள் அல்ல. அதுமாத்திரமன்றி இலங்கை முஸ்லிம் பெண்கள் விளையாட்டுத்துறையில் சாதிப்பது மிகவும் அரிது என்று சொல்லலாம்.

பொதுவாக பாகிஸ்தான், ஈரான் மற்றும் மலேஷியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய கலாச்சார ஆடையான ஹிஜாப் அணிந்து விளையாடுவதை அதிகம் பார்த்துள்ளோம்.

SAG போட்டிகளில் 250 பதக்கங்களை வென்று வரலாறு படைத்த இலங்கை

நேபாளத்தின் கத்மண்டு மற்றும்…..

ஆனால் இலங்கையை போன்ற பெரும்பான்மையாக சிங்கள மக்கள் வாழ்கின்ற நாடொன்றில் இருந்து முஸ்லிம் வீராங்கனையொருவர் ஹிஜாப் அணிந்து விளையாடியது இதுவே முதல் தடவை என்று சொல்லலாம்.

அதுவும், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அண்மைக்காலத்தில் சர்வதேசப் போட்டியொன்றில் விளையாடி பதக்கம் வென்ற முதல் ஹிஜாப் அணிந்த வீராங்கனை பாத்திமா சலிஹா இஸ்ஸடீன் என்றால் மிகையாகாது.

தெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விளையாட்டு விழா என்றழைக்கப்படும் தெற்காசிய விளையாட்டு விழாவின் 13 ஆவது அத்தியாயம் கடந்த வாரம் நேபாளத்தில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

கடந்த காலங்களைக் காட்டிலும் இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக போட்டியிட்ட தமிழ் பேசுகின்ற வீரர்கள் தனிநபர் மற்றும் குழுநிலைப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை சுவீகரித்திருந்தனர்.

இதில் குழு நிலைப் போட்டியான ஸ்குவாஷ்  (SQUASH) ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் இலங்கை அணி வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டதுடன், பெண்கள் அணியில் பாத்திமா சலிஹா பெதும் இஸ்ஸடீன், சமீரா ருக்ஷானா டீன் ஆகிய இரண்டு முஸ்லிம் வீராங்கனைகள் இடம்பிடித்தருந்தனர்.

இந்த வெற்றியுடன் பாத்திமா சலிஹாவின் பெயர்தான் அதிகளவில் பேசப்பட்டதுடன், போட்டியின் பின்னர் அவருடைய புகைப்பட்டங்கள் சமூகவலைத்தளங்கள் வாயிலாக வைரலாக பரவின.

இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களும் அவருக்கான வாழ்த்துக்களை அள்ளி அள்ளி வழங்கியிருந்தனர். அதற்குக் காரணம் பாத்திமா சலிஹா அணிந்த ஹிஜாப்தான்.

இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் அண்மைக்காலத்தில் சர்வதேச போட்டியொன்றில் ஹிஜாப் அணிந்து கொண்டு பதக்கம் வென்ற முதல் வீராங்கனையாக அவர் இடம்பிடித்தார்.

யார் இந்த பாத்திமா சலிஹா..?

பாத்திமா சலிஹாவின் தந்தை ஒரு வியாபாரி ஆவார். நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய இடங்களில் ஹோட்டல்களை நடத்தி வருகின்றார். அவருடைய தாய் ஒரு ஆசிரியை. கொழும்பில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கற்பித்து வருகின்றார்.

அத்துடன், ஐந்து ஆண் பிள்ளைகளைக் கொண்ட வீட்டில் பாத்திமா சலிஹா மட்டும் தான் ஒரேயொரு பெண் பிள்ளை. வீட்டில் செல்லப் பிள்ளையான அவர் சிறுவயது முதல் கல்வியைபைப் போல விளையாட்டிலும் அதீத திறமைகளை வெளிப்படுத்தி வந்தார்.

பம்பலப்பிட்டி புனித கன்னியாஸ்திரிகள் மடத்தில் கல்வி கற்ற பாத்திமா சலிஹா, ஆரம்ப காலத்தில் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்தார். எனினும், பிற்காலத்தில் தனது சகோதரர்களைப் பார்த்து ஸ்குவாஷ் விளையாட்டுக்கு மாறினார்.

அதிலும் குறிப்பாக பாத்திமா சலிஹாவின் ஐந்து சகோதரர்களும் ஸ்குவாஷ் விளையாடிய வீரர்கள் ஆவர். இதில் மூத்த சகோதரரான யாசிர் இஸ்ஸடீன் பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்களில் ஒருவர்.

