போர்ட் எலிசபெத்தின் புனித ஜோஜ் பார்க் மைதானத்தில் நடைபெறும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்றைய (29) ஆட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை அணி வெற்றியைப் பெறுவதற்கு 5 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் மேலும் 248 ஓட்டங்கள் தேவையாக உள்ளது.
மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது இரண்டாவது இன்னிங்சுக்காக 5 விக்கெட்டுகளுக்கு 351 ஓட்டங்களை பெற்றிருந்த தென்னாபிரிக்க அணி, இன்று தனது ஆட்டத்தை தொடர்ந்தது. அணித் தலைவர் டு ப்லெசிஸ் மற்றும் விக்கெட் காப்பாளர் குவிண்டான் டி கொக் 6ஆவது விக்கெட்டுக்காக 129 ஓட்டங்களை தங்களுக்கிடையே பகிர்ந்து கொண்டனர். இவ்விருவரும் அதிரடியாக துடுப்பாடி அரைச் சதம் பெற்றுக்கொண்டதோடு, வேகமாக ஓட்ட எண்ணிகையை உயர்த்தி இலங்கை அணிக்கு சவாலான ஒரு வெற்றி இலக்கை நிர்ணயிக்க வழிவகுத்தனர். தனது அரை சதத்தின் பின்னர் துடுப்பாட்ட வேகத்தை கூட்டிய குவிண்டன் டி கொக் ரங்கன ஹேரத்தின் சுழல் பந்து வீச்சில் சிக்குண்டு LBW முறையில் ஆட்டமிழந்தார்.
குவிண்டன் டி கொக்கின் ஆட்டமிழப்பை தொடர்ந்து தென்னாபிரிக்க அணித்தலைவர் டு ப்லெசிஸ் ஆட்டத்தினை நிறுத்தி, இலங்கை அணியை துடுப்பாடுமாறு பணித்தார்.
தென்னாபிரிக்க அணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஸ்டெபான் குக் 117 ஓட்டங்களையும் குயின்டன் ட் கொக் 69 ஓட்டங்களையும், ட் ப்லெசிஸ் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால், நுவன் ப்ரதீப், துஷ்மந்த சமீர மற்றும் ரங்கன ஹேரத் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இலங்கை அணிக்கு 488 ஓட்டங்கள் வெற்றி இலக்காக தென்னாபிரிக்க அணியினால் நிர்ணயிக்கப்பட்டது. உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஒரு அணியினால் போட்டியை வெல்வதற்கு 4ஆவது இன்னிங்சுக்காக பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாக 418 ஓட்டங்களே இதுவரை பதிவாகியுள்ளது.
முதல் இன்னிங்சில் விட்ட தவறுகளால் இலங்கை அணி மிகப்பெரிய தோல்வியொன்றை அடைய கூடிய நிலையே காணப்பட்டது. எனினும், இன்றைய நாள் தமது இராண்டாம் இன்னிங்சுக்காக களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன மற்றும் கௌஷல் சில்வா முதல் விக்கெட்டுக்காக 87 ஓட்டங்களை தங்களுக்கிடையே பகிர்ந்து கொண்டனர்.
திமுத் கருணாரத்ன 43 ஓட்டங்களை பெற்றிருந்த போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சில் பிரகாசிக்கத் தவறிய குசல் பெரேரா இம்முறையும் 6 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.
எனினும், முதல் இன்னிங்சில் ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்த குசல் மென்டிஸ் சிறப்பாக துடுப்பாடி 58 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் ரபடாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அதே நேரம் சிறப்பாக துடுப்பாடிய அணித்தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் தனது 26ஆவது அரை சதத்தினை இன்று பூர்த்தி செய்தார். ஆனால், மறுமுனையில் துடுப்பாடிய தினேஷ் சந்திமாலின் ஒரு பிடியை தவறவிட்டிருந்த தென்னாபிரிக்க களத்தடுப்பு வீரர்கள், இரண்டாவது தடவை பிடியை சிறப்பான முறையில் எடுத்து தினேஷ் சந்திமாலை ஆட்டமிழக்கச் செய்தனர்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய தனஞ்சய டி சில்வா மற்றும் எஞ்சலோ மெத்திவ்ஸ் இணைந்து நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.
இன்றைய நாள் ஆட்ட நிறைவின் போது இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இன்னும் 5 விக்கெட்டுகள் கையிருப்பில் 248 ஓட்டங்ளை பெற்றால் வெற்றி அல்லது தென்னாபிரிக்க அணியிடம் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் போட்டியை சமநிலை செய்வதா என்ற இக்கட்டான நிலையில் இலங்கை அணி நாளை ஐந்தாவதும் இறுதியுமான நாளை தொடரவுள்ளது.