ரேஸ் கோஸ் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற தெற்காசிய ஜப்பான் 16 வயதிற்கு உட்பட்ட 4 நாடுகளுக்கு இடையிலான காற்பந்தாட்ட பரிமாற்ற கிண்ணத்தில், நேபாள் அணியானது பூட்டான் அணியை 7-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி அசத்தியது. மறுமுனையில் ஜப்பான் அணியுடன் 3-1 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை அணி தோல்வியுற்றது.
நேபாள் எதிர் பூட்டான் அணிகளுக்கு இடையிலான போட்டி
ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய நேபாள் அணியானது தமது முதல் கோலினை 9ஆவது நிமிடத்தில் பெற்றுக்கொண்டது. தலைவர் ரஞ்சன் பன் தமது அணிக்காக முதலாவது கோலை அடித்தார்.
அடுத்த நிமிடமே விரைவாக செயற்பட்ட நேபாள் அணியானது மீண்டும் ஒரு முறை சிறப்பாக விளையாடி 2ஆவது கோலை அடித்தது. பூட்டான் அணியின் கோல் காப்பாளர் செய்த தவறினை பயன்படுத்திக்கொண்ட பீர்ஜேஷ் சௌத்ரி நேபாள் அணி சார்பாக கோல் அடித்தார்.
4 நிமிடங்களின் பின்னர் கார்லோஸ் பகாரியா நேபாள் அணியின் 3 ஆவது கோலை அடிக்க, 19 ஆவது நிமிடத்தில் பிரஜேஷ் சௌத்ரி தனது 2 ஆவது கோலை அடித்து நேபாள் அணிக்கு மேலும் பலம் சேர்த்தார்.
முதற் பாதி முடிவடைவதற்கு முன்னர் 26 ஆவது நிமிடத்தில் மற்றுமொரு கோலை நேபாள் அணியானது பெற்றுக்கொண்டது. இம்முறை ரொஷான் ராணா மாகார் நேபாள் அணி சார்பாக கோல் அடித்தார்.
முதல் பாதி : நேபாள் 5 – 0 பூட்டான்
இரண்டாம் பாதியில் முதல் கோலை பூட்டான் அணியே பெற்றுக்கொண்டது. 57 ஆவது நிமிடத்தில் தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொண்ட பூட்டான் அணியானது கெல்சாங் ஜிக்மி மூலமாக தமது முதல் கோலை பெற்றுக்கொண்டது.
எனினும் போட்டியில் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திய நேபாள் அணியானது, தமது தலைவர் ரஞ்சன் பன் மூலமாக 60 ஆவது மற்றும் 69 ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்து அபார வெற்றியை தனதாக்கி கொண்டது.
முழு நேரம் : நேபாள் 7 – 1 பூட்டான்
இலங்கை எதிர் ஜப்பான் அணிகளுக்கு இடையிலான போட்டி
ரேஸ் கோஸ் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை அணியானது பலம் மிக்க ஜப்பான் அணியை எதிர்கொண்டது.
எதிர்பார்க்கப்பட்டது போலவே ஜப்பான் அணியானது போட்டியில் ஆதிக்கம் செலுத்தி முதல் 20 நிமிடங்களுக்குள் 2 கோல்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணிக்கு 40ஆவது நிமிடத்தில் கோல் அடிப்பதற்கு வாய்ப்பு ஒன்று கிடைத்த பொழுதும், அவ்வாய்ப்பை அது தவறவிட்டது. எனவே ஜப்பான் அணியானது ஆதிக்கம் செலுத்தி மீண்டும் ஒரு கோல் அடித்து 3-0 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை பெற்றது .
எனினும் போட்டியை விட்டுக்கொடுக்காத இளம் இலங்கை அணி வீரர்கள், முதற் பாதி முடிவடைவதற்கு முன்னராக ஒரு கோல் அடித்தனர். சிறப்பாக செயற்பட்ட மொகமட் முர்ஷித் முதல் கோலை அடித்து இலங்கை அணிக்கு நம்பிக்கை வழங்கினார்.
முதல் பாதி : ஜப்பான் 3 – 1 இலங்கை
முதற் பாதியில் பலம் மிக்க ஜப்பான் அணிக்கு 3 கோல்கள் அடிக்க இலங்கை அணி வழியமைத்த பொழுதும், இரண்டாம் பாதியில் சிறப்பாக விளையாடியது. இரண்டாம் பாதியில் சிறப்பாக தடுத்து விளையாடிய இலங்கை அணியானது ஜப்பான் அணிக்கு எந்த ஒரு கோலையும் அடிக்கவிடாதது ஜப்பான் அணிக்கு ஏமாற்றத்தையும், இலங்கை அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும் அளித்தது.
எனினும் இலங்கை அணியினாலும் இரண்டாம் பாதியில் எந்த ஒரு கோலையும் போடா முடியவில்லை. இரண்டு அணிகளுக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தாலும் இரண்டு அணிகளும் அவற்றை சரிவர பயன்படுத்தவில்லை.
முழு நேரம் : ஜப்பான் 3 – 1 இலங்கை