தெற்காசிய விளையாட்டுக்கான மரதன் ஓட்ட தெரிவுப் போட்டிகள் செப்டம்பரில்

206

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் இவ்வருடம் நடத்தவுள்ள மரதன் ஓட்டப் போட்டியை தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான தெரிவுப் போட்டியாக அறிவிப்பதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய விளையாட்டு விழா மரதனில் வேலு கிருஷாந்தினிக்கு இரண்டாமிடம்

தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக ……….

கொழும்பில் வருடந்தோறும் நடைபெற்றுவரும் எல்.எஸ்.ஆர் சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியை உயிர்த்த ஞாயிறு தாக்குதலை கருத்திற்கொண்டு இவ்வருடம் நடத்தாமல் விடுவதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழு ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி கம்பஹா மாவட்டம் மினுவாங்கொடையில் நடைபெறவுள்ள 31ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டியை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான தெரிவுப் போட்டியாக அறிவிப்பதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக வருடந்தோறும் நடைபெறுகின்ற ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியை தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான தெரிவுப் போட்டியாக இணைத்துக்கொள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எனினும், குறித்த போட்டித் தொடரில் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகளுக்குப் பதிலாக அரைமரதன் ஓட்டப் போட்டிகளே வழமையாக நடைபெற்று வருகின்றது.  

எனவே, ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கவும் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, குறித்த தெரிவுப் போட்டியில் சிறந்த நேரப் பெறுமதியைப் பெற்றுக்கொள்கின்ற வீராங்கனைகளுக்கு தெற்காசிய மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

இதேவேளை, கடந்த மே மாதம் அநுராதபுரத்தில் நடைபெற்ற இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவுகளில் வெற்றிகளைப் பதிவுசெய்த வீர, வீராங்கனைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த போட்டித் தொடரில் தேசிய மட்டத்தில் எதிர்பார்த்தளவு பெறுபேறுகள் கிடைக்காத காரணத்தால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த எல்.எஸ்.ஆர் மரதன் ஓட்டப் போட்டியை தெற்காசிய விளையாட்டு விழாவுக்கான தெரிவுப் போட்டியாக அறிவிப்பதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதுஎவ்வாறாயினும், தேசிய மரதன் குழாமில் தற்போது நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள அமெரிக்காவில் தற்போது வசித்து வருகின்ற பெண்களுக்கான தேசிய மரதன் ஓட்ட சம்பியனான ஹிருனி விஜேரத்ன, பெரும்பாலும் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்ற மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் எதிர்வரும் நவம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள 17ஆவது ஆசிய மரதன் ஓட்டப் போட்டியில் அவர் பங்குபற்றவுள்ளதால் இந்தத் தொடரில் இருந்து ஹிருனி விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளன வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக மெய்வல்லுனர் சம்மேளனத்திற்கு புதிய பெயரும், குறியீடும்

உலக மெய்வல்லுனர் விளையாட்டின் …..

சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் விதிமுறைகளுக்கு அமைய வீரரொருவர் குறிப்பிட்டதொரு மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி சுமார் 12 வாரங்களுக்குப் பிறகு தான் (3 மாதங்கள்) அடுத்த மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்ற முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்ற விரும்புகின்ற வீரர்கள் விண்ணப்பங்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதிக்கு முன் கொழும்பு 07 டொரிண்டனில் உள்ள இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்துக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<