பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்க அணி அறிவிப்பு

382
Image Courtesy - CSA Twitter

பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்க அணியின் முதல் இரண்டு போட்டிகளுக்குமான 14 பேர் கொண்ட குழாம் நேற்று முன் தினம் (10) தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தேர்வுக் குழுவின் தலைவர் லின்டா ஷொன்டியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க அணி தமது சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியுடன் மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகின்றது.

கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓயும் தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரர்

இச்சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்றது. முதல் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தென்னாபிரிக்க அணி 2-0 எனும் அடிப்படையில் தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அடுத்த தொடரான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கான முதல் இரண்டு போட்டிகளுக்குமான 14 பேர் கொண்ட குழாமை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையானது நேற்று முன் தினம் (10) வெளியிட்டிருந்தது.

2017 ஆம் ஆண்டு அறிமுகமாகி வெறும் மூன்று போட்டிகளில் விளையாடிய நிலையில் கைவிடப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளரான டேன் பெட்டர்சன் ஒரு வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தானுடனான ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார்.

மேலும் உபாதை காரணமாக கடந்த அவுஸ்திரேலிய அணியுடனான தொடரில் இருந்து விலகிய தென்னாபிரிக்க அணியின் நம்பிக்கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஹஷிம் அம்லா மீண்டும் ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இரண்டு டி20 போட்டிகளில் விளையாடிய 29 வயதுடைய றைஸ் வென்டர் டைஸன் ஒருநாள் அணிக்கு அறிமுக வீரராக அழைக்கப்பட்டுள்ளார்.

சகலதுறை வீரரான ஜே.பி டுமினி மற்றும் லுங்கி ங்கிடி ஆகியோர் உபாதை காரணமாக ஒருநாள் அணியிலும் இடம்பிடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

அத்துடன் துடுப்பாட்ட வீரர்களான பர்ஹான் பெஹார்டீன், எய்டன் மர்க்ரம் மற்றும் சகலதுறை வீரரான கிறிஸ் மொரிஸ் ஆகியோர் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்குமான அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். ஆனால் இவர்கள் மூவரும் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்குமான அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது.

பாப் டு ப்ளெஸிஸ் தலைமையிலான அணியில் ஹஷிம் அம்லா, குயின்டன் டி குக், ரீஸா ஹென்றிக்ஸ், இம்ரான் தாஹிர், ஹென்ரிச் கிலாசன், டேவிட் மில்லர், டேன் பெட்டர்சன், அன்டில் பெஹலுக்வாயோ, டுவைன் பிடோரியஸ், ககிஸோ ரபாடா, தப்ரிஷ் ஷம்ஷி, டேல் ஸ்டைன் மற்றும் றைஸ் வென்டர் டைஸன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைகள் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து பாண்டியா, ராகுல் இடைநீக்கம்

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி போர்ட் எலிசபெத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது இலங்கை நேரப்படி மாலை 02.30 மணிக்கு ஆரம்பமாகும்.

போட்டி அட்டவணை

19 ஜனவரி – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – போர்ட் எலிசபெத் (பகலிரவு)

22 ஜனவரி – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – டேர்பன் (பகலிரவு)

25 ஜனவரி – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – செஞ்சூரியன் (பகலிரவு)

27 ஜனவரி – நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டி – ஜொஹனர்ஸ்பேர்க் (பகல்)

30 ஜனவரி – ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டி – கேப்டவுண் (பகலிரவு)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<