முதன் முதலாக நடைபெறும் தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டியில் ரமுடி சமரகோன் இலங்கை சார்பாக முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
மகளிர் பிரிவுக்கான 15 வயதுக்குட்பட்ட 200 மீட்டர் ப்ரிஸ்ட்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியிலேயே அவர் தங்கம் வென்றார்.
இதன்படி சுகததாச உள்ளக நீச்சல் தடாகத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டிகளின் போது, இலங்கை சார்பாக கலந்து கொண்ட நீச்சல் வீரர்கள் 7 தங்கம், 16 வெள்ளி உட்பட 24 வெண்கலப் பதக்கங்களை பெற்றுக்கொண்டனர்.
அதேநேரம், நீச்சல் போட்டிகளில் ராட்சகர்களாக உள்ள இந்தியா, 32 தங்க பதக்கங்கள், 23 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் உட்பட மொத்தமாக 60 பதக்கங்களை நேற்றைய நாள் முடிவின்போது பெற்றிருந்தது.
இலங்கை சார்பாக ஒலிம்பிக்கில் பங்கு கொண்ட கிமிகோ ரஹீம் மற்றும் மத்திவ் அபேசிங்க நேற்றைய நாள் நீச்சல் போட்டிகளில் பங்குபற்றி தங்க பதக்கங்களை வென்று மீண்டும் ஒருமுறை தாம் சிறந்த வீரர்கள் என்பதை நிரூபித்தனர்.
17 வயதுடைய ரஹீம், தனது முதலாவது போட்டியாக 18 வயதின் கீழ் மகளிருக்கான 200 மீட்டர் ப்ரீஸ்டைல் போட்டியில் பங்கு பற்றி 2:07.83. வினாடிகளில் போட்டித் தூரத்தை நிறைவு செய்து முதலாம் இடத்தை பெற்றார். இரண்டாம் மற்றும் முன்றாம் இடங்களை முறையே, இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய தாமினி கிருஷ்ணப்பா, ஸ்ராடா சுதிர் ஆகியோர் பெற்றனர்.
அதுபோன்று, 100 மீட்டர் பட்டர்ப்ளை போட்டியில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட வலிமைமிக்க அமன் கஹய்யை கடின போட்டிக்கு மத்தியில் மத்திவ் அபேசிங்க வென்றார். அவர், போட்டி முடிவடைவதற்கு 25 மீட்டர் தூரம் இருக்கையில் தனது வேகத்தை கூட்டி, 55.39 வினாடிகளில் முடித்து தனது வித்தியாசமான திறமைகளை வெளிப்படுத்தினார். அதேநேரம் அமன் கஹய் 56.15 வினாடியில் முடித்து இரண்டாம் இடம் பெற்றார்.
முதல் நாளில் குறிப்பிடும் வகையில், மத்திவ் அபேசிங்கவின் இளைய சகோதரன் கைல் அபேசிங்க தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்க பத்தக்கங்களை வென்றார். மேற்குறித்த பதக்கங்களை 18 வயதுக்குட்பட்ட 200 மீட்டர் ப்ரீஸ்டைல் மற்றும் 200 மீட்டர் தனிப்பட்ட மெட்லி போட்டிகளில் போட்டியிட்டு அவர் பெற்றுக்கொண்டார்.
200 மீட்டர் தனிப்பட்ட மெட்லி போட்டிகளில் நான்கு வகையான நீச்சல் முறைகளில் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்றது எல்லோரையும் கவர்ந்தது. இந்த வெற்றியின்மூலம் 16 வயதே ஆன கைல் அபேசிங்க, அனுபவம் வாய்ந்த இந்திய நீச்சல் வீரர்களின் பாராட்டை பெற்றார்.
ஆசிய பாடசாலைகள் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற நீச்சல் போட்டியாளர் அசலங்க பீரிஸ், 18 வயதுக்குட்பட்ட ஆடவர் பிரிவில் 50 மீட்டர் பட்டப்ளை நீச்சல் போட்டியில், அவரை போன்றே மற்றைய போட்டிகளில் தங்கம் வென்ற போட்டியளர்களுடன் போட்டியிட்டு முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்றார்.
3 மீட்டர் நீரில் பாய்தல் போட்டியில், யசோதா டி சில்வா இலங்கைக்கான நேற்றைய இறுதி தங்க பதக்கத்தை வென்று பெரும் மதிப்பு பெற்றார். இதில் அதிக ஆதிக்கம் செலுத்திய இந்தியா, எட்டு பாய்தல் போட்டிகளில் ஏழு போட்டிகளில் தங்க பதக்கங்களை வென்றது.
15 வயதுக்குட்பட்ட 400 மீட்டர் ரீலே போட்டியில் இலங்கை, இந்தியாவிடன் கடும் சவாலை எதிர்கொண்டது. பலம் வாய்ந்த இந்திய அணி, 15 வயதுக்கான 400 மீட்டர் மேடலி ரீலே, 18 வயதுக்கான 400 மீட்டர் மேடலி ரீலே என்பவற்றில் முழுமையாக வெற்றி பெற்று, எட்டு பதக்கங்களை வென்றது. 18 வயதுக்கு மேல்பட்டவர்களுக்கான 400 மீட்டர் மேடலி ரீலே மற்றும் 15 வயதுக்குட்பட்ட 400 மீட்டர் மேடலி ரீலே ஆடவர்/மகளிர் கலந்த பிரிவு, 18 வயதுக்கு மேல்பட்டவர்களுக்கான ஆடவர்/மகளிர் கலந்த பிரிவு ரிலே ஆகியவற்றிலும் இந்திய வீரர்கள் தங்கம் வென்றார்கள்.
இதுவரை பெறப்பட்டுள்ள பதக்க பட்டியலில் இந்தியா 32 தங்க பதக்கங்களை வென்று முன்னிலை வகிக்கிறது. அதே நேரம் ஏழு தங்க பதக்கங்களை வென்று இலங்கை இரண்டாம் இடத்திலும், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் தலா ஒரு தங்க பதக்கம் வென்று மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன.