மொயின் அலியின் ஹட்ரிக்குடன் தென்னாபிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து

1492

தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 239 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இரு நாடுகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.

லண்டன், ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 492 என்ற இமாலய வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணியின் கடைசி மூன்று விக்கெட்டுகளையும் மொயின் அலி ஹட்ரிக் முறையில் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 1938ஆம் ஆண்டுக்கு பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் ஹட்ரிக் பெறுவது இது முதல்முறையாகும்.

கடந்த வியாழக்கிழமை (27) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சுக்கு 353 ஓட்டங்களை பெற்றது. அதிரடி வீரர் பென் ஸ்ட்ரோக் 4 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகளை விளாசி பெற்ற 112 ஓட்டங்களும் அணிக்கு வலுச் சேர்த்தது. ஆரம்ப வீரர் அலஸ்டயர் குக் 88 ஓட்டங்களைப் பெற்றார்.

தென்னாபிரிக்க அணி சார்பில் மோர்னி மோர்கல் மற்றும் ககிசோ ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 58.4 ஓவர்களில் 175 ஓட்டங்களுக்கே சுருண்டது. டெம்பா பவுமா மாத்திரம் அரைச் சதம் ஒன்றை எடுத்தார். இங்கிலாந்து அணிக்காக தனது கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் ரோலான்ட் ஜோன்ஸ் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 278 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் ஓட்டங்களை குவித்து தென்னாபிரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்தது. இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 318 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அணித் தலைவர் ஜோ ரூட் (50), டொம் வெஸ்ட்லி (59) மற்றும் ஜொன்னி பயர்ஸ்டோ (63) ஆகியோர் அரைச்சதம் எடுத்தனர்.

ஆட்டத்தின் நான்காவது நாளான ஞாயிறன்று தென்னாபிரிக்க அணி 492 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தபோதும் அந்த அணி வீரர்கள் நின்றுபிடித்து அடத் தவறினர். ஆரம்ப வீரர் டீன் எல்கர் ஒருமுனையில் விக்கெட்டை காத்துக்கொண்டிருக்க மறுமுனை விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்தன. தென்னாபிரிக்க அணி 52 ஓட்டங்களில் முதல் நான்கு விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

கடைசி நாளான திங்கட்கிழமை தென்னாபிரிக்க அணி தனது ஆட்டத்தை தொடர்ந்தபோதும் அவ்வணி வீரர்களால் விக்கெட்டுகளை காத்துக்கொள்ள முடியவில்லை.

தென்னாபிரிக்க அணி 252 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், பந்துவீச வந்த மொயீன் அலி 136 ஓட்டங்களுடன் ஆடிவந்த எல்கரின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்பின் அந்த ஓவரை பூர்த்தி செய்த அவர் தனது அடுத்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன்படி தென்னாபிரிக்க அணி 252 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை சந்தித்தது. மொயின் அலி மொத்தம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டி மன்செஸ்டரில் வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. தென்னாபிரிக்க அணி தொடர் தோல்வியை தவிர்க்க இந்த போட்டியில் வெல்வது கட்டாயமாகும்.