கேப்டவுன், நியூலன்ட்ஸில் நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் சர்வதேச போட்டிகளை கொண்ட தொடரின் நான்காவது போட்டியில், தென்னாபிரிக்க அணி 40 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரை 4-0 என முன்னிலை வகிக்கிறது
ஏற்கனவே, 5 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரை கைப்பற்றிய நிலையில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணித்தலைவர் ஏபி டி வில்லியர்ஸ் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
இன்றைய தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கடந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி சார்பாக 26 ஓட்டங்கள் மற்றும் 1 விக்கெட்டினை கைப்பற்றியிருந்த கிறிஸ் மொரிசுக்கு மாற்றீடாக வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பார்னெல்லின் சொந்த மைதானம் என்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
அதேநேரம் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் இலங்கை அணியால் 200 ஓட்டங்களை கூட எட்ட முடியாதிருந்த நிலையில் தினேஷ் சந்திமாலுக்கு பதிலாக விக்கெட் காப்பாளர் பொறுப்பை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல ஏற்றுக்கொண்ட அதேவேளை தென்னாபிரிக்க மண்ணில் அறிமுகப்படுத்தப்பட்ட சந்துன் வீரக்கொடி நடுக்கள துடுப்பாட்ட வரிசையை வலுப்படுத்தும் நோக்கில் இணைக்கப்பட்டிருந்தார். அதே நேரம் சுரங்க லக்மாலுக்கு பதிலாக நுவன் குலசேகர உள்வாங்கப்பட்டிருந்தார்.
அத்துடன் கடந்த போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்த டுவைன் ப்ரிடோரியஸ் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டார். அதேநேரம் சகலதுறை ஆட்டக்காரர் அன்டில் ப்ஹளுவையோவுக்கு பதிலாக சுழல் பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி இந்த போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டார்,
அந்த வகையில் முதலில் துடுப்பாடக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி இதற்கு முன்தாக 2001ஆம் கென்யா அணியுடனான போட்டியில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 354 ஓட்டங்களை பெற்றிருந்த சாதனையை முறியடித்து டுப் பிளிஸ்சின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்ட 185 ஓட்டங்களின் உதவியுடன் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 367 ஓட்டங்களை குவித்தது.
அதேநேரம் குவிண்டான் டி கொக் குறித்த தொடரின் முதலாவது அரை சதத்தை பூர்த்தி செய்தார். தென்னாபிரிக்க அணித்தலைவர் ஏபி டி வில்லியர்ஸ் 64 ஓட்டங்களை விளாசி தனது பொறுப்பை நிறைவேற்றினார். அவரை தொடர்ந்து களமமிறங்கிய பர்ஹான் பெஹார்டின் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
367 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இலங்கை அணி, முதல் விக்கெட்டுக்காக 16 ஓவரில் 139 ஓட்டங்களை விளாசி தென்னாபிரிக்க அணிக்கு அதிர்ச்சியளித்தது. எனினும், டுவைன் ப்ரிடோரியஸ் பந்து வீச்சில் சிக்குண்ட நிரோஷன் திக்வெல்ல 58 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அதேநேரம் அணித் தலைவர் உபுல் தரங்க 11 பவுண்டரிகள் மற்று 7 சிக்ஸ்சர்கள் உள்ளடங்கலாக 119 ஓட்டங்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிகையை உயர்த்தினார். மேலும் சந்துன் வீரக்கொடி தனது திறமைகளை வெளிப்படுத்தி 58 ஓட்டங்களை பெற்று அனைவரதும் கவனத்தை ஈர்த்தார்.
எனினும், தனஞ்சய டி சில்வா உள்ளடங்கலாக ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தததால் இலங்கை அணி 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் 327 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
சிறப்பாக பந்து வீசிய வெய்ன் பார்னெல் 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .
தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் டு ப்லெசிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இத்தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி செஞ்சுரியனில் நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
தென்னாபிரிக்கா : 367/5(50) – டு ப்லெசிஸ் 185, ஏபி டி வில்லியர்ஸ் 64, குவிண்டன் டி கொக் 55, ஜேபி டுமினி 20, பர்ஹான் பெஹார்டின் 36*, லஹிறு குமார 73/2 , சசித் பத்திரன 55/2, லஹிறு மதுஷங்க 69/1
இலங்கை : 327 (48.1) – உபுல் தரங்க 119, நிரோஷன் திக்வெல்ல 58, சந்துன் வீரக்கொடி 58, குசல் மெண்டிஸ் 29, தனஞ்சய டி சில்வா 05, அசேல குணரட்ன 38, சசித் பத்திரண 01, இம்ரான் தஹிர் 76/2, வெய்ன் பார்னெல் 58/4, ககிசோ றபடா 50/2, டுவைன் ப்ரிடோரியஸ் 55/2
போட்டி முடிவு – தென்னாபிரிக்க அணி 40 ஓட்டங்களால் வெற்றி