சலிஹாவின் இரண்டாவது சகோதரர் யாகுப் இஸ்ஸடீன் தேசிய நீச்சல் வீரர் ஆவார். அத்துடன், 3ஆவது மற்றும் 4ஆவது சகோதரர்களான யாசின், யூசுப் ஆகிய இருவரும் தேசிய கனிஷ்ட ஸ்குவாஷ் வீரர்கள் ஆவர்.

இதேநேரம், சலிஹாவின் கடைசி சகோதரரான இம்ரான், நீர்நிலை போட்டிகளில் ஒன்றான வோட்டர் போலோ (Water Polo) வீரராக உள்ளார்.

சலிஹாவின் ஆரம்பம்

12,13 மற்றும் 14 ஆகிய வயதுப் பிரிவுகளில் இலங்கையின் முதல் நிலை கனிஷ்ட டென்னிஸ் வீராங்கனையாக வலம்வந்த பாத்திமா சலிஹா, 2012 இல் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட டென்னிஸ் போட்டிகளில் இலங்கையை முதல் தடவையாக பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஏழு வயது முதல் ஸ்குவாஷ் விளையாடிய சலிஹா, தனது 11ஆவது வயதில் டென்னிஸ் விளையாட்டுக்கு மாறினார். இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் ஸ்குவாஷ் விளையாட்டுக்கு அவர் மாறினார்.

தனது 9ஆவது வயதில் கனிஷ்ட ஸ்குவாஷ் சம்பியனாக வலம்வந்த சலிஹா, 11ஆவது வயதில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து 13ஆவது மற்றும் 15ஆவது ஆகிய வயதுப் பிரிவுகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்ட அவர், 17 மற்றும் 19 ஆகிய வயதுப் பிரிவில் தேசிய ஸ்குவாஷ் சம்பியனாக முடிசூடினார்.

அதன்பிறகு தேசிய மட்ட திறந்த ஸ்குவாஷ் போட்டிகளில் தொடர்ச்சியாக 3 வருடங்கள் இறுதிப் போட்டி வரை முன்னேறி இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற இலங்கை விமானப்படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மட்ட ஸ்குவாஷ் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட பாத்திமா சலிஹா, இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசிய மட்ட பகிரங்க ஸ்குவாஷ் போட்டியிலும் சம்பியனாகத் தெரிவானார்.

இதேநேரம், COLOMBO SSC கழகத்தினால் வருடாந்தம் நடத்தப்பட்டு வருகின்ற தேசிய மட்ட ஸ்குவாஷ் போட்டியில் கடந்த வருடத்தைப் போல இவ்வருடமும் பெண்கள் பிரிவில் அவர் சம்பியனாகத் தெரிவானார்.

இந்த அனைத்து வெற்றிகளுடன் பாத்திமா சலிஹா தற்போது பெண்கள் பிரிவில் இலங்கையின் முதல்நிலை ஸ்குவாஷ் வீராங்கனையாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

சர்வதேச வெற்றிகள்

தனது 15ஆவது வயதில் பாகிஸ்தானின் காரச்சியில் நடைபெற்ற சர்வதேச ஸ்குவாஷ் சம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்ட பாத்திமா சலிஹா, அதன்பிறகு 2016 இல் குவைட்டில் நடைபெற்ற சிரேஷ்ட வீரரகளுக்கான ஆசிய ஸ்குவாஷ் சம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதனையடுத்து கடந்த வருடம் தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய ஸ்குவாஷ் குழுநிலை சம்பியன்ஷிப் போட்டியில் 6ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை அணியின் உறுப்பினராகவும் அவர் இருந்தார்.

இந்த வெற்றியானது ஆசிய மட்டத்தில் இலங்கை ஸ்குவாஷ் அணி பெற்றுக் கொண்ட வரலாற்று வெற்றியாகவும் பதிவாகியது.

அதேபோல, கடந்த வருடம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக பெண்களுக்கான தனிநபர் ஸ்குவாஷ் போட்டியில் பங்குகொண்ட பாத்திமா சலிஹா, காலிறுதிக்கு முந்தைய சுற்றுவரை முன்னேறியிருந்தார்.

