தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்சிப் போட்டிகளின் நேற்றைய நாள் போட்டிகளில் இலங்கை அணியினர் மேலும் ஏழு தங்கப் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டனர். இதன்படி தற்பொழுது இலங்கை வீரர்கள் 18 தங்கம், 32 வெள்ளி மற்றும் 48 வெண்கலம் உட்பட மொத்தமாக 98 பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
நேற்றைய நாள் முடிவின்போது இந்திய வீரர்கள் 34 தங்கம், 24 வெள்ளி மற்றும் 6 வெண்கலத்தைப் பெற்றுக்கொண்டனர். தெற்பொழுது இந்திய அணி மொத்தமாக 124 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருக்கின்றது.
நேற்றைய முதல் போட்டியாக 18 வயதின் கீழ் பெண்களுக்கான 100 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டி இடம்பெற்றது. இதில் முன்னைய நாளில் தங்கம் வென்ற இளம் வீராங்களை கிமிகோ ரஹீம் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் மீண்டும் தனது பலத்தை நிரூபித்தார்.
அதேபோன்று, 18 வயதின் கீழ்ப்பட்டோருக்கான 50 மீட்டர் பக்ஸ்ட்ரோக் போட்டியில் அகலங்க பீரிஸ் தங்கம் வென்றார். 27.37 சென்கன்களில் போட்டித் தூரத்தை முடித்த அகலங்கவிற்கு அடுத்த படியாக, 27.74 செக்கன்களில் போட்டித் தூரத்தை முடித்த இந்தியாவின் நட்ராஜ் ஸ்ரீஹாரி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இலங்கையின் சிறந்த நீச்சல் வீரரான மத்திவ் அபேசிங்க நேற்றைய நாளில் கலந்துகொண்ட அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றார். அவர், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 200 மீட்டர் தனியார் மெட்லி மற்றும் 200 மீட்டர் ப்ரீஸ்டைல் ஆகிய இரண்டு போட்டிகளிலும் சிறந்த முறையில் தனது திறமையை வெளிப்படுத்தி இலகுவாக வெற்றி பெற்றார். இந்தப் போட்டிகளிலும் இரண்டாம் இடத்தை இந்திய வீரர்கள் பெற்றனர்.
அதேபோன்று, அவரது சகோதரர் கைல் அபேசிங்க 18 வயதின் கீழ்ப்பட்டோருக்கான 100 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் தங்கம் வென்றார். இந்தப் போட்டியில் கைலை விட இரண்டு செக்கன்கள் தாமதித்து போட்டித் தூரத்தை நிறைவு செய்த அகலங்க பீரிஸ் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
நேற்றைய போட்டிகளில் இலங்கை தங்கம் வென்ற இறுதிப் போட்டியாக 18 வயதின் கீழ்ப்பட்ட கலந்த பிரிவினருக்கான 400 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே அமைந்திருந்தது. இந்தப் போட்டியில் இலங்கை சார்பாக பங்கு கொண்ட கிமிகோ ரஹீம், கைல் அபேசிங்க, வினொலி கலுவாரச்சி மற்றும் அகலங்க பீரிஸ் ஆகியோர் போட்டித் தூரத்தை 3:44.65 நிமிடங்களில் முடித்து தங்கம் வென்றனர். இதில் 3:58.10 நிமிடங்களில் போட்டித் தூரத்தை முடித்த இந்தியா வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது.
நேற்றைய நாள் நிறைவில் நிலைகள்
முதல் இடம் – இந்தியா (124 பதக்கங்கள்)
இரண்டாம் இடம் – இலங்கை (98 பதக்கங்கள்)
மூன்றாம் இடம் – (5 பதக்கங்கள்)
நான்காம் இடம் – பாகிஸ்தான் (2 பதக்கங்கள்)
இன்று நான்காம் நாள் போட்டிகள் இடம்பெறும்.