சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த 11 ஆம் திகதி ஆரம்பமானது. போட்டியில் தென்னாபிரிக்க அணி 107 ஓட்டங்களால் வெற்றி பெற்று 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.
போட்டித்தடை விதிக்கப்பட்ட தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டு ப்ளெசிஸிற்கு பதிலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டீன் எல்கர் அணிக்கு தலைமை தாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துடுப்பாட்ட வீரர் சுபைர் ஹம்ஸா டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வீரராக இப்போட்டியில் இணைக்கப்பட்டிருந்தமை போட்டியின் விஷேட அம்சமாகும்.
தென்னாபிரிக்காவின் வெற்றியால் இலங்கைக்கு தரவரிசையில் முன்னேற்றம்
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி மர்க்ரம் மற்றும் அம்லா ஆகியோர் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 126 ஓட்டங்கள் பெற்றிருந்த போது மர்க்ரம் 90 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அம்லா 41 ஓட்டங்களுடனும் டி ப்ரைய்ன் மற்றும் அறிமுக வீரர் சுபைர் ஹம்ஸா ஆகியோர் முறையே 49 மற்றும் 41 ஓட்டங்களை பெற்றிருந்தனர். எனினும் பின்வரிசை வீரர்களின் பங்களிப்பு போதியளவு கிடைக்கப் பெறாத காரணத்தால் தென்னாபிரிக்க அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 262 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
பந்து வீச்சில் பஹீம் அஷ்ரப் மூன்று விக்கெட்டுகளையும் மொஹமட் ஆமிர் , மொஹமட் அப்பாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.
பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய பாகிஸ்தான் அணி 6 ஓட்டங்களுக்கு முதல் இரண்டு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. எனினும் முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் போது இரண்டு விக்கெட்டுகளை இழந்து 17 ஓட்டங்களை பெற்றிருந்தது.
போட்டியின் இரண்டாவது நாளில் தமது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி தென்னாபிரிக்க வீரர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய போதும் பாபர் அசாம் மற்றும் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் ஆகியோர் வேகமாக ஓட்டங்களை குவித்தனர். எவ்வாறாயினும் அவர்களுக்கு பாரிய ஓட்டங்களைப் பெற்று கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இறுதியில் பாகிஸ்தான் அணி 185 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணியை விட 77 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.
துடுப்பாட்டத்தில் சப்ராஸ் அஹமட் 50 ஓட்டங்கள் மற்றும் பாபர் அசாம் பெற்ற 49 ஓட்டங்கள் மற்றும் இமாம் உல் ஹக் பெற்றுக் கொண்ட 43 ஓட்டங்களை தவிர ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் டுவான் ஒலீவியர் மீண்டும் ஒருமுறை சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். ஏனைய விக்கெட்டுகளை வேர்னன் பிலந்தர் மற்றும் ரபாடா ஆகியோர் தமக்கிடையே பகிர்ந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
77 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி 93 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த போது 6 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த ஹஷிம் அம்லா மற்றும் டி கொக் ஜோடி அணியை சரிவிலிருந்து. இருவரும் இணைந்து 102 ஓட்டங்களை பெற்றிருந்த போது அம்லா 71 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி தனது நான்காவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்த டி கொக் 129 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த ஓவர்களில் ஏனைய விக்கெட்டுகளையும் இழந்து 303 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணிக்கு 381 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ஐசிசி விதிமுறையை மீறி பந்துவீசுவதாக இந்திய வீரர் மீது குற்றச்சாட்டு
381 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக் கொண்ட பாகிஸ்தான் அணி நேற்றைய (13) மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்கள் பெற்றிருந்தது.
7 விக்கெட்டுகள் கைவசம் இருந்த நிலையில் மேலதிகமாக இன்னும் 228 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இன்றைய (14) நான்காம் நாளில் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி மேலதிகமாக 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 273 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 107 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக அசாட் ஸபீக் 65 ஓட்டங்களையும் சதாப் கான் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணியின் ஒலீவியர் மற்றும் ரபாடா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தனர். இரண்டாம் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய தென்னாபிரிக்க வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டைய்ன் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியிலில் 433 விக்கெட்டுக்களுடன் முதல் பத்து இடங்களுக்கு முன்னேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வெற்றியின் மூலம் தென்னாபிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றி வைட் வொஷ் செய்துள்ளது. போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாபிரிக்க அணியின் குயின்டன் டி கொக் தெரிவானதுடன் டெஸ்ட் தொடரில் மொத்தமாக 24 விக்கெட்டுகளை வீழ்ததியிருந்த தென்னாபிரிக்க வேகப் பந்து வீச்சாளர் டுவான் ஒலீவியருக்கு தொடர் நாயகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
தென்னாபிரிக்கா (முதல் இன்னிங்ஸ்) – 262 (77.4) – மர்க்ரம் 90, டி ப்ரைய்ன் 49, பஹீம் அஷ்ரப் 57/3, மொஹமட் அமிர் 36/2
பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ்) – 185 (49.4) – சப்ராஸ் அஹமட் 50, பாபர் அசாம் 49, ஒலீவியர் 51/5, பிலந்தர் 43/3
தென்னாபிரிக்கா (இரண்டாவது இன்னிங்ஸ்) – 303 (80.3) – டி கொக் 129, அம்லா 71, சதாப் கான் 41/3, பஹீம் அஷ்ரப் 42/3
பாகிஸ்தான் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 273 (65.4) – அசாட் ஸபீக் 65, சதாப் கான் 47*, ஒலீவியர் 74/3, ரபாடா 75/3
முடிவு – தென்னாபிரிக்க அணி 107 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<