ஜிம்பாப்வே அணியை இலகுவாக வீழ்த்திய தென் ஆபிரிக்கா

308
Image Courtesy - ICC

மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென் ஆபிரிக்காவுக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் படுதோல்வி அடைந்துள்ளது.

இன்று (30) ஆரம்பமான முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. தென் ஆபிரிக்க அணியில் அணித்தலைவர் பாஃப் டு ப்ளெசிஸ் உட்பட பல அனுபவ வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்ததனால் அணித்தலைவராக ஜே.பி. டுமினி அணியை வழிநடாத்தினார். மேலும் இப்போட்டியில் தென் ஆபிரிக்க அணியில் கிறிஸ்டியன் ஜோன்கர் மற்றும் ஜிம்பாப்வே அணி சார்பாக 21 வயது இளம் சகலதுறை வீரர் பிரன்டன் மவுதா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் அறிமுக வீரர்களாக இணைக்கப்பட்டிருந்தது விஷேட அம்சமாகும்.  

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி ஆரம்பம் முதல் தென் ஆபிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாறியது. இறுதியில் ஜிம்பாப்வே அணியினர் 34.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டனர். இது அவர்களால் ஒருநாள் போட்டிகளில் தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக பெறப்பட்ட குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது.  ஜிம்பாப்வே அணி சார்பாக துடுப்பாட்டத்தில் எல்டன் சிகுன்புரா 27 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஹமில்டன் மசகட்ஸா 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டதோடு ஏனைய வீரர்கள் மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். சிறப்பாக பந்து வீசிய லங்கி இங்கீடி மூன்று விக்கெட்டுகளையும் பெஹலுக்வாயோ, தாஹிர் மற்றும் ரபாடா ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.

ஹொங்கொங்கை தமது சுழல் மூலம் சிதைத்த இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி

இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 26.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. தென் ஆபிரிக்கா அணி சார்பாக க்லாசன் 44 ஓட்டங்களை பெற்றதோடு மர்க்ரம் 27 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர். பந்து வீச்சில் சட்டாரா மற்றும் வெலிங்டன் மசகட்ஸா ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இப்போட்டியில் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த டுமினி ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 5000 ஓட்டங்களை கடந்திருந்தார் என்பது சிறப்பம்சமாகும். போட்டியின் ஆட்ட நாயகனாக தென் ஆபிரிக்க அணியின் லங்கி இங்கீடி தெரிவானார். இவ்விரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஜிம்பாப்வே – 117 (34.1) – எல்டன் சிகுன்புரா 27, ஹமில்டன் மசகட்ஸா 25, லங்கி இங்கீடி 19/3, பெஹலுக்வாயோ 22/2, இம்ரான் தாஹிர் 23/2, ககிசோ ரபாடா 34/2

தென் ஆபிரிக்கா – 119/5 (26.1) – க்லாசன் 44, மர்க்ரம் 27, சட்டாரா 12/2, வெலிங்டன் மசகட்ஸா 26/2

முடிவு – தென் ஆபிரிக்க அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி