இலங்கை நீர்சார் வீளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக இடம்பெற்ற முதலாவது தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்சிப் போட்டிகள் நேற்று இனிதே நிறைவடைந்தன.
இதில் அனைத்து போட்டிகளினதும் நிறைவில் இந்தியா 216 மொத்தப் பதக்கங்களுடன் முதலாம் இடத்தினையும், இலங்கை மொத்தமாக 189 பதக்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
இப்போட்டிகளில் இலங்கை சார்பாக சிறந்த முறையில் பிரகாசித்த கிமிகோ ரஹீம் மற்றும் மத்திவ் அபேசிங்க ஆகியோர் நேற்றைய இறுதித் தின போட்டிகளிலும் தலா 2 தங்கங்களை தாய்நாட்டிற்காகப் பெற்றுக் கொடுத்தனர்.
நேற்று இடம்பெற்ற 50 மீட்டர் ப்ரீஸ்டைல் மற்றும் 100 மீட்டர் பக்ஸ்ட்ரோக் ஆகிய போட்டிகளில் கிமிகோ ரஹீம் தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார். அதுபோன்று, அவர் 4X200 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலேயிலும் தங்கம் வென்றார்.
எனவே இம்முறை இடம்பெற்ற தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்சிப் போட்டிகளில் மொத்தமாக 5 தங்கப் பதக்கங்களைப் பெற்ற கிமிகொ ரஹீம் 18 வயதின் கீழ்ப்பட்டோருக்கான பெண்கள் பிரிவின் சிறந்த வீரராகத் தெரிவாகினார்.
அதேபோன்று, 18 வயதிற்கு மேல்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் நேற்று இடம்பெற்ற 50 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் மெத்திவ் அபேசிங்க தங்கம் வென்றார். இதன்மூலம் அவரும் மொத்தமாக 5 தங்கங்களை வென்று, 18 வயதிற்கு மேல்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் சிறந்த வீரராகத் தெரிவானார்.
இறுதி நாள் நிகழ்வுகளின் புகைப்படங்கள்
அதேபோன்று, நேற்று இடம்பெற்ற 18 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் கைல் அபேசிங்க தங்கம் வென்றார். அது தவிர, 4X200 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலேயிலும் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்படி, அவர் மொத்தமாக 4 தங்கங்கள், ஒரு வெள்ளியையும் வென்று தனது திறமையை மீண்டும் நிரூபித்தார்.
இத்தொடரில் இடம்பெற்ற நீரில் பாய்தல் போட்டி நிகழ்ச்சிகள் அனைத்திலும் இந்திய வீரர்களே தங்கப் பதக்கங்களை வென்றனர். அவர்களுக்கு அடுத்த படியாக இலங்கை வீரர்கள் தமது ஆதிக்கத்தை செலுத்தனர்.
போட்டி நிறைவில் இறுதி முடிவுகள்
- இந்தியா: தங்கம்- 121, வெள்ளி – 77, வெண்கலம் – 18 (மொத்தம் – 216)
- இலங்கை: தங்கம்- 28, வெள்ளி – 66, வெண்கலம் – 95 (மொத்தம் – 189)
- பங்களாதேஷ்: தங்கம்- 02, வெள்ளி – 02, வெண்கலம் – 05 (மொத்தம் – 09)
- பாகிஸ்தான்: தங்கம்- 01, வெள்ளி – 03, வெண்கலம் – 02 (மொத்தம் – 06)
சிறந்த வீரர்கள்
- 15 வயதின் கீழ் – சன்ஜேய் ஜயகரிஷ்னன் – இந்தியா (5 தங்கம்)
- 18 வயதின் கீழ் – கைல் அபேசிங்க – இலங்கை (4 தங்கம்)
- 18 வயதின் மேல் – மெதிவ் அபேசிங்க – இலங்கை (5 தங்கம்)
சிறந்த வீராங்கனைகள்
- 15 வயதின் கீழ் – கெனஷா குப்தா – இந்தியா (4 தங்கம்)
- 18 வயதின் கீழ் – கிமிகோ ரஹீம் – இலங்கை (5 தங்கம்)
- 18 வயதின் மேல் – ஜயோட்சனா ராஜேந்திர – இந்தியா (4 தங்கம்)
மேலும் பல விளையாட்டு செய்திகளுக்கு