பாகிஸ்தான் கிரிகெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் மூன்று சர்வதேச டி20 போட்டிகள் என முழுமையான தொடரில் விளையாடுவதற்காக தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடந்த 26 ஆம் திகதி பாக்ஸிங் டே (Boxing Day) போட்டியாக ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளால் இலகுவாக வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
தென்னாபிரிக்க அணி சார்பாக அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்திய டேல் ஸ்டெய்ன்
தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெய்ன்…
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தென்னாபிரிக்க அணியின் வேகப் பந்து வீச்சில் தடுமாற்றம் கண்ட பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இறுதியில் பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. தென்னாபிரிக்க வீரர்களின் துல்லியமான பந்து வீச்சுக்கு மத்தியிலும் அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு சிறப்பாக பங்காற்றிய பாபர் அஸாம் 71 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்திருந்ததுடன் அஸார் அலி 36 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். சிறப்பாக பந்து வீசி டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த பந்து வீச்சு பிரதியை பதிவு செய்த டுவான் ஒலீவியர் 37 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மேலும் ககிசோ ரபாடா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
முதலாவது இன்னிங்சில் பகர் ஸமானின் விக்கெட்டை கைப்பற்றிய தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரரும் வேகப் பந்து வீச்சாளருமான டேல் ஸ்டைய்ன், முன்னாள் அணித்தலைவரும் வேகப் பந்து வீச்சாளருமான ஷோன் பொல்லக்கின் சாதனையை முறியடித்து டெஸ்ட் போட்டிகளில் தென்னாபிரிக்க அணி சார்பாக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பெருமையை தனதாக்கிக்கொண்டார்.
வேகப் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதால் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சும் தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தும் விதமாக அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது. தமது முதலாவது இன்னிங்சிற்காக விளையாடிய தென்னாபிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை பெற்றிருந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளில் தமது முதலாவது இன்னிங்சைத் தொடர்ந்த தென்னாபிரிக்க அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்கள் பெற்று பாகிஸ்தான் அணியை விட 42 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது.
துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க அணி சார்பாக தெம்பே பவுமா 53 ஓட்டங்களையும் குயிண்டன் டி கொக் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தனர். பந்து வீச்சில் மொஹமட் அமிர் மற்றும் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
42 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பித்த பாகிஸ்தான் அணி இரண்டாவது நாளின் தேநீர் இடைவேளைக்காக போட்டி நிறுத்தப்படும் போது ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 100 ஓட்டங்கள் பெற்றிருந்தது. எனினும் அதன் பின்னர் பாகிஸ்தான் அணியை மீண்டுமொரு முறை தனது வேகத்தால் மிரட்டிய ஒலீவியர் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி பாகிஸ்தான் அணியை 190 ஓட்டங்களுக்கு சுருட்டினார். பந்து வீச்சில் ஒலீவியர் தவிர ககிசோ ரபாடா மூன்று விக்கெட்டுகளையும் டேல் ஸ்டைய்ன் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர். ரபாடா கைப்பற்றிய மூன்று விக்கெட்டுகள் மூலம் நடப்பாண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 52 விக்கெட்டுக்களுடன் முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக ஷான் மசூத் 65 ஓட்டங்களையும் இமாம் உல் ஹக் 57 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
ஸ்டீவ் ஸ்மித்தின் தடையை நீக்கிய பங்களாதேஷ் கிரிக்கெட் சபை
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், பங்களாதேஷ்…
வெற்றி பெறுவதற்கு 149 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் இன்றைய (28) மூன்றாம் நாளில் தமது இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் முதலாவது விக்கெட் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் வீழ்த்தப்பட்டிருந்த போதும் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இரண்டாவது விக்கெட்டுகாக இணைந்த டீன் எல்கர் மற்றும் ஹஷிம் அம்லா ஜோடி நிதானமாக 119 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதன் மூலம் தென்னாபிரிக்க அணியின் வெற்றி உறுதியானது. எல்கர் 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ஹஷிம் அம்லா கடைசிவரை ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் என மொத்தமாக பாகிஸ்தான் அணியின் 11 விக்கெட்டுகளை சாய்திருந்த தென்னாபிரிக்க பந்து வீச்சாளர் டுவான் ஒலீவியர் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ்) – 181 (47) – பாபர் அசாம் 71, அஸார் அலி 36, டுவான் ஒலீவியர் 37/6, ககிசோ ரபாடா 59/3
தென்னாபிரிக்கா (முதல் இன்னிங்ஸ்) – 223 (60) – டெம்பா பவுமா 53, டி கொக் 45, மொஹமட் அமிர் 62/4, ஷஹீன் அப்ரிடி 64/4
பாகிஸ்தான் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 190 (56) – ஷான் மசூத் 65, இமாம் உல் ஹக் 57, டுவான் ஒலீவியர் 59/5, ககிசோ ரபாடா 47/3
தென்னாபிரிக்கா (இரண்டாவது இன்னிங்ஸ்) – 151/4 (Target 149) – ஹஷிம் அம்லா 63* எல்கர் 50, ஷான் மசூத் 6/1
முடிவு – தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க