490 ஓட்டங்களை விளாசி தென்னாபிரிக்க வீரர் சாதனை

363
@AAP

தென்னாபிரிக்க அணியின் உள்ளூர் கழக வீரர்களில் ஒருவரான சேன் டாட்ஸ்வெல் என்பவர் 151 பந்துகளுக்கு அதிரடியான முறையில் 490 ஓட்டங்களைப் பெற்று இளையோருக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகள் வரலாற்றில் தனிநபர் ஒருவர் பெற்ற அதி கூடிய ஓட்டங்கள் என்கிற சாதனையை பதிவு செய்துள்ளார்.

புதிய ஒருநாள் அணித்தலைவர் ஒருவரை வேண்டி நிற்கிறதா இலங்கை?

ThePapare.com இற்கு கிடைத்திருக்கும் தகவல்களின்..

கடந்த சனிக்கிழமை (18) தனது  20ஆவது வயதினை பூர்த்தி செய்த டாட்ஸ்வெல் தனது பிறந்த நாளிலேயே இச்சாதனையை நிலைநாட்டியிருக்கின்றார். தென்னாபிரிக்காவின உள்ளூர் விளையாட்டுக் கழகமான NWU புக்கே கிரிக்கெட் கழகத்துக்கான போட்டி ஒன்றிலேயே இந்த அடைவு டாட்ஸ்வெல் மூலம் பெறப்பட்டிருகின்றது.    

இதற்கு முன்னர் இளையோருக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியில் தனி நபராக அதிகூடிய ஓட்டங்கள் பெற்ற சாதனையினை இந்திய வீரர் S. சங்குருத் சிறிராம் 2014-15ஆம் ஆண்டின் பருவகாலத்தில் நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிறிராம் அப்போது 486 ஓட்டங்களினை JSS சர்வதேச பாடசாலைக்காக பெற்றிருந்தார்.

மொத்தமாக 57 சிக்ஸர்களினையும், 27 பெளண்டரிகளினையும் விளாசிய டாட்ஸ்வெல் தனது பிறந்த நாளில் இச்சாதனை பெறப்பட்டமைக்காக குறிப்பிட்ட அந்த நாளினை எனது வாழ்க்கையில் சிறந்த நாள் எனக் கூறியிருக்கின்றார்.

அதோடு உண்மையாகச் சொல்லப்போனால், நீங்கள் பொதுவாக இரட்டைச்சதம் பெறக் கனவு காண முடியும். ஆனால் 400 ஓட்டங்கள் பெறுவது என்பது, அதுவும் வாழ்க்கையின் முக்கியமான நாள் ஒன்றில் பெறுவது மிகவும் விசித்திரமான விடயம். இந்த நாள் என் வாழ்க்கையில் அபூர்வமானதுமான மிகச்சிறந்த நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் பெற்ற ஓட்டங்களோடு புக்கே அணி 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 677 ஓட்டங்களைப் பெற்று இளையோருக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகள் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் பெற்ற அணியாகவும் பதிவாகியிருக்கின்றது.

இதோடு மட்டுமல்லாது டாட்ஸ்வெல், பந்துவீச்சிலும் அசத்தி 7 ஓவர்களுக்கு 32 ஓட்டங்களில் 2 விக்கெட்டுக்களையும் அந்த போட்டியில் கைப்பற்றி இருக்கின்றார்.

அவுஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் ஆஷஸ் டெஸ்ட் நாளை ஆரம்பம்

உலகின் மிகவும் பழமையான சர்வதேச கிரிக்கெட் போட்டித்..

தற்போது பல்கலைக்கழக மாணவராக இருக்கும் ஷேன் இன்னும் தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாற முடிவு செய்யவில்லை. எனினும் இவரது அபாரமான ஆட்டத்தினை தற்போது கண்டிருக்கும் ஜொஹன்னஸ்பேர்க் நகரினை மையமாகக் கொண்ட சில முதல்தர கிரிக்கெட் கழகங்கள் தங்களது குழாங்களில் இவரை இணைக்க தற்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் டாட்ஸ்வெல் இந்த வாரத்திலிருந்து தென்னாபிரிக்காவின் மாகாண அணியான நோர்த் வெஸ்ட் ட்ராகன்ஸ் உடன் சேர்ந்து தற்போது பயிற்சிகளில் ஈடுபடுகின்றார்.

டாட்ஸ்வெல், கிங் எட்வார்ட் (VII) கல்லூரியின் பழைய மாணவராவார். இக்கல்லூரியில் இருந்தே தென்னாபிரிக்க அணியின் கிரேம் ஸ்மித், குயின்டன் டி கொக் போன்ற தலைசிறந்த வீரர்கள் உருவாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட போட்டியின் ஸ்கோர் அட்டவணை மூலம். @AAP