தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை (CA), கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் அடங்கிய தென்னாபிரிக்க குழாத்தினை அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரை வெல்ல எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றாக உள்ள தென்னாபிரிக்கா, உலகக் கிண்ணத்திற்கான தமது வீரர்கள் குழாத்தில் உபாதை ஒன்றினை எதிர்கொண்டிருக்கும் வேகப் பந்துவீச்சாளரான என்ரிச் நோர்ட்ஜே இற்கு வாய்ப்பு வழங்கியிருக்கும் நிலையில் சகலதுறை வீரரான வியான் முல்டர் முன்வரிசை துடுப்பாட்ட வீரர் ரீசா ஹென்ரிக்ஸ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கியிருக்கின்றது.
உலகக் கிண்ணத்திற்கான இலங்கை வீரர்கள் தெரிவு குறித்து அசந்த டி மெல்
இலங்கை அணியில் ஒற்றுமையை…
ரீசா ஹென்ரிக்ஸ் மற்றும் வியான் முல்டர் ஆகியோர் இலங்கையுடன் இடம்பெற்று முடிந்த ஒரு நாள் தொடரில் சோபிக்க தவறியிருந்ததன் காரணமாகவே உலகக் கிண்ணத்திற்கான தென்னாபிரிக்க குழாத்தில் இடம்பிடிக்க தவறியிருக்கின்றனர். இதேநேரம், உபாதையினை எதிர்கொண்டிருக்கும் என்ரிச் நோர்ட்ஜே உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாக முன்னர் பூரண உடற்தகுதியினை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, 2018ஆம் ஆண்டிற்கு பின்னர் ஒரு நாள் போட்டிகளில் இரண்டு அரைச்சதங்களை மாத்திரம் பெற்ற சிரேஷ்ட துடுப்பாட்ட வீரரான ஹஷிம் அம்லா தென்னாபிரிக்க உலகக் கிண்ண குழாத்தில் இடம்பிடித்துள்ளார். ஹஷிம் அம்லா அண்மைக்காலங்களில் சிறப்பாக செயற்படாது போனாலும் அவர் கடந்த காலங்களில் பெற்ற அனுபவம் உலகக் கிண்ணத்தின் போது தென்னாபிரிக்க அணிக்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஹஷிம் அம்லாவுடன் இணைந்து தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்துறை மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான எய்டன் மார்க்ரம் இனால் வலுப்படுத்தப்பட எதிர்பார்க்கப்படுகின்றது. எய்டன் மார்க்ரம் தற்போது நடைபெற்று முடிந்திருக்கும் தென்னாபிரிக்க உள்ளூர் ஒரு நாள் தொடரில் (List A தொடரில்) அட்டகாசமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தி ஐந்து இன்னிங்சுகளில் 108.42 என்ற சராசரியுடன் 542 ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு வீரர்களுடன் தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்துறைக்கு அதன் தலைவர் பாப் டூ பிளேசிஸ், குயின்டன் டி கொக், ஜே.பி. டுமினி மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் மேலும் பெறுமதி சேர்க்கின்றனர். இதில் விக்கெட்காப்பாளரான குயின்டன் டி கொக் இந்த ஆண்டு தென்னாபிரிக்க அணிக்காக ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (469) பெற்ற வீரராக இருக்கின்றமை முக்கிய விடயமாகும். இவர்களோடு மேலதிக துடுப்பாட்ட வீரராக ரஸ்ஸி வன்டர் டஸ்ஸேன் தென்னாபிரிக்க அணிக்கு உலகக் கிண்ணத்தின் போது களமிறங்குகின்றார்.
உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு
அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்….
உலகக் கிண்ணத் தொடரின் போது தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக ககிஸோ றபாடா, டேல் ஸ்டெய்ன் ஆகியோர் நம்பிக்கை தர உபாதை காரணமாக லுங்கி ன்கிடிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதேநேரம் மணிக்கட்டு சுழல் வீரர்களான இம்ரான் தாஹிர் மற்றும் தப்ரைஸ் சம்ஷி ஆகியோர் தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு துறைக்கு இன்னும் பலம் சேர்க்கின்றனர்.
இவர்களோடு தென்னாபிரிக்க குழாத்தில் அன்டைல் பெஹ்லுக்வேயோ மற்றும் ட்வைன் ப்ரெடோரியஸ் ஆகியோர் சகலதுறை வீரர்களாக தென்னாபிரிக்க அணியை உறுதிப்படுத்துகின்றனர்.
உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் தென்னாபிரிக்க வீரர்கள் குழாம் மே மாதம் 12 ஆம் திகதி உலகக் கிண்ணத்தை மையமாக கொண்டு இடம்பெறும் விஷேட பயிற்சி முகாமொன்றில் பங்கெடுக்கவுள்ளது.
இதன் பின்னர் தென்னாபிரிக்க அணி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை அதனை நடாத்தும் நாடான இங்கிலாந்துடன் மே மாதம் 30ஆம் திகதி மோதும் போட்டியுடன் ஆரம்பம் செய்யவுள்ளது.
தென்னாபிரிக்க குழாம்
பாப் டூ பிளேசிஸ் (அணித்தலைவர்), ஹஷிம் அம்லா, குயின்டன் டி கொக், ஜே.பி. டுமினி, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி ன்கிடி, என்ரிச் நோர்ட்ஜே, அன்டைல் பெஹ்லுக்வேயோ, ட்வைன் ப்ரெடோரியஸ், ககிஸோ றபாடா, தப்ரைஸ் சம்ஷி, டேல் ஸ்டெய்ன், இம்ரான் தாஹிர், ரஸ்ஸி வன்டர் டஸ்ஸேன்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<