தெற்காசிய நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளை நடாத்த இலங்கை தயார்

332
South Asian Aquatic

இலங்கை நீர் விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் முகமாக, தேசிய நீரக விளையாட்டு கட்டுப்பாட்டு நிர்வாக சபையான,

இலங்கை நீரக விளையாட்டு ஒன்றியம் (SLASU) தெற்காசிய நீச்சல் சம்பியன்ஷிப் போட்டிகளை, கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இவ்வருடம் ஒக்டோபர் 18ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளது.

இறுதியாக, 10 ஆண்டுகளுக்கு முன்பாக, 2006ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டு போட்டிகள் கொழும்பில் நடைபெற்றன. இந்நிலையில், இலங்கை நீரக விளையாட்டு ஒன்றியதின் கட்டுப்பாட்டு நிர்வாக சபையின் புதிய சிந்தனையின் கீழ், ஏழு நாடுகளை சேர்ந்த 300-350 வரையிலான நீச்சல் போட்டியாளர்கள் இந்த தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இது தொடர்பில், இலங்கை நீரக விளையாட்டு ஒன்றியத்தின் செயலாளர் Thepapare.com இடம் கருத்து தெரிவிக்கையில்,

“கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்பு, ஒரு சர்வதேச போட்டியினை ஒழுங்குபடுத்துவது இதுவே முதல் தடவை. தெற்காசிய பிராந்தியத்திலுள்ள 8 நாடுகளில் ஏழு நாடுகள் இப்போட்டிகளில் பங்குபற்றுவதற்கு உறுதி செய்துள்ளன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் இலங்கையும் இணைந்து கொள்கிறது.

போட்டிகள் ஆரம்பிக்க ஒரு மாதம் அளவே எஞ்சிருக்கும் நிலையில், தேசிய நீரக விளையாட்டு கட்டுப்பாட்டு நிர்வாகசபை இப்போட்டிகளை வெற்றிகரமாக நடாத்த தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. போட்டிகள் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஒக்டோபர் 18ஆம் திகதி ஆரம்பித்து, கொழும்பு காலி முகத்திடலில் ஒக்டோபர் 23ஆம் திகதி முடிவுற இருக்கிறது.

இப்போட்டித் தொடரின் சிறப்பம்சமாக நீச்சல் போட்டி, வோட்டர் போலோ, டைவிங் போட்டிகளும் இடம் பெறும்.

போட்டியின் ஆரம்ப விழா சுகததாசவில் 18ஆம் திகதி ஆரம்பித்து கடல் நீச்சல் போட்டியோடு காலி முகத்திடலில் போட்டி நிகழ்வுகள் முடிவுறும். நீச்சல் போட்டிகள் அனைத்தும் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும்.

போட்டியாளர்கள் மூன்று பிரிவுகளின் கீழ் கலந்து கொள்வதோடு, இளம் நீச்சல் போட்டியாளர்களுக்கு இந்த சர்வதேச அரங்கில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றமை முக்கிய அம்சமாகும். 13 முதல் 15 வயது, 15 முதல் 17 வயது மற்றும் 18 வயதுக்கு மேல் திறந்த பிரிவுகளாக இந்த போட்டி பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. வோட்டர் போலோ 18 வயதுக்கு கீழ் மட்டுமே இடம்பெறும்.

இந்த தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு இலங்கை வீரர்களை தெரிவு செய்வதற்கு, போட்டியாளர்களுக்கிடையிலான பலப்பரீச்சை இம்மாத இறுதியில் இடம்பெறும். ஒக்டோபர் முதல் வாரத்தில் தெற்காசிய விளையாட்டு போட்டிகளுக்காக போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்” எனவும் இலங்கை நீரக விளையாட்டு ஒன்றியத்தின் செயலாளர் தெரிவித்தார்.