5 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரை தென்னாபிரிக்க அணி 3-0 அடிப்படையில் வெற்றியீட்டி முன்னிலை வகிக்கிறது. அத்துடன் இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி 200 ஓட்டங்களை கூட எட்ட முடியாத நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக 5 தடவைகள் நியூ வாண்டரர்ஸ் கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நிலையில், 6 ஆவது போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
காயமடைந்த டேவிட் மில்லருக்கு பதிலாக பர்ஹான் பெஹார்டினும் அதே நேரம் வெய்ன் பார்னெல்லுக்கு பதிலாக தனது நான்காவது ஒருநாள் போட்டிக்காக வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர் டுவைன் ப்ரேடோரியஸ்சும் இன்றைய போட்டிக்காக களமிறக்கப்பட்டனர். மேலும் இந்த ஒருநாள் போட்டியில் விளையாடிய தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் டு ப்ளெசிசுக்கு இது 100ஆவது ஒருநாள் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் இலங்கை அணிக்காக இரண்டு அறிமுக வீரர்கள் களமிறக்கப்பட்டனர். மிதவேகப் பந்துவீச்சாளர் மற்றும் சகலதுறை ஆட்டக்காரரான லஹிறு மதுஷங்க மற்றும் கடந்த டெஸ்ட் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த 19 வயதான வேகப்பந்து வீச்சாளர் லஹிறு குமார ஆகியோர் இணைக்கப்பட்டனர். நுவன் குலசேகர மற்றும் சுழல்பந்து வீச்சாளார் சதுரங்க டி சில்வா ஆகியோருக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டது.
அந்த வகையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 39.2 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. நிரோஷன் திக்வெல்ல மற்றும் அணித் தலைவர் உபுல் தரங்க இணைந்து முதல் விக்கெட்டுக்காக 60 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். அணித்தலைவர் உபுல் தரங்க 31 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ககிசோ ரபடாவின் பந்து வீச்சில் டுவைன் ப்ரேடோரியஸ்சிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
இடைநடுவே எங்கிருந்தோ பறந்து வந்த தேனீக்களால் போட்டிக்கு சுமார் 65 நிமிட நேர தடை ஏற்பட்டது. அதன் பின்னர் மீண்டும் தொடர்ந்த போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்ட வீரர்களை விட பறந்து வந்த தேனீக்கள் அதிகளவான நேரம் களத்தில் இருந்ததை காணகூடியதாக இருந்தது. தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து சென்றனர். நிரோஷன் திக்வெல்ல 7 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 74 ஓட்டங்களை இலங்கை அணி சார்பாக பெற்றுக்கொண்ட போதிலும் 10.4 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
சிறப்பாக பந்து வீசிய டுவைன் ப்ரேடோரியஸ் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அதே வேளை இம்ரான் தஹிர், ககிசோ ரபாடா மற்றும் அண்டில் ப்ஹலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதனையடுத்து இலகுவான ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து அணித் தலைவர் எபி டி வில்லியர்ஸ்ஸின் 5 பவுண்டரிகள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 60 ஓட்டங்களின் உதவியுடன் 18 ஓவர்கள் எஞ்சிய நிலையில் 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில், ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய லஹிறு குமார மற்றும் லஹிறு மதுஷங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
Photos: Sri Lanka v South Africa | 3rd ODI
Photos of the Sri Lanka v South Africa | 3rd ODI 2017
மேலும் இந்த போட்டியில் மார்பு புற்று நோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் நோக்கில் தென்னாபிரிக்க அணி இளஞ்சிவப்பு நிறத்திலான உடைகளை அணிந்து விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக இலங்கை அணி இந்த மைதானத்தில் அதிரடி துடுப்பாட்ட வீரர் திலகரத்ன தில்ஷான் தலைமையில் 2012ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் குமார் சங்கக்காரவின் 102 ஓட்டங்களின் உதவியுடன் 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றிருந்தமை நினைவு கூறத்தக்கது.
இத்தொடரின் நான்காவது ஒருநாள் போட்டி பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி கேப் டவுனில் நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை அணி : 163 (39.2) – நிரோஷன் திக்வெல்ல 74, உபுல் தரங்க 31, சசித் பத்திரன 18, தனஞ்சய டி சில்வா 16, டுவைன் ப்ரேடோரியஸ் 19/3, ககிசோ ரபாடா 39/2, இம்ரான் தஹிர் 21/2, அண்டில் ப்ஹலுக்வாயோ 26/2
தென்னாபிரிக்க அணி : 164/3 (32) – ஹஷிம் அம்லா 34, குவிண்டன் டி கொக் 8, டு ப்லெஸ்சிஸ் 24, எபி டி வில்லியர்ஸ் 60*, ஜேபி டுமினி 28*, லஹிறு குமார 49/1, லஹிறு மதுஷங்க 15/1