SAG போட்டிகள்

2016ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாத்தியில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக பெண்களுக்கான தனிநபர் மற்றும் குழுநிலைப் போட்டிகளில் பங்குபற்றிய பாத்திமா சலிஹா, குழுநிலைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

அதேபோல, இவ்வருடம் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் தனிநபர் பிரிவில் காலிறுதி வரை முன்னேறிய அவர், பெண்களுக்கான குழுநிலை ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

வைரலாகிய புகைப்படம்

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் வெண்கலப் பதக்கம் வென்ற பாத்திமா சலிஹாவின் ஹிஜாப் அணிந்த புகைப்படம் சமூகவலைத்தளங்கள் ஊடாக வைரலாக பரவியது. இதற்கு பலரும் பல்வேறு விதத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், குறித்த புகைப்படம் குறித்து பேசிய சலிஹா, முதலில் எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கம் வெல்லக் கிடைத்தமை தொடர்பில் மிகவும் சந்தோஷப்பட்டேன். நாங்கள் சிங்களம், தமிழ், முஸ்லிம்களாக போட்டிகளில் பங்குபற்றினாலும் நாம் அனைவரும் இலங்கையர்கள்.

அதேபோல, எனது புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவியதுடன், அதற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

அந்தப் புகைப்பட்டம் இவ்வருடம் மலேஷியாவில் நடைபெற்ற சிரேஷ்ட வீரர்களுக்கான ஆசிய தனிநபர் ஸ்குவாஷ்  போட்டியின் போது எடுக்கப்பட்டது. அதை நான் எனது முகநூலில் தனிப்பட்ட முறையில் வைத்திருந்தேன். ஆனால் அது எவ்வாறு வெளியில் சென்றது என்பது எனக்கு இதுவரை தெரியாது.

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவில் எனது போட்டி முடிந்து மறுநாள் காலை எழுந்து கையடக்கத் தொலைபேசியைப் பார்த்த போது தான் இந்த புகைப்படம் அனைவரும் மத்தியிலும் சென்றதை நான் பார்த்தேன்.

உண்மையில் எனது புகைப்படத்துக்கு இலங்கையில் உள்ள அனைத்து இனங்களைச் சேர்ந்த மக்களும் ஒன்றிணைந்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதைப் பார்க்கும் போது சந்தோஷத்தின் உச்சத்துக்கு சென்றேன். அதிலும் எனக்கு தங்கப் பதக்கம் கிடைத்த சந்தோஷத்தை கொடுத்தது.

SAG மெய்வல்லுனரில் 28 வருடங்களுக்குப் பிறகு சாதனை படைத்த இலங்கை

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா…..

ஒரு இலங்கையராக நான் பெற்றுக்கொண்ட இந்த வெற்றியை அனைத்து இலங்கையர்களும் கொண்டாடியிருந்தனர். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களுக்கு எனது வெற்றியானது மன ஆறுதலைக் கொடுத்திருக்கும் என நம்புகிறேன்.

விளையாட்டில் முஸ்லிம் பெண்கள்

இலங்கையின் விளையாட்டுத்துறையில் முஸ்லிம் பெண்களின் பங்குபற்றல் எவ்வாறு உள்ளது என்பது பற்றி பேசிய பாத்திமா சலிஹா,

இஸ்லாம் மார்க்கத்தில் சொல்லப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றிதான் நாம் இந்த உலகில் வாழ வேண்டும். இதில் பெண்களுக்கு என்ற பிரத்தியேக சட்டத்திட்டங்கள், வரையறைகள் காணப்படுகின்றன. அதை நாங்கள் மீறவே முடியாது.

அதேபோல, இஸ்லாம் மார்க்கத்தில் பெண்கள் விளையாட்டில் ஈடுபடக்கூடாது என்று சொல்லவே இல்லை. ஆரம்ப காலத்தில் முஸ்லிம் பெண்கள் யுத்த களம் சென்று போர் செய்துள்ளார்கள் என வரலாறுகள் சான்று பகர்கின்றன. வாள் சண்டைகளில் தேர்ச்சி பெற்ற பல முஸ்லிம் பெண்களின் வாழ்ககை வரலாறுகளை நான் படித்துள்ளேன்.

எனவே, நான் ஒரு முஸ்லிம். அதுவும் இலங்கையில் பிறந்த முஸ்லிம் பெண். என்னிடம் விளையாட்டுத் திறமை உண்டு. அதனால் தான் நான் இன்று தேசிய ஸ்குவாஷ் சம்பியனாக உள்ளேன்.

எனவே மார்க்கத்தின்படி நான் ஹிஜாப் அணிந்து கொண்டுதான் விளையாடுவேன். அதிலும் இலங்கை பெண்ணாகத் தான் நான் போட்டியிடுவேன். இதன்மூலம், எனது சமூகத்துக்கும், இலங்கைக்கும் பெருமையைத் தேடிக் கொடுப்பேன் என்றார்.

