ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடித்தது பாகிஸ்தான்

250

தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று (6) நடைபெற்று முடிந்த மூன்றாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 27 ஓட்டங்களால் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்த நிலையில் இந்தப் போட்டிக்கு களமிறங்கிய தென்னாபிரிக்க அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியிருந்தது.

தென்னாபிரிக்க அணியின் புதிய தலைவராகிறார் டேவிட் மில்லர்

பாகிஸ்தான் அணியுடனான எஞ்சியுள்ள இரண்டு…

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை குவித்திருந்தது. துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக மொஹமட் ரிஸ்வான் (26) ஆசிப் அலி (25) பாபர் அசாம் (23) ஆகியோர் தமது பங்களிப்புக்களை வழங்கியிருந்ததுடன் இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய சதாப் கான் 8 பந்துகளில் 22 ஓட்டங்களை பெற்று தமது அணியை மேலும் வலுப்படுத்தியிருந்தார். பந்து வீச்சில் பியுரன் ஹென்ரிக்ஸ் மற்றும் க்ரிஸ் மொர்ரிஸ் ஆகியோர் முறையே 4 மற்றும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.  

பாகிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சு மிகவும் சவாலாக இருந்ததனால் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்கை அடைவது என்பது  அசாத்தியமான ஒரு விடயமாக இருந்தது. எனவே, தமது 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற அவ்வணி 27 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் க்ரிஸ் மொர்ரிஸ் சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதலாவது அரைச்சதம் கடந்து ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் வேன் டேர் டஸ்ஸன் 41 ஓட்டங்களையும் பெற்றிருந்ததை தவிர ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடனே ஆட்டமிழந்தனர். பந்து விச்சில் மொஹமட் ஆமிர் 3 விக்கெட்டுகளையும் சதாப் கான் மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

இலங்கை மகளிருக்கு தென்னாபிரிக்காவில் வைட்வொஷ் தோல்வி

தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது மற்றும் இறுதி டி-20..

இச்சுற்றுப்பயணத்தில் தென்னாபிரிக்கா மற்றும்  பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை 3-0 எனவும் ஒருநாள் தொடரை 3-2 என்ற அடிப்படையிலும் டி20 தொடரை 2-1 எனவும் தென்னாபிரிக்க அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக சதாப் கான் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் தொடரின் நாயகனாக டேவிட் மில்லர் தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் அணி – 168/9 (20)மொஹமட் ரிஸ்வான் 26, ஆசிப் அலி 25, பியுரன் ஹென்ரிக்ஸ் 14/4, க்ரிஸ் மொர்ரிஸ் 27/2

தென்னாபிரிக்கா அணி – 141/9 (20)க்ரிஸ் மொர்ரிஸ் 55*, வேன் டேர் டஸ்ஸன் 41, மொஹமட் ஆமிர் 27/3, சதாப் கான் 34/2, பஹீம் அஷ்ரப் 38/2

முடிவு: பாகிஸ்தான் அணி 27 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<