அதேபோல என்னைப் போன்று பல திறமையான முஸ்லிம் வீராங்கனைகள் இலை மறை காயாக இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ளனர். அவர்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்.

அந்த பொறுப்பை பெற்றோர்கள் தான் முன்நின்று செய்ய வேண்டும். அவர்களை வீடுகளில் முடக்க வேண்டாம். வாழையடி வாழையாக சாதாரணதர பரீட்சை எழுதியவுடன் திருமணம் முடித்துக் கொடுக்காமல் அவர்களுடைய திறமைக்கு இனிவரும் காலங்களிலாவது உரிய இடத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இலங்கைக்காக 7 தங்கப் பதக்கங்களை வென்ற மெதிவ் அபேசிங்க

நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய…..

இறைவனுக்கு நன்றி…

பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டு ஒரு பகுதிநேர ஆசிரியையாக தற்போது கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களை வீட்டில் கற்பித்து வருகின்ற பாத்திமா சலிஹா, தனது வெற்றிப்பயணத்துக்காக முதலில் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அதேபோன்று, வீட்டின் ஒரேயொரு பெண் பிள்ளையான தன்னையும், விளையாட்டுத்துறையில் சாதிப்பதற்கு அனுமதி வழங்கி அதற்கு இன்று வரை பூரண பங்களிப்பினை வழங்கி வருகின்ற தனது பெற்றோருக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

அத்துடன், தன்னை ஒரு ஸ்குவாஷ் வீராங்கனையாக்க காரணமாக இருந்த தனது சகோதரர்களையும், இலங்கையின் முன்னனி ஸ்குவாஷ் வீரரும், முன்னாள் தேசிய ஸ்குவாஷ் சம்பியானுமான தனது பயிற்சியாளர் மொஹமட் றிஸ்வானையும் இந்த தருணத்தில் நன்றியுடன் ஞாபகப்படுத்தினார்.

இறுதியாக….

என்னை பாராட்டி சமூகவலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து இலங்கையர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று, விளையாட்டுத்துறையில் இலங்கை முஸ்லிம் பெண்கள் இன்னும் சாதிக்க வேண்டுமானால், அவர்களுடைய பெற்றோர்கள் அதற்கான அடித்தளத்தை செய்து கொடுக்க வேண்டும்.

குறிப்பாக விளையாட்டுத்துறையில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற என்னைப் போன்ற பல வீராங்கனைகள் நிறைய பேர் இலங்கையில் இருக்கின்றனர். அவர்களை படிக்க வைத்து திருமணம் செய்து கொடுக்காமல் அவர்களது விளையாட்டுத் திறமையை இனங்கண்டு அதற்கான சகல உதவிகளையும் செய்து கொடுக்க முன்வர வேண்டும்.

நாங்கள் இலங்கையர்கள். இலங்கை முஸ்லிம்கள் பெண்கள். எமக்கும் இறைவன் விளையாட்டுத் திறமையைக் கொடுத்துள்ளான். அதை ஒருபோதும் வீணடிக்கக் கூடாது.

வெறுமனே பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டு ஒரு ஆசிரியராக, வைத்தியாராக, சட்டத்தரணியாக மாத்திரம் இருக்காமல் விளையாட்டு வீராங்கனைகளாகவும் முன்வர வேண்டும்.

SAG பளுதூக்கலில் யாழ். மங்கை ஆர்ஷிக்காவுக்கு வெள்ளிப் பதக்கம்

நேபாளத்தின் கத்மண்டுவில் நடைபெற்று…

அதிலும் குறிப்பாக, இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பின்பற்றி, அதன் ஒழுங்கு முறைகளைப் பேணிக் கொண்டு விளையாடி எமது திறமையை நிரூபித்துக் காட்டினால் எம்மாலும் இந்த உலகில் சாதிக்கலாம். ஒரு சிறந்த முஸ்லிம் வீராங்கனையாக உருவெடுக்கலாம் என அவர் பாத்திமா சலிஹா பெத்தும் இஸ்ஸடீன் தெரிவித்தார்.

எனவே இலங்கையின் விளையாட்டுத்துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய முஸ்லிம் வீராங்கனையாக தற்போது அனைவராலும் அறியப்பட்டுள்ள பாத்திமா சாலிஹா, எதிர்காலத்தில் இலங்கைக்காக இன்னும் இன்னும் பல சர்வதேச வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என பிரார்த்தனை செய்வோமாக..!